செய்திகள்

நல்ல வாய்ப்பை வீணடிக்க வேண்டாம்: வீடமைப்புத் திட்டம் குறித்து ரணிலுக்கு சம்மந்தன் கடிதம்

“அரசியல் இலாபங்களுக்காக வடக்கு கிழக்கு மக்களின் உண்மையான தேவைகளை புறக்கணித்து இப்படியான திட்டங்களை முன்னெடுப்பதானது, அந்த அர்ப்பணிப்பை செயற்ப்படுத்த முடியாத ஒரு நிலைமையையே எடுத்துக்காட்டும். தமிழ் மக்களின் சார்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலும் இந்த நல்ல வாய்ப்பை வீணடிக்க வேண்டாம் என நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்” பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைததுள்ள கடிதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

வடக்கில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டம் தொடர்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவின் ஏகோபித்த தீர்மானத்தின் விளைவாக மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் நிலவும் மிகவும் பாரதூரமான விடயங்களை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்

வடக்கு கிழக்கில் வீட்டுத் திட்டத்திற்கான தேவையானது மிகவும் பாரதூரமானது. கணிப்பீடுகளின் பிரகாரம் யுத்த அழிவிற்கு பின்னர் வடக்கு கிழக்கில் வீடுகளின் தேவையை பூர்த்தி செய்வதற்கு 137,000 வீடுகள் தேவையாக உள்ளன. இந்த பிரச்சினையானது நிவிர்த்தி செய்யப்பட வேண்டும். எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பானது இத் தேவையை தேவையை நிவிர்த்தி செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அரசாங்கமானது முன்னெடுத்திருக்கும் யுத்ததிதினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்கும் திட்டத்தினை வரவேற்கிறது. எனினும் இத்திட்டம் தொடர்பில் நிலவும் பாரதூரமான விடயங்கள் தொடர்பில் சிவில் சமூக ஆர்வலர்கள், தொழிற்துறை சார்ந்தோர், மற்றும் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக முன்வைக்கும் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட கூடியவை அல்ல. இவற்றுள், மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் மேற்குறிப்பிட்ட வீடுகளின் பொருத்தம் தொடர்பிலான நிபுணர்களின் அறிக்கையும் உள்ளடங்கும். பின்வருவன இத்திட்டம் தொடர்பில் எழுப்பப்பட்டுள்ள மிக பிரதானமான விடயங்களாகும்.

a). Arcellor – Mittal கட்டுமான நிறுவனத்தை தெரிந்தெடுப்பதர்க்கான கேள்விமனு நடைமுறை தொடர்பில் எழுப்பப்படும் கேள்விகள்.

மேலே குறிப்பிடப்பட்ட கேள்விமனு ஒப்பந்தம் தொடர்பில் காணப்பட்ட பல்வேறு ஒழுங்கற்ற நடைமுறைகள் தொடர்பில் ஏராளமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றுள் ஒன்றாக, இந்த ஒப்பந்தத்தை குறிப்பிட்ட நிறுவனத்திற்க்கு வழங்குவதற்கான தீர்மானமானது கேள்விமனு கோரல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அதாவது 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே தீர்மானிக்கப்பட்டு விட்டது.

b). வீடுகளின் நிலைவரத்தன்மை அல்லது ஆயுட்காலம் தொடர்பில் உள்ள கரிசனைகள்

இந்த விடயம் தொடர்பில் பல்வேறு கரிசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நிபுணர்களின் கருத்துப்படி முன்மொழியப்பட்டுள்ள இந்த பொருத்து வீடுகள் 10 வருடங்களுக்கு மேல் தாக்கு பிடிக்காது என்பதாகும். அது மாத்திரமன்றி தற்போது அமைக்கப்பட்டுள்ள மாதிரி வீடுகள் ஏலவே அமைத்து ஒரு சில வாரங்களுக்குள்ளேயே பொருத்துக்கள் பிரிய ஆரம்பித்து விட்டது

யுத்ததிதினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களிற்கு வீடு என்பது வெறுமனே ஒரு உறைவிடம் அல்ல, மாறாக அது அவர்களது கலாச்சாரத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாத ஒன்றாகும். வீடானது ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு கைமாறுகின்ற ஒன்றாகும். என்றாவது ஒரு நாள் தமது பிள்ளைகளுக்கு கொடுப்பதற்கென்றே பெற்றோர்கள் வீடுகளை அமைக்கிறார்கள். எனவே தமிழ் மக்களை பொறுத்தவரை, வீடென்பது அவர்களது கலாச்சாரம் வரலாறு,மற்றும் பாரம்பரியத்தோடு பிணைந்தது, மாத்திரமன்றி பல தலைமுறை வரை நிலைத்துநிற்க வேண்டிய ஒன்றாகவே காணப்படுகின்றது. எனவே வீட்டின் ஆயுட்காலம் என்பது முக்கியமான கரிசனையாகும்

c). சுற்றுச் சூழலுக்கு ஒவ்வாத வீடுகள்

முன்மொழியப்பட்டுள்ள வீடுகள் கற்களினாலே கட்டப்படாமல் எஃகு கொண்ட பொருத்துக்களினாலேயே கட்டப்படுகின்றது. அதிக உஷ்ணமான இலங்கை போன்ற நாட்டிற்கு பொருத்தமற்ற ஒன்றாகும். இது மேலும் உஷ்ணத்தன்மையை அதிகரிக்க செய்கின்றதாகவே அமையும்.

c). ஒரு வீட்டினது செலவு

தற்போது உள்ள திட்டத்தின் படி, ஒரு வீட்டிற்கான செலவாக 2.1 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகையானது, சூழலிற்கு ஏற்ற அதிக ஆயுளைக் கொண்ட கற்களினாலே அண்மையில் இந்திய அரசினாலே வடக்கிலே கட்டப்பட்ட 50,000 வீடுகளுக்கான செலவிலும் பார்க்க இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமானதாகும். இது மிக முக்கியமான ஒரு கரிசனையாகும், ஏனெனில் 130,000 வீடுகள் தேவைப்படுகின்ற சூழ் நிலையில் அரசாங்கமானது அதிக செலவில் அத்தேவையின் அறைவாசியையே பூர்த்தி செய்கிறது.

d). இத்திட்டம் செயற்படுத்தப்படும் முறை ( உள்ளூர் வேலையாட்களை வேலைக்கமர்த்தல்)

வீட்டுத் தேவையை போலவே வடக்கிலே உள்ள இன்னுமொரு பிரச்சினை வேலையில்லா பிரச்சினையாகும். இந்த நிலைமையில் உள்ளூரிலே காணப்படும் தொழிலாளிகளுக்கு இந்த திட்டத்திலே வேலைகள் வழங்கப்படுவதனை உறுதி செய்ய வேண்டிய தேவைப்பாடும் உள்ளது.

எனவே அரசாங்கமானது இந்த திட்டம் தொடர்பில் கேள்வியோடே கூடிய ஒரு மீளாய்வை செய்து இந்த திட்டமோ அல்லது வட கிழக்கிலே காணப்படும் வீட்டு தேவைகளை நிவிர்த்தி செய்யும் வேறு எந்த திட்டத்தினையோ நடைமுறைபடுத்தும் போது, மேலே குறிப்பிடப்பட்டுள்ள கரிசனைகளை சரியான விதத்திலே கையாள வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஆணித்தரமாக பரிந்துரை செய்கின்றது.
வடக்கு கிழக்கிலே காணப்படும் வீட்டு தேவையை பூர்த்தி செய்ய அரசாங்கம் எடுத்துள்ள பிரயத்தனமானது வரவேற்க்கதக்கது. ஆயினும் அந்த முயற்ச்சிகள் மக்களது தேவையையும் கலாச்சாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது மாத்திரமன்றி, செயற்ப்படுத்தப்படும் திட்டங்களின் மூலம் நீண்ட காலத்திலே சமூகத்திலே ஏற்ப்படுத்தக்கூடிய கூடிய பின் விளைவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படியாக அமைகின்ற போது மாத்திரமே இப்படியான முயற்சிகள் நல்லிணக்கத்திற்கு பக்க பலமாக அமையும். மாறாக இப்படியான முயற்ச்சிகள் ஊழலின் பக்கம் சாய்ந்து அதிகாரம் படைத்த ஒரு சிலருக்கு மாத்திரம் நன்மை பயக்கின்றதாக அமையக்கூடாது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தமக்குள்ள அர்ப்பணிப்பை பகிரங்கமாக இந்த அரசாங்கம் வெளிக்காட்டியுள்ளது. அந்த வகையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு உதவும் முகமான அவர்களது இல்லங்களை மீளக் கட்டியெழுப்பும் இப்படியான திட்டங்கள் மிக முக்கியமான நல்ல சந்தர்ப்பங்களாகும். எனினும் அரசியல் இலாபங்களுக்காக வடக்கு கிழக்கு மக்களின் உண்மையான தேவைகளை புறக்கணித்து இப்படியான திட்டங்களை முன்னெடுப்பதானது, அந்த அர்ப்பணிப்பை செயற்ப்படுத்த முடியாத ஒரு நிலைமையையே எடுத்துக்காட்டும்.

தமிழ் மக்களின் சார்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலும் இந்த நல்ல வாய்ப்பை வீணடிக்க வேண்டாம் என நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். நல்லிணக்கத்திற்கு அரசாங்கம் அர்ப்பனித்துள்ளதாயின் அந்த அர்ப்பணிப்பு செயற்பாடுகளிலே பிரதிபலிக்க வேண்டும். எமது பங்கிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பானது, உண்மையான நல்லிணக்கத்தை கொண்டுவரும் அரசாங்கத்தினது எந்தவொரு முயற்சிக்கும் தனது ஆக்கபூர்வமான பங்களிப்பை தொடர்ந்தும் வழங்கும்.
R-06