செய்திகள்

சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் முன்னாள் சிறப்புத் தளபதி நகுலன் கைது: இன்று காலை சம்பவம்

விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்டனி படைப் பிரிவின் சிறப்பு தளபதியான நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி இன்று காலை நீர்வேலி தெற்கு பகுதியில் உள்ள அவருடைய வீட்டிலிருந்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2009ம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் காணாமல் போயிருந்த சில தளபதிகளில் இவரும் ஒருவர் என கூறப்பட்டிருந்த நிலையில், நீர்வேலி பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் திருமணம் முடித்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் காலை 10 மணிக்கு சிவில் உடையில் நீர்வேலி கந்தசாமி கோவிலடி நீர்வேலி தெற்கு என்னும் முகவரியில் உள்ள இவருடைய இல்லத்திற்குச் சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் நகுலனை கைது செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த நகுலன், இறுதிக்கட்டப் போரின் போது, அம்பாறை மாவட்டத்தில், புலிகளின் தளபதிகளில் ஒருவரான ராமுடன் இணைந்து செயற்பட்டவர். புலிகளின் முன்னாள் தளபதி ராம் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில், நகுலனும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய தளபதிகள் கைதாகியிருப்பது புனர்வாழ்வின் பின்னர் விடுதலையாகியுள்ள முன்னாள் போராளிகள் மத்தியில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

R-06