செய்திகள்

அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த முன் காணிகளை சுவீகரிக்க முனைகிறார்கள்: சிவமோகன் எம்.பி

தமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது. அதற்கான ஆதாரங்கள் உள்ளது. தற்போது இந்த அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த முன் காணிகளை சுவீகரிக்கப் பார்க்கிறார்கள். அதற்கெதிராக போராடவேண்டியுள்ளது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் தாயகம் இல்லத்தில் இன்று (26.04) இடம்பெற்ற தந்தை செல்வா நினைவு தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

1947 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கிய போது ஜின்னா அவர்களால் தனிநாடு கேட்கப்பட்டு பாகிஸ்தான் உதயமாகியது. அதுபோல் இலங்கை சுதந்திரமடைந்த போது தமிழ் மக்களுக்கான தனியாட்சியை பிரித்தானியர் வழங்கியிருக்க வேண்டும். அந்த வரலாற்றுத் தவறைத் தொடர்ந்து எமக்கான சுதந்திரம் கோரி போராடத் தொடங்கினோம். கொடியில் சிங்களவர்களின் அடையாளத்தை சேர்த்துக் கொண்டார்கள். எமது அடையாளத்த்தை சேர்ப்பதற்காக தமிழ்தலைவர்கள் போராடியனார்கள். இறுதியில் சிங்கக் கொடியே பற்ததது. தமிழர்கள் நத்திக் கொடியுடன் பாராளுமன்றம் சென்ற வரலாறு கூட உள்ளது. ஆகையால் சுதந்திரம் முதல் நாம் போராட வேண்டி ஏற்பட்டது. சுதந்திரம் பெற்று 6 மாத்திற்குள்ளேயே 10 லட்சம் இந்திய தமிழர்களின் வாக்குரிமையை பறித்து வாழ்வுரிமையை பறித்தார்கள். அதன்பின் இராஜ தந்திரம் என்ற நரித்தந்திரம் ஊடாக தமிழர்களை உடைத்தார்கள். நாங்கள் அன்றிருந்து அகிம்சைப் போராட்டத்தை நடத்தினோம். அதன் மூலம் தீர்வு எட்டாத நிலையே ஆயுதப் போராட்டத்திற்கு சென்றது.

எமக்கு எதிரான இனப்படுகொலை என்பது இன்று நாம் ஏற்றுக் கொள்கின்ற வசனமாகவுள்ளது. என்னிடம் ஒரு பதிவுள்ளது. 242 தடவைகள் எமது மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இங்கினியாகல கரும்புத் தொழிற்சாலை படுகொலை தான் முதலாவது இனப்படுகொலை. 1983 இல் பாரிய இனப்படுகொலை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஒரு யூலையி குட்டிமணி, தங்கத்துரை உட்பட 37 தமிழர்கள் கொல்லப்பட்டனர். காவலாக இருக்க வேண்டிய இராணுவமே இனப்படுகொலையை அரங்கேற்றியது. 1986 இல் ஒதியமலையில் 36 தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள். அதன்பின் 1985 இல் வல்லைவெளியில் ஒரு தடவை 70 பேரும், ஒரு தடவை 50 பேரும் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த வரலாறுகளின் பின்னர் தான் எங்களது ஆயுதப்போராட்டம் வலுப்பெற்றது. இந்த ஆயுதப்போராட்டம் மௌனித்த நிலையில் கூட தமிழ் மக்களுக்கான சுய கௌரவமான தீர்வு கிடைக்கவில்லை.

இன்று இந்த பாராளுமன்றம் ஒரு அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டிருக்கின்றது. அரசியல் யாப்பு சபையாக மாற்றப்பட்ட பின்னர் அது கேள்விக்குறியாக்கப்பட்டு படுதோல்வி அடையுமாக இருந்தால் இந்த இலங்கையின் வரலாறு மீண்டும் ஒரு மாற்றத்தை அடைந்தே தீரும் என நான் கருதுகின்றேன். தொடர்ச்சியாக ஒரு இனத்தை இன்னொரு இனம் அடக்கிக் கொண்டு இருக்க முடியாது. நிச்சயமாக அந்த இனம் விடுதலை பெறும் வரை போராடிக் கொண்டே இருக்கும். உலகத்தில் இது தான் வரலாறு. அடக்கப்பட்ட இனம் தமக்கான போராட்டத்தை தொடங்கிய பின் அடங்கிப் போனதாக வரலாறு எங்குமே இல்லை. தனது இலக்கை அடையும் வரை அந்த இனம் போராடிக் கொண்டே இருக்கும். அது ஏதொவொரு வடிவில் மீண்டும் மீண்டும் உருவாகிக் கொண்டே இருக்கும். இன்று நாம் முக்கியமான கட்டத்தில் இருக்கின்றோம். வன்னியில் நிலங்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முல்லையில் இராணுவத்தின் காணி சுவீகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராடவுள்ளோம். இந்த அரசியல் யாப்பு நடைமுறைப்படுத்த முன்னதாகவே தமக்கான காணியை சுவீரிக்க முனைகிறார்கள். இந்த ராணுவத்திறகு எதிராக போராட்டத்தை ஜநாயக ரீதியில் நடத்த வேண்டியுள்ளது. எமக்கு எதிராக அடைக்குமுறை இருக்கும் வரை அதற்கு எதிரான எமது போராட்டங்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கப் போகிறது எனத் தெரிவித்தார்.

N5