செய்திகள்

கிளிநொச்சியில் 4 நாள் அமர்வுகளில் 704 பேர் தமது சாட்சியங்களை பதிவு

காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நான்கு நாள் அமர்வுகளில் 704 பேர் தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாகவும் 283 புதிய முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்;ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பறனகம தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அமர்வுகள் கடந்த 25ம்திகதி முதல் இன்று 28ம் திகதி வரையான நான்கு நாட்கள் நடைபெற்றுள்ளன.

இவ் நான்கு நாள் அமர்வுகளில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை, பூநகரி பளை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த 1146பேர் சாட்சி விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

இறுதி நாளான இன்று (28-04-2016) இவ் அமர்வுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் பறனகம அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 25ம் திகதி முதல் 28ம் திகதி வரையான 4ம் நாட்கள் நடைபெற்ற அமர்வுகளில் 1146 பேர் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இதில் கடந்த நான்கு நாட்களில் 704 பேர் தமது சாட்சியங்களைப் பதிவு செய்;திருந்தனர். அத்துடன் நான்கு நாட்களிலும் 283 புதிய முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இவற்றில் பத்து முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டுள்ளன.

சாட்சியமளித்தோர் இராணுவத்தினர் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே தமது சாட்சியங்களைப்பதிவு செய்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.