செய்திகள்

அக்கரைப் பச்சை – நாவல் – பாகம்-2

நாவல் – பாகம்-2

கால்கள் இரண்டையும் கட்டிலின் மெத்தையில் மடித்து வைத்துக் கொண்டு கைகளை தலையின் பின்பக்கமாக மடித்த வண்ணம் கட்டிலின் பின் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தான் ஆனந்தன்.

கதிரவனின் சிரிப்பு யன்னலினூடாக அசைந்து வந்து ஆனந்தனின் முகத்தில் பட்டுத் தெறித்தது.
ஆனந்தன் அதைக் கூட உணராமல் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

~~வாழ்க்கையில் ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவரின் அருமை புரிவதில்லை. அவரை இழந்து தனிமையில் இருக்கும் போதுதான் அவரின் அருமைஇ அவர் செய்த நன்மை தீமைகள் எல்லாம் மனதைக் குடைந்து வாட்டும்|| என்று சொல்லிக் கொண்டு மீண்டும் மனத்திரையில் வட்டமிட்டாள் நதியா.

kathai-1
என்ன அத்தான் ~இப்படி எத்தனை நாட்கள் கட்டிலிலும் கையில் பேனாவுமாக இருக்கப் போறீங்கள். வாழ்க்கை எவ்வளவு குறுகியது தெரியுமா சந்தோஷமாக நிம்மதியாக வாழவேண்டிய அழகு நிறைந்த வாழ்க்கையை நழுவ விட்டு விட்டு ஏதோ ஒரு பெரிய எழுத்தாளன் போல கையில் பேனாவை பிடித்தால் போதுமா? யாரின் கதையை எழுதப் போறீங்கள் அத்தான். என்னுடைய கதையா அல்லது உங்களுடைய கதையா இல்லையேல் எங்கள் இருவரினதும் கதையா.

நீங்கள் எழுதும் கதையை வாசித்தால் ஒருவேளை இந்தச் சமூகம் உங்கள் மீது காறித்துப்பும். வாழத்தெரியாதவன் கதையெழுத வந்திட்டான் என்று எள்ளி நகையாடும். இதெல்லாம் உங்களுக்குத் தேவையா.

வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வாழத் தெரியாதவனாய் நிற்கும் நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் இருக்க முடியும். சற்று சிந்தித்துப் பாருங்கள் அத்தான்.
அந்த நாட்களை மறந்து விட்டீங்களா அத்தான். மறக்க முடியாத அந்த இனிய நாட்கள். நீங்கள் என்னை சுற்றி வந்த நாட்கள். எப்படியாவது என்னை அடைந்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டி அன்பு காட்டி காதலித்த அந்த நாட்கள். அவையெல்லாம் வெறும் நடிப்பா… அத்தான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மனிதர்கள் சுயநலத்தோடு எவ்வளவு சுலபமாக மாறிவிடுகிறார்கள் என்று நினைக்கும் போது கோபம் கோபமாக வருகிறது.
நீங்களும் அப்படியொரு சுயநலம் மிக்க மனிதனாக மாறுவீர்கள் என்று ஒரு நாளும் நான் எதிர்பார்க்கவில்லை ஆனால் மாறிவிட்டீர்கள். என்னை மறந்து எங்கள் காதலை மறந்து ஒருவருக்கொருவர் காட்டிய அன்பை மறந்து உங்களையே நீங்கள் மாற்றிக் கொண்டீர்கள்.
இதற்கொல்லாம் காரணம் என்ன அத்தான்? என்றோ ஒருநாள் என் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

தப்பிவிட முடியும் என்று மாத்திரம் நினைத்து விடாதீங்கள். உங்களுக்கு உங்கள் மனச்சாட்சியே உறுத்தவில்லையா.
அந்த நாட்களில் நாங்கள் இருவரும் கொக்குவிலில் எப்படிச் சந்தோஷமாக வாழ்ந்தனாங்கள் என்று நினைத்துப் பாருங்கள். இந்த நாட்டிற்கு வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் மாறி என்னையும் உங்களைப்போல மாற்ற வற்புறுத்தியதன் விளைவுதான் இன்றைய நிலைமைக்குக் காரணம் அத்தான்.
சாதாரணமாக சந்தோஷமாக வாழ்ந்த வாழ்க்கையை விட்டு விட்டு ஆடம்பர வாழ்க்கை வாழ முற்பட்டதன் முடிவைப் பார்த்தீர்ங்களா அத்தான்.

இப்பொழுது உங்களுக்கு தனிமை வாட்டுகிறது என்று எனக்குத் தெரியும். அதுவும் நீங்களாகத் தேடிக் கொண்டது. நீங்கள் ஒரு வாழத் தெரியாத முட்டாள் அத்தான். என்னை மன்னித்துவிடுங்கள். என் அத்தானை நானே முட்டாள் என்று கூப்பிடக் கூடாது. இருந்தும் உங்கள் செயல்கள் தானே இப்படி ஒரு நிலைக்கு முட்டாளாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. இனி உங்களை நான் முட்டாள் அத்தான் என்று கூப்பிடலாமா… நீங்கள் உடனே கோபப்படுவீங்கள் என்று எனக்குத் தெரியும்.
முன் கோபம் கூடாது அத்தான். நான் எத்தனையோ முறை உங்களுக்குச் சொல்லியிருக்கிறன் ஆனால் நீங்கள் கேட்கவில்லையே…

kathai-2

யாருக்காகவோ என்னை இழக்கத் துணிந்த உங்களை முட்டாள் என்று நான் செல்லமாகக் கூப்பிட்டால் நீங்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இந்தக் கட்டிலிலேயே சாய்ந்திருக்காமல் வெளியே போய் வாருங்கள்.
இனி உங்களுக்கு இரத்த உறவு என்று சொல்லிக் கொள்ள என்ர மகள் நிவேதா மட்டும்தான். சீச்சீ அவள் உங்கட மகளும்தானே. அவளையாவது அன்போடு கவனமாக வளர்த்து ஆளாக்குங்கள் அத்தான்.
பாசத்தோடு அணையுங்கள். அப்பத்தான் அவளும் உங்களோடு பாசமாக இருப்பாள். ஆறு வயதுக் குழந்தைக்கு இனி நீங்கள் தான் எல்லாமே. அதை மனதில் வைத்திருங்கள் அத்தான். அவளுக்கும் உங்கள் சுயநல புத்தியை பழக்கிவிடாதீங்கள். அம்மாவை மறக்க நிவேதாவுக்கு நாட்களாகும். நீங்கள் தான் அவளைக் கவனமாக கண்ணிமைகளை காப்பது போல் காக்க வேண்டும்.

ஆனந்தனின் அறைக்கதவை தட்டும் சத்தம் கேட்டு நினைவுகளக் களைந்து விட்டு எழும்பிச் சென்று கதவைத் திறந்தான்.
நிவேதா அரைத் தூக்கத்துடன் பசிக்குது அப்பா என்று சொல்லிக் கொண்டு ஆனந்தனைக் கட்டிப்பிடித்தாள்.
முகம் கழுவிட்டியாம்மா என்று கேட்கஇ இல்லை என்று தலையாட்டினாள் நிவேதா. அம்மா இருந்தால் முகம் கழுவாமல் உனக்கு சாப்பாடு தந்திருக்க மாட்டா. வா! பிரஷ் பண்ணி முகம் கழுவுவம் என்று சொல்லி நிவேதாவின் கையைப் பிடித்துக் கொண்டு குளியலறைக்குள் நடந்தான் ஆனந்தன்…….

தொடரும்….

last episode

next episode