தலைப்பு செய்திகள்

கூட்டு அரசாங்கத்தின் தோல்வி உண்மையில் யாருடைய தோல்வி?

கூட்டு அரசாங்கத்தின் தோல்வி உண்மையில் யாருடைய தோல்வி?

யதீந்திரா
இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது இலங்கையின் நாடாளுமன்றம் ஸதம்பிதம் அடைந்திருக்கிறது. மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்பதற்கு ஜனாபதி மைத்திரிபால சிறிசேன மறுத்திருக்கிறார். இதனால் நிலைமைகள் மேலும் மோசமடைந்திருக்கின்றன. ஒரு வேளை, இந்தக் கட்டுரை வெளியாகும் போது நிலைமைகள் மேலும் மோசமடையலாம். பாராளுமன்றத்திற்குள் இடம்பெறும் குழப்பங்கள் கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான மோதலாகவும் மாறலாம். இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நிலைமை இதற்கு முன்னர் எப்போதும் இடம்பெற்றதில்லை. இத்தனைக்கும் அபூர்வமான அரசாங்கம் என்று வர்ணிக்கபட்ட நல்லாட்சி அரசாங்கத்தில்தான் இவை அனைத்தும் இடம்பெறுகின்றன.
இதற்கான காரணம் என்ன? வெளித்தோற்றத்தில் இவை அனைத்திற்கும் மைத்திரிபால சிறிசேனதான் காரணம் என்றவாறான ஒரு தோற்றம் தெரியலாம் ஆனால் அது உண்மையல்ல. மகிந்த ராஜபக்சவை எதிர்ப்பற்கு எவருமே முன்வராத ஒரு சூழலில்தான், மைத்திரிபால சிறிசேன அந்தப் பொறுப்பை ஏற்றார். அதாவது, மகிந்த ராஜபக்சவை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டுமாயின் அதனை ஜக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரைக் கொண்டு செய்ய முடியாது என்னும் அடிப்படையிலிருந்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அவ்வாறானதொரு முடிவு எடுக்கப்பட்டது என்பதற்கு அப்பால், ஆட்சி மாற்றத்திற்கு பின்னாலிருந்த சக்திகள் அவ்வாறானதொரு தெரிவைத்தான் முன்மொழிந்திருக்க வேண்டும்.

ஏனெனில் மேற்குலக எதிர்ப்பாளராக அடையாளப்படுத்தப்பட்டிருந்த மகிந்தவை அகற்றுவதற்கு உண்மையில் ரணில் விக்கிரமசிகவைத்தான் ஒரு தெரிவாக முன்னிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக மைத்திரிபால வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். மைத்திரிபாலவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தியவர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அதாவது, மைத்திரிபாலவை சிறிலங்கா சுமந்திரக் கட்சியிலிருந்து உடைக்கும் போது, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் வாக்கு வங்கியும் பெரியளவில் உடையும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் அது நிகழவில்லை. ஆட்சி மாற்றத்தை திட்டமிட்டவர்களுக்கு தேர்தல் முடிவுகளின் பின்னர்தான் ஒரு விடயம் விளங்கியது அதாவது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கி, பெருமளவில் மகிந்த ராஜபக்சவின் வாக்கு வங்கியாக மாறிவிட்டது. ஆட்சி மாற்றத்தை திட்டமிட்டவர்கள் சறுக்கிய முதல் இடம் இதுதான். விடுதலைப் புலிகளுக்கு எதிரான வரலாற்று வெற்றியானது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குவங்கியை மகிந்தவின் தனிப்பட்ட வாக்குவங்கியாக மாற்றிவிட்டது. இதன் காரணமாகவே நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் மைத்திரி – ரணில் அரசாங்கத்தை மகிந்தவின் மொட்டு சின்னத்தால் தோற்கடிக்க முடிந்தது. தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் அதிகார நெருக்கடியை மேற்படி பின்புலத்தில்தான் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

Mahinda-Rajapaksa-Ranil-Wickremesinghe-and-Maithripala-Sirisena

ஆரம்பத்தில் மைத்திரி- ரணில் கூட்டரசாங்கத்தில் குறிப்பிடும்படியான முரண்பாடுகள் எதுவும் இருக்கவில்லை. 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் தனது அதிகாரங்களை உறுதிப்படுத்திக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க, அதன் பின்னர் மைத்திரியை ஓரங்கட்டும் வகையில் செயலாற்றத் தொடங்கினார். ரணில் தன்னிச்சையாக பல்வேறு முடிவுகளை எடுக்க முற்பட்டார். மத்தியவங்கி பிணைமுறி விவகாரம் பாரதூரமா பிரச்சினைகளை ஏற்படுத்தியிருந்தது. இன்று ஜனநாயகம் பற்றி பேச முற்படுவர்கள் எவரும் மத்தியவங்கி பிணைமுறி தொடர்பில் பேசவில்லை. இவ்வாறான விடயங்கள் கூட்டராங்கத்திற்குள் நெருக்கடிகளாக மாறின. இவ்வாறானதொரு சூழலில்தான் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற்றது. கூட்டு அரசாங்கம் அதிர்ச்சியடையும் வகையில் தோல்வியை தழுவியது. இது மைத்திரிபாலவிற்கு கட்சிக்குள் மேலும் நெருக்கடிகளை தோற்றுவித்தது. இந்த சந்தர்ப்பத்தில்தான் மைத்திரிபால சிறிசேன தனக்கு உயிராபத்து இருப்பதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து திடிரென்று ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கினார். அதில் தொடங்கிய இழுபறி பின்னர் கொழும்பின் அதிகார நெருக்கடியாக மாறியது.

ஏந்த மகிந்தவிற்கு எதிராக மைத்திரிபால களமிறங்கினாரோ இன்று அவருடனேயே, அரசியல் ரீதியாக கைகோர்த்திருக்கிறார். எப்போது மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக பதிவிப்பிரமாணம் செய்தாரோ அப்போதே கூட்டு அரசாங்கம் முற்றிலுமாக தோல்விடைந்துவிட்டது. இது யாருடைய தோல்வி? மகிந்த ராஜபக்ச சீனாவை நோக்கி முற்றிலுமாக சாய்ந்துவிடுவாரோ என்னும் அச்சம் மேலோங்கியிருந்த சூழலில்தான், ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. ஆனாலும் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் கூட சீனாவை ஒரு வரையறைக்குள் முடக்குதல் என்னும் இலக்கில் வெற்றிகிட்டவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர்தான் ஹம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருட குத்ததைக்கு சீனாவிற்கு வழங்கப்பட்டது. அத்துடன் விசேட வர்த்தக வலயத்திற்கென 15000 ஏக்கர் காணி வழங்கப்பட்டது. அவ்வாறாயின் இதனை ஆட்சி மாற்றத்தை உந்தித்தள்ளிய வெளி சக்திகளின் தோல்வி எனலாமா?

இலங்கையின் வரலாற்றில் எதிரும் புதிருமான இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்திருப்பதானது ஒரு அரிய சந்தர்ப்பம். இந்த சந்தர்ப்பத்தை கொண்டு இதுவரை தீர்வின்றி கிடந்த அனைத்து விடயங்களுக்கும் தீர்வை காணமுடியும். ஒரு புதிய அரசியல் யாப்பை கொண்டுவருவதன் மூலம் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை காண முடியும். இறுதியுத்தத்தின் போது ஏற்பட்ட மனித உரிமை மீறல் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வை காண முடியும் – என்றெல்லாம் கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலை என்ன?

உண்மையில் இன்றைய குழப்பங்களின் இறுதி முடிவாக நாடு ஒரு தேர்தலை எதிர்கொள்ளலாம். அதில் எவரும் வெல்லலாம். ஆனால் இன்றை குழப்பங்கள் ஒரு விடயத்தை இந்த நாட்டு மக்களுக்கு தெளிவாக கூறியிருக்கிறது. அதாவது, இந்த நாட்டுக்கு கூட்டு அரசாங்க ஆட்சி பொருத்தமற்ற ஒன்று. அற்புதமான அரசாங்கம் என்று வர்ணிக்கப்பட்ட அரசாங்கமானது, இன்று அதன் படு தோல்வியை பதிவுசெய்திருக்கிறது. உண்மையில் இந்தத் தோல்வி, இந்த அரசாங்கத்தின் மீது அளவுகடந்த பக்தி வைத்திருந்த கூட்டமைப்பின் படுதோல்வியாகும். குறிப்பாக சம்பந்தனின் தோல்வியாகும். அதிலும் முக்கியமாக சுமந்திரனின் படுதோல்வியாகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *