கடத்தப்பட்ட ராம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் வவுனியா முகாமில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை
திருக்கோவில் தம்பிலுவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கடத்தப்பட்ட புலிகளின், அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம் வவுனியாவிலுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முகாமில் வைத்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவந்திருக்கின்றது.
கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம் , பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் பொறுப்பிலுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவும் இன்று காலை தெரிவித்துள்ளார்.
அம்பாறை திருக்கோயில் தம்பிலுவில் பகுதியில் வைத்து நீல நிற ஜீப் வாகனத்தில் சென்ற பொலிஸ் சீருடையை ஒத்த சீருடை அணிந்த ஒருவரும் மேலும் இருவரும் கடத்திச் சென்றதாக திருக்கோயில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முறைப்பாட்டினை ராமின் மனைவி சுதாராணி மேற்கொண்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம் 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து திருமணம் முடித்த அவர், விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது தடுத்துவைக்கப்பட்டு அவர் விசாரணைக்குள்ளாக்கப்பட்டிருப்பதன் நோக்கம் தெரிவிக்கப்படவில்லை.
R-06




