செய்திகள்

சிங்கள மயமாகிவரும் கன்னியா வெந்நீரூற்று பகுதி: வரலாறும் திரிக்கப்படுகிறது

மேலே உள்ள படத்தில் நீங்கள் காண்பது திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று கிணறுகளுக்கு செல்வதற்கான நுழைவு அனுமதி சீட்டாகும். இந்த சீட்டில் கன்னியா வெந்நீரூற்று கிணறுகளின் வரலாறு திரிக்கப்பட்டு கன்னியா வெந்நீரூற்று கிணறுகள் அனுராதபர காலத்தில் பயன்படுத்தப்பட்டன என்றும் தொல்லியல் ஆராய்ச்சி சான்றுகளினால் நிறுவப்பட்டபடி இவை பௌத்த மதத்துக்குரிய வளாகத்தில் அமைந்திருக்கின்றன என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நுழைவு அனுமதி சீட்டு இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் விநியோகம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் வரலாற்றின் படி, பத்துத் தலை படைத்த இராவணன் தனது தாயாருக்கு இறுதிக் கிரியைகள் செய்வதற்காக உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தியதாகவும் அந்த இடங்களில் இந்த வெந்நீர் ஊற்று உருவாகியதாகவுமே கூறப்பட்டுவந்தது.

போர் முடிவுற்றதன் பின்னர் தற்போது அதிகமாக உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் ஒரு சுற்றுலாத் தலமாக இந்த கிணறுகள் திகழ்கின்றன. கடந்த சில வருடங்களில் மிகவும் துரிதமான முறையில் இந்த பகுதிகள் சிங்களமயமாக்கப்படும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் தமிழ் மொழியிலும் தகவலை கொண்டிருந்த அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டு, ஆங்கிலம், சிங்களம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே செய்தியைக் கொண்ட அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. இந்த பகுதிகளில் பல புத்த சிலைகள் அமைக்கப்பட்டு அரச மரங்களும் நாட்டப்பட்டுள்ளன.