செய்திகள்

இலங்கையில் சித்திரவதைகள் காணப்படுகின்றன : ஐ.நா நிபுணர்கள்

இலங்கையில் சித்திரவதைகள் முற்றாக நிறுத்தப்படவில்லை என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மனித உரிமைகள் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

இன்று மாலை கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை கடற்படை முகாமிற்குள் இரகசிய தடுப்பு முகாம்கள் இருந்தமையை தாம் நேரில் அவதானித்துள்ளதாக இந்த இரகசிய தடுப்பு முகாம்கள் கடந்த காலங்களில் பயன்படுத்தப்படவில்லை என எவரும் தமக்கு கூறவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைகளின் போது தொடர்ந்தும் சித்திரவதைகள் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸார் நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்தை பின்பற்றுவதில்லை எனவும், நீதிமன்றமும் பொலிஸாரின் தகவல்களை ஏற்றுக்கொள்கின்றமை பிழையான விடயம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது விஜயத்தின் போது தயாரிக்கப்பட்ட அறிக்கை எதிர்வரும் ஓரிரு மாதங்களில் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

N5