செய்திகள்

மத்திய அரசாங்கம் அபிவிருத்தியில் வடக்கு மக்களின் விருப்பத்தை புறக்கணிக்கின்றதா?

-ருத்திரன்-

அதிக விவசாயிகளைக் கொண்ட வன்னிப் பகுதிக்கு ஒரு வரப்பிரசாதமாக 2000 மில்லியன் ரூபாய் செலவில் ஒரு பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை அமைக்க மத்திய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு நிதி ஓதுக்கீடு செய்துள்ளது. இதனை வவுனியாவில் அமைப்பது தொடர்பில் கடந்த சில மாதங்களாக இழுபறி நிலை தொடர்வதால் இந்த நிதி திரும்பிச் செல்லும் அபாயம் கூட உள்ளதாக மக்கள் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்த விடயத்தில் இரண்டு பட்டு செயற்படுவதை அவதானிக்க் கூடியதாக இருக்கிறது. இந்நிலையில் இப்பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு தாண்டிக்குளம், ஓமந்தை, ஈரப்பெரியகுளம், சாளம்பைக்குளம், நொச்சிமோட்டை, தேக்கவத்தை என பல இடங்கள் குறித்து பேசப்படும் நிலையில் அவ் இடங்களின் சாதக பாதகம் தொடர்பில் ஆராய்வதே இப் பத்தியின் நோக்கம்.

கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி அமைச்சர் றிசாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடக்கு முதலமைச்சர் சார்பாக வடமாகாண கல்வி அமைச்சர் க.குருகுலராஜா ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இப் பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடம் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போது தாண்டிக்குளம், ஓமந்தை தொடர்பில் ஆராயப்பட்டு முடிவு எட்டப்படாத நிலையில் அதன்பின்னர் பொருத்தமான இடம் தெரிவு செய்தல் தொடர்பில் அரச அதிபர் தலைமையில் விசேட கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ஹரிசன் குறித்த பொருளாதார மத்திய நிலையம் நகரில் இருந்து 2 – 3 கிலோமீற்றர் தூரத்தில் அமைக்கப்பட வேண்டும் எனவும் அற்கான இடத்தை தெரிவு செய்து வழங்குமாறும் கோரியிருந்தார். இதனால் கூட்டமைப்பின் வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்ட ஓமந்தை மாணிக்கவளவு காணியை வழங்க முடியா நிலை ஏற்பட்டது. அது நகரில் இருந்து 9 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருந்தது.

ஏற்பட்ட முரண்பாடு

இந்நிலையில் இத்திட்டத்தை பொருத்தமான காணி வழங்கப்படா விட்டால் கைவிட்டு வேறு மாவட்டத்திற்கு மாற்றப் போவதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு தெரிவித்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து கூட்டமைப்பின் வவுனியா மக்கள் பிரதிநிதிகளுக்குள் கருத்து முரண்பாடுகள் எழத்தொடங்கின. திட்டத்தை திரும்பிச் செல்ல விட முடியாது என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், கே.கே.மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், ஆகியோர் தாண்டிக்குளம் விவசாய பண்ணை காணியை வழங்கலாம் என முடிவு எடுத்திருந்தனர். இதனை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராசா, ம.தியாகராசா ஆகியோர் எதிர்த்திருந்ததுடன் ஓமந்தை, மாணிக்கவளவு காணியே பொருத்தமானது எனவும் இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சருடன் பேசி இது தொடர்பில் தீர்வு எட்டவேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர்.

முதலமைச்சரின் மறுப்பு

இந்நிலையில் தாண்டிக்குளம் விவசாய பண்ணை காணி வடமாகாண விவசாய அமைச்சின் கீழ் உள்ளது. இக்காணியை வழங்க முடியாது என வடமாகாண விவசாய அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் தெரிவித்திருந்ததுடன், ஓமந்தையை தெரிவு செய்யுமாறும் முதலமைச்சர் கடிதம் மூலம் அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தியிருந்தார். ஒரு சாரார் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி முதலமைச்சவர் மற்றும் விவசாய அமைச்சர் இந்த திட்டத்தை குழப்புவதாக பிரச்சாரமும் செய்ய முற்பட்டனர். இந்நிலையில் தாண்டிக்குளம் காணியை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வழங்க வேண்டும் என உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைதிப் பேரணி ஒன்றும் நடைபெற்றது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுடன் கூட்டமைப்பினர் சிலரும் கலந்து கொண்டனர்.
இடத்தெரிவு தொடர்பில் குழு அமைத்தல்

பொருத்தமான காணியை தெரிவு செய்யுமாறு மாவட்ட அரச அதிபர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க அரச உத்தியோகத்தர்களைக் கொண்ட சுயாதீன குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதில் சி.சிவகுமார் (விவசாய பணிப்பாளர், வடமாகாணம்), ஏ.ஜி.கே. குணதிலக (பணிப்பாளர், நகர அபிவிருத்தி அதிகார சபை, வடக்கு), யோகேஸ்வரன் ( பிரதி விவசாய பணிப்பாளர் – விரிவாக்கம், வவுனியா), கா.உதயராசா (பிரதேச செயலாளர், வவுனியா), ம.கிருபாசுதன் (திட்டமிடல் பணிப்பாளர், வவுனியா), திருமதி எல்.பி.ஈஸ்வரன் (விவசாய பணிப்பாளர், வவுனியா) ஆகியோர் அங்கத்துவம் வகித்தனர். இவர்கள் ஓமந்தை மற்றும் தாண்டிக்குளம் தொடர்பில் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்தனர்.

தாண்டிக்குளம் விவசாய பண்ணைக் காணி

இக் காணியானது 140 ஏக்கரைக் கொண்டது. 1948 ஆம் ஆண்டு விதை உற்டபத்திப் பண்ணைக்காக பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டு தற்போது வடமாகாண சபையின் கீழ் காணி உரிமம் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் மத்திய அரசின் கீழ் காணப்பட்ட போதும் 1989 ஆம் ஆண்டு இணைந்த வடக்கு- கிழக்கு மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட்டு தற்போது வடமாகாணசபைக்குரியதாகவுள்ளது. ஏ9 வீதியில் நகரில் இருந்து 1 – 2 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள இக் காணியில் 35 ஏக்கர் 1989 ஆம் ஆண்டு விவசயாக் கல்லூரிக்கு வழக்கப்பட்டது. இக் கல்லூரியே வடமாகாணத்தில் உள்ள ஒரே ஒரு விவசயாக் கல்லூரி என்பதுடன் இதனை இன்னும் விஸ்தரிக்க வேண்டிய தேவையும் உள்ளது. இப்பகுதியில் அமையப் பெற்ற பண்ணையானது வடமாகாணத்திற்கு தேவையான விதை உற்பத்திப் பொருட்களின் ஒரு பகுதியை பூர்த்தி செய்வதுடன், விவசாய கல்லூரி மாணவர்களுக்கு தேவையான கற்றல் வசதிகளையும் வழங்குகின்றது. இங்கு பழமரக் கன்றுகளுக்கான தாய்தாவர பராமரிப்பும் இடம்பெறுகிறது. இரு போகத்திலும் பயிர்ச்செய்கை இப்பண்ணையில் மேற்கொள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பேணப்படுவதுடன் இப்பண்ணைக் காணிக்கு அருகில் உள்ள கிணறுகளில் இருந்து நாளொன்றுக்னு சுமார் 200 குடிமனைக்கு குடிநீர் விநியோகிக்ப்படுகின்றது.

ஓமந்தையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணி

ஏ9 வீதிக்கு அருகாமையில் கள்ளிக்குளம் வீதியில் உள்ள மாணிக்கவளவு பகுதியில் அமைந்துள்ளது. இது 5 ஏக்கர் விஸ்தீரணத்தைக் கொண்டது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் எல்லைக்குட்பட்ட இக் காணி நகரில் இருந்து 9 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. சாதாரண வேகத்தில் செல்லும் போது நகரில் இருந்து 15 நிமிடத்தில் இங்கு செல்ல முடியும். இக் காணி தனியாருக்கு சொந்தமானது. ஆனாலும் மத்திய தர வகுப்புக் காணியாகிய இக்காணியை இது வரை எவரும் உரிமை கோரவில்லை. இக் காணி பொருளாதார மத்திய நிலையம் அமைக்க பயன்படுத்துவதாக இருந்தால் பிரிவு 38ஏ காணிச் சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் இதனை சுவீகரிக்க முடியும்.

தாண்டிக்குளம் விவசாயக் காணியின் அனுகூலம்

இக் காணி நகரத்திற்கு மிகவும் அண்மையில் அமைந்துள்ளதுடன், ஏ9 வீதியோரமாகவும் உள்ளது. பொருட்களை விற்பனை செய்வோருக்கும் வாங்குவோருக்கும் வசதியான இடம். புகையிரதம், பேரூந்து என இரு வழிப்போக்குவரத்து வசதிகள் காணப்படுவதுடன் பணபரிமாற்ற நடவடிக்கைகளுக்கான வங்கி வசதிகள் கூட அருகிலேயே அமைந்துள்ளன. மன்னார் – வவுனியா, யாழ்ப்பாணம்- வவுனியா, ஹொரவப்பொத்தானை – வவுனியா உள்ளிட்ட வீதிகளை இணைக்கும் சந்திக்கு அண்மையில் உள்ளது.

ஓமந்தை காணியின் அனுகூலங்கள்

ஏ9 வீதியில் அமைந்துள்ள இக் காணி சமதரையாகவுள்ளது. இக்காணியை இலகுவாக சுவீகரிக்க முடியும் என்பதுடன் எதிர்காலத்தில் மேலும் தேவையின் பொருட்டு விஸ்தரிக்க முடியும். பொருளாதார மையத்திற்கு தேவையான தொழிலாளர்களை அருகில் உள்ள கிராமங்களில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பூநகரி மற்றும் பாலமோட்டை ஊடாக மன்னார் மாவட்டத்தை இணைக்கும் போக்குவரத்து வசதிகள் உள்ளது. இப்பகுதி புதிய நகரம் அல்லது உபநகரம் உருவாகுவதற்கு ஏதுவாக அமைவதுடன், புகையிரதம், தரை வழி என இரு வழிப் போக்குவரத்து வசதிகள் காணப்படுகின்றது. உள்ளூர் அதிகார சபையின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளதுடன் பொருளாதார வலயக்கழிவுகளை அகற்றுவமற்கு போதுமான இடவசதியும் காணப்படுகின்றது. மழை காலங்களில் நீர் தேங்கி நீக்காதவாறு வழிந்தோடக்கூடிய மேட்டு நிலமாக அமைந்துள்ளதுடன் மக்கள் செறிவு அற்ற பிரதேசமாகையால் தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்களும் பகுறைவாகவுள்ளது.

தாண்டிக்குளம் விவசயாப் பண்ணைக் காணியின் பிரதிகூலங்கள்

ஏற்கனவே சனச் செறிவு மிக்கதாக காணப்படும் வவுனியா நகரின் பசுமை நிலை பாதிப்படையும். எதிர்கால தேவை கருதி பொருளாதார மத்திய நிலையத்தை விஸ்தரிக்க முடியாத நிலை ஏற்படுவதுடன், நிலத்தடி நீர் மாசடையக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளது. சனத்தொகை கூடிய பகுதியாக உள்ளத்தால் டெங்கு போன்ற தொற்று நோய்கள் இலகுவாக பரவக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதுடன், பொருளாதார வலயக் கழிவுகளை அகற்றுவதில் சிக்கல்கள் ஏற்படும். பண்ணைக்காணி, வயல்காணி, விவசாயக் கல்லூரி காணி என்பவற்றில் உள்ள பயிர்களுக்கு விரைவாக நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதுடன், நகருக்கான குடிநீர் விநியோகக் கிணறுகளும் மாசடையும் அபாயமுள்ளது. சமூக சீர்கேடுகளுக்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதுடன் புகையரத பாதையை அண்டி வாழும் மக்கள் மற்றும் அயலில் உள்ள குடியிருப்புக்களில் பாதிப்புக்கள் ஏற்படும். ஏ9 வீதியில் கூட வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. அருகில் உள்ள விவசாய கல்லூரி மாணவர்களின் கற்றல் செயற்பாடு கூட பாதிப்படையும்.

ஓமந்தைக் காணியின் பிரதிகூலங்கள்

நகரில் இருந்து தொலைவில் இது அமைந்துள்ளதுடன், வங்கிகள் மற்றும் நிதி றிறுவன வசதிகள் தற்போது இல்லை. எனினும் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படும் போது வங்கிக் கிளைகள் புதிதாக அமைக்கப்படவாய்ப்புள்ளது. ஏனைய வர்த்தக நடவடிக்கைகளுக்கு 9 கிலோமீற்றர் தூரத்திற்கு நகருக்கே பயணிக்க வேண்டியுள்ளது.

ஆய்வு செய்த குழுவினர் பரிந்துரை

தற்போதைய அரசாங்கம் நாடு பூராகவும் பொருளாதார அபிவிருத்திக்காக 45 பொருhளாதார அபிவிருத்தி மையங்களை அமைக்கின்றது. அந்த வகையில் கைத்தொழில் மற்றும் தொழில் நுட்ப அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்ட சிறப்பு வலயங்களில் வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்தின் தகவல்கள் விவசாய தொழில்நுட்ப மற்றும் வேறு கைத் தொழில் வலயமும், கிளிநொச்சி, வன்னியில் இரண்டு உற்பத்தி கைத்தொழில் வயலயமும் அமைய இருக்கின்றது. அந்த வகையில் வவுனியாவில் பிரத்தியேக பொருளாதார மத்திய நிலையம் அமைய இருக்கின்றது. இந்த அடிப்படையில் நகர அபிவிருத்தி அதிகார சபையால் தயாரிக்கப்பட்ட வவுனியா நகரப்பகுதிக்கான அபிவிருத்திட்டம் 2009 – 2030 என்ற முன்மொழிவு அறிக்கையில் பிரத்தியேக பொருளாதார மையம் ஓமந்தைக்கு அண்மையில் மாற்றப்பட்டு தற்போதைய நகர மொத்த வியாபார கிளையும் அவ்விடத்திற்கு மாற்றுவதாக முன்மொழியப்பட்டுள்ளது.

வடமத்திய மகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் அதன் புறநகரான தப்புத்தேக்கமவிலும், மத்திய மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் அதன் புளறநகரான தம்புள்ளையிலும் இடவசியையும் வேறு இன்னொரன்ன அனுகூலங்களினை அடிப்படையாக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வவுனியாவிற்கான பொருளாதார மத்திய நிலையத்திதையும் புற நகரப் பகதியில் அமைப்பது சிறந்தது.
வடக்கில் உற்பத்தி செய்கின்ற பொருட்களில் உள்ளூர் தேவைகள் போக எஞ்சியவற்றை தென்பகுதி நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு ஏற்றுமதி பொருட்களை நவீன களஞ்சிய வசதிகளுடன் களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யவும், வடபகுதி நுகர்வோருக்கு தேவையான தென்பகுதி உற்பத்திப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளவும் சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் ஓமந்தை பிரதேசம் சிறந்ததாக காணப்படுகின்றது.

எனவே, வன்னி மக்களின் மனங்களில் நல்லாட்சி அரசின் அனுகூலங்கள் கிடைக்க அவர்கள் மனங்களில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்த அமையப்பெறுகின்ற பொருளாதார மையம் ஓமந்மையில் அமைவதே சிறப்பானது என சிபார்சு செய்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மாற்றுக்காணி

ஓமந்தை, தாண்டிக்குளம் என்பதை விட ஈரப்பெரியகுளம், சாளம்பைக்குளம், பம்பைமடு, நொச்சி மோட்டை, தேக்கவத்தை ஆகிய பகுதிகளில் கூட மாற்றுக் காணிகள் உள்ளன. இதில் ஏ9 க்கு அண்மித்ததாக தேக்கவத்தைப் பகுதியில் உள்ள காணி நகரில் இருந்து 1-2 கிலோமீற்றருக்குள் உள்ள போதிலும் மேலதிகமாக விஸ்தரிக்கக் கூடிய வசதிகளோ அல்லது கழிவுகளை வெளியேற்றக் கூடிய வசதிகளோ போதியதாக இல்லை. அவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டால் அக் காணி கூட சிறப்பானதே. சாளம்பைக்குளம், பம்பைமடு, ஈரப்பெரியகுளம் என்பவற்றைக் காட்டிலும் நொச்சி மோட்டை பகுதியில் உள்ள 15 ஏக்கர் காணி கூட பொருத்தமானது. மாகாண காணி திணைக்களத்தின் கீழ் உள்ள குறித்த காணி நகரில் ஈருந்து 4-5 கிலோ மீற்றர் தூரத்திற்குள் உள்ளதுடன் ஏ9 வீதியோரமாகவும் உள்ளது. ஓமந்தைப் ஏ9 வீதியில் அமைந்துள்ள இக் காணி சமதரையாகவுள்ளது. இக்காணியை இலகுவாக சுவீகரிக்க முடியும் என்பதுடன் எதிர்காலத்தில் மேலும் தேவையின் பொருட்டு விஸ்தரிக்க முடியும். பொருளாதார மையத்திற்கு தேவையான தொழிலாளர்களை கூட அருகில் உள்ள கிராமங்களில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். பொருளாதார வலயக்கழிவுகளை அகற்றுவதற்கு போதுமான இடவசதியும் நீர் வசதியும் வாகனத் தரிப்பிட வசதியும் காணப்படுகின்றது. மக்கள் செறிவு அற்ற பிரதேசமாகையால் தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்களும் குறைவாகவுள்ளது.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ஹரிசனின் செயற்பாடு

மத்திய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ஹரிசன் அனுராதபுர மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர். இதனால் இத் திட்டத்தை அப்பகுதிக்கு கொண்டு செல்ல அவர் ஆர்வம் காட்டுவதாகவே நடக்கும் செயற்பாடுகள் புலப்படுத்துகின்றது. முதலமைச்சர் அவரிடம் அண்மையில் பேசிய போது கூட அவர் வடக்கு மக்களின் விருப்பத்திற்கு உடன்படவில்லை. வடக்கிற்கு வந்த திட்டத்தை வடக்கு மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமைக்க முற்படுவது எவ்வகையில் நல்லிணக்கம்…? இதையே கடந்த அரசும் செய்தது. இவ்வாறு கடந்த அரசில் அமைக்கப்பட்ட பல திட்டங்கள் இன்றும் பயன்பாடு அற்று காணப்படுகின்றது. எனவே மத்திய அமைச்சர் இந்த விடயத்தில் வடக்கு மாகாணசபையுடன் பேசி நடைமுறைப்படுத்த வேண்டும். சாதாரண ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை தமிழ் மக்கள் தமது விருப்பப்படி அமைக்க முடியாத போது எப்படி தீர்வை எதிர்பார்க்க முடியும்.

வடமாகாண சபைக்குள் குழப்பம்

கடந்த செவ்வாய் கிழமை வடமாகாண சபை அமர்வு நடந்து கொண்டிருந்த போது வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களின் தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் இப் பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தை உடனடியாக தராவிட்டால் திட்டம் வேறு மாவட்டத்திற்கு செல்லப் போவதாக கூறப்பட்டது. இதனையடுத்து சபையில் குழப்பம் ஏற்பட்டு இறதியில் மத்திய அமைச்சர் ஒருவருடன் பேசியத்திற்கு இணங்க பொருத்தமற்ற தாண்டிக்குளம் காணியை வழங்க இணக்கம் காணப்பட்டது. தாண்டிக்குளம் காணியை பெற திட்டமிட்ட ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்ததா என்ற சந்தேகம் கூட பலரிடமும் உள்ளது.
சகவாழ்வு அமைச்சர் மனோகணேசனின் மேல் உள்ள நம்பிக்கை

குறித்த விடயம் தொடர்பில் சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் வடமாகாண முதலமைச்சருடன் பேசியிருந்தார். அவர் மத்திய அமைச்சர் ஹரிசன் அவர்களுடன் பேசியுள்ளதாக அறிய முடிகிறது. விரைவில் குறித்த விடயம் தொடர்பில் பிரதமர், ரணில் ஆகியோருடன் பேசி மாவட்டத்திற்கு பொருத்தமாக இத் திட்டம் அமைய உதவ வேண்டும் என்பது கிராமிய மக்களின் ஆதங்கம்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் உண்மையில் விவசாயிகள், உற்பத்தியாளர்கள் ஆகியோரின் நலன்களை முன்னிறுத்தி பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கான இடத்தினை தெரிவு வெசய்ய அனைவரும் ஒன்று பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

நன்றி
வீரகேசரி