செய்திகள்

எங்கே செல்கின்றது யாழ்ப்பாணம்?

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைக்காலங்களில் அதிகரித்துவரும் வன்முறைகள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குடாநாட்டில் இளைய தலைமுறையினர் எதற்காக இந்தளவுக்கு வன்முறைகளை நாடிச்செல்கின்றார்கள் என்ற கேள்வி சமூக அக்கறை கொண்ட அனைவரையும் குழப்பத்திலாழ்த்தியுள்ளது. இந்த வன்முறை போக்கை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்ற கேள்வி எழுப்பப்படும் அதேவேளையில், சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்குப் பொறுப்பாக இருக்க வேண்டிய பொலிஸார் இவ்விடயத்தில் எந்தளவுக்கு பொறுப்புடன் செயற்பட்டுள்ளார்கள் என்பதும் ஆராயப்படவேண்டியதாகவுள்ளது.

போர் இடம்பெற்ற காலத்திலோ அல்லது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வட பகுதி இருந்த காலத்திலோ இவ்வாறான ஒரு நிலைமை காணப்படவில்லை என்பது உண்மை. ஒழுக்கமும், கட்டுப்பாடும் அங்கு கடுமையாகப் பேணப்பட்டது. ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது, வன்முறைகள், குற்றச்செயல்கள் மிகவும் குறைந்த ஒரு பிரதேசமாகவே யாழ்ப்பாணம் இருந்தது. யாழ்ப்பாண மக்களின் கட்டுப்பாடான கலாசாரமும், ஒழுக்கமும் இதற்கு ஒரு காரணம். இப்போது தலைகீழாகிவிட்ட நிலைமைக்கு காரணம் என்ன என்பதை ஆராய்வதும், அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான வழிவகைகளை காண்பதும் சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவருடைய பொறுப்புமாகும்.

பாலியல் வன்முறைகள், வாள்வெட்டுக்கள், கத்திக்குத்து, குழு மோதல்கள் என தினசரி வெளிவரும் செய்திகள் அச்சமூட்டுகின்றன. போர் முடிவுக்கு வந்த பின்னர் மக்கள் மனங்களில் உருவாகியுள்ள ‘வன்மம்’, போரின் பின்னர் காணப்படும் ‘கட்டுப்பாடுகள்’ தளர்த்தப்பட்ட நிலையும் வன்முறைகளின் திடீர் அதிகரிப்புக்கு ஒரு காரணம் என உளவியலாளர்கள் கூறுகின்றார்கள். இந்த நிலைமையை பயன்படுத்திக் கொண்டு திட்டமிட்ட சில சக்திகள் போதைப்பொருட்களின் பாவனையை குடாநாட்டிற்குள் பரப்பிவிடுவதும் நிலைமையை மேலும் மோசமடையச் செய்கின்றது. குடாநாட்டில் அண்மைக்காலத்தில் அதிகளவுக்கு போதைவஸ்த்துக்கள் கைப்பற்றப்படுவது அதன் பாவனை குடாநாட்டில் அதிகரித்து வருகின்றது என்பதற்கான ஆதாரமாகவுள்ளது. இதனைவிட, மதுபாவனையும் குடாநாட்டில் பெருமளவுக்கு அதிகரித்திருப்பதனையும் புள்ளி விபரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இவையனைத்தும் திட்டமிட்ட முறையில் குடா நாட்டிற்குள் கொண்டு செல்லப்படுகின்றதா எனச் சந்தேகிப்பதற்கும் நியாயமான காரணங்கள் உள்ளன.

இந்த இடத்தில் பொலிஸார் இவ்வாறான சம்பவங்களைத் தடுத்து நிறுத்துவதிலும், குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்பாக நிறுத்துவதிலும் எந்தளவிற்கு வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதும் ஆராயப்பட வேண்டும். சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டும் பொறுப்பு பொலிஸாருக்கே உள்ளது. யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வன்முறைகளைத் தடுத்து நிறுத்தாமைக்கான பொறுப்பை காவல்த்துறை தட்டிக்கழித்து விட முடியாது. குடாநாட்டில் இப்போதும் 95 வீதத்துக்கும் அதிகமான பொலிஸார் சிங்களவர்களாகவே உள்ளனர். 95 வீதத்துக்கும் அதிகமான தமிழர்களைக் கொண்டுள்ள யாழ்ப்பாணத்தில் அதிகளவு தமிழ்ப் பொலிஸார் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். பல தசாப்தகாலமாக இன முரண்பாடு மோசமடைந்துள்ள ஒரு நாட்டில் மாற்று இனத்தைச் சேர்ந்த பொலிஸார் எந்நதளவுக்கு அர்ப்பணிப்புடனும், அக்கறையுடனும் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கும்.

யாழ்ப்பாணம் உட்பட தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தமிழ் பொலிஸார் அதிகளவிற்கு நியமிக்கப்படுவது அவசியம். அதன் மூலமாகவே பொது மக்கள் பொலிஸ் நல்லுறவை வலுப்படுத்தவும், பொலிஸ் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும் முடியும். இது தொடர்பில் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதும், எதுவுமே நடைமுறைப் படுத்தப்படவில்லை. அரசாங்கத்துடன் ‘இணக்க’ அரசியலை நடத்தும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கூட இதற்கான அழுத்தத்தைக் கொடுப்பதற்கு தவறிவருகின்றார்கள். போர் முடிவுக்கு வந்து 7 வருடங்கள் நிறைவடைந்தும் கூட, இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல், நல்லிணக்கம் தொடர்பாகப் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமிருக்கப் போவதில்லை.

மாகாணசபை கூட இவ்விடயத்தில் போதிய அக்கறையெடுத்து செயற்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இவ்விடயம் குறித்து புதிய பொலிஸ்மாஅதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தார். அதற்குப் பின்னர் அதன் தொடர்ச்சியாக என்ன நடைபெற்றது என்பது தெரியவில்லை. மாகாணசபைகள் பெருமளவு அதிகாரத்தை கொண்டவையாக இல்லாமலிருக்கலாம். ஆனால், இருக்கும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு இவ்விவகாரத்தைக் கையாள்வதில் வடமாகாணசபை செயற்திறனுடன் என்ன செய்தது என்ற கேள்வியும் எழுகிறது. வடமாகாணத்துக்குட்பட்ட ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக இது உருவாகியிருப்பதால் இவ்விடயத்தில் ஆக்கபூர்வமாகச் செயற்படவேண்டிய பொறுப்பு மாகாணசபைக்கு உள்ளது.

இவையெல்லாவற்றையும் விட பெற்றோரும் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். உயர்தர வகுப்பு மாணவர்களும், பாடசாலைக் கல்வியை முடித்தவர்களுமே அதிகளவு வன்முறைக் கலாசாரத்தை நோக்கி செல்வதாக தெரிகின்றது. இதற்கு ஏதோ ஒரு வகையில் பெற்றோரும் காரணமாகின்றார்கள். கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில் திடீரென அதிகரித்திருக்கும் வெளிநாட்டுப் பொருட்கள், குறிப்பாக மோட்டார் சைக்கிள்கள், விலையுயர்ந்த ஸ்மாட்போன்களின் வருகை ஒரு புதிய உலகத்துக்குள் இளைஞர்களைக் கொண்டு சென்றுள்ளது. இந்த நிலையில் சரியான வழிநடத்தல் இல்லாமையும் இளைய தலைமுறையினர் வன்முறைப் பாதையில் செல்வதற்கு காரணமாகவுள்ளது.

இது ஒரு சமூகப் பிரச்சினை. இதனை முடிவுக்கு கொண்டு வர சமூக அக்கறையுள்ள அனைவரும் இணைந்து செயற்படுவதும், சம்பந்தப்பட்டவர்களுக்கு அழுத்தங்களை கொடுப்பதும் அவசியம். இதனை வெறுமனே சட்டம், ஒழுங்கு பிரச்சினையாகப் பார்க்காமல், ஒரு சமூகப்பிரச்சினையாகவும் பார்ப்பது அவசியம். வன்முறைப் பாதையில் செல்லும் இளையதலைமுறையினரை சமூகப் பொறுப்புள்ள பிரஜைகளாக மாற்றியமைப்பதில் எமக்குள்ள பொறுப்பை நாம் தட்டிக்கழித்துவிட முடியாது.

jaffna