செய்திகள்

பாரிஸ் தாக்குதல்: பெல்ஜியத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அப்தெஸ்லாம் மீது தீவிரவாத குற்றச்சாட்டு பதிவு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரான்சு தலைநகர் பாரிசில் வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 130 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு முக்கிய சதிகாரனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பெல்ஜியத்தை சேர்ந்த சலா அப்தெஸ்லாம் என்ற நபர் கடந்த மார்ச் 18-ம் தேதி பெல்ஜியம் போலீசரால் கைது செய்யப்பட்டான்.

பிரான்சு குடிமகனான அப்தெஸ்லாம் அந்நாட்டில் உள்ள மோராக்கன் வம்சாவளியை சேர்ந்தவன் ஆவான். பெல்ஜியத்தில் வசித்து வந்த இவன், பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் உயிருடன் இருக்கும் ஒரே தீவிரவாதி ஆவான். இந்த நிலையில் விசாரணைக்காக பெல்ஜியம் அதிகாரிகள் பிரான்சிடம் அப்தெஸ்லாமை ஒப்படைத்தனர்.

ஹெலிகாப்டர் மூலமாக பிரான்சு அழைத்து வரப்பட்ட அப்தெஸ்லாமை, பிரான்சு அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு, அப்தெஸ்லாம் மீது தீவிரவாத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை மே 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.