செய்திகள்

அதிக விக்கெட் பட்டியலில் மிஸ்ரா 2-வது இடம்

8 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதின. நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப்பை 111 ரன்களில் சுருட்டி டெல்லி அணி முதல் வெற்றியை பெற்றது.
டெல்லி சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா நேற்று எடுத்த 4 விக்கெட்டுகளையும் சேர்த்து அவரது ஒட்டுமொத்த ஐ.பி.எல். விக்கெட் எண்ணிக்கை 116 ஆக (100 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஹர்பஜன்சிங், பியுஷ் சாவ்லா (தலா 112 விக்கெட்) ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு அமித் மிஸ்ரா 2-வது இடத்தை பிடித்துள்ளார். மும்பை வீரர் மலிங்கா 143 விக்கெட்டுகளுடன் (98 ஆட்டம்) முதலிடத்தில் இருக்கிறார்