செய்திகள்

அக்கரை பச்சை – நாவல் – பாகம்-1

sam-29
நடு இரவின் இருட்டறையின் மெல்லிய புன்னகையுடன் கிழக்குப் பக்கத்தில் நிமிர்ந்து நின்ற பல மாடிக் கட்டிடங்களின் பின்னால் வெட்கமற்று நிர்வாணமாய் முழுவுடலைக் காட்டி நிற்கும் சந்திரனை பட்டாடை போன்ற முகிற் கூட்டம் தழுவி வந்த போதும் மீண்டும் மீண்டும் முந்தானை அகற்றி முழுவுடலைக் காட்டிச் சிரித்தது சந்திரன்.
எழுந்து வேலையை முடித்துவிட்டு மெல்ல எழும்பி யன்னல் பக்கமாக வந்தான் ஆனந்தன்.
சந்திரனின் ஒளி வீச்சில் பாம்பைப் போல் நெளிந்து வளைந்து நீண்டு காணப்பட்ட தேம்ஸ் நதி அழகாகக் காட்சியளித்தது. அந்த நதியின் சீற்றமற்ற மெல்லிய அலைகள் மெதுவாக அசைந்து கரைகளில் மோதின.
ஆனந்தன் கண்வெட்டாமல் அந் நதியையே பார்த்தான். அதன் இரு மருங்கிலும் தொடராக அமைந்திருந்த மின் கம்பங்களின் உச்சியிலிருந்து பிரகாசித்த மின் விளக்குகள் அந்த நதியை மேலும் அழகுபடுத்திக் கொண்டிருந்தது. தேம்ஸ் நதியின் வலது பக்கமாக கண்ணுக்கெட்டிய தூரத்தில் டவர் பாலம் (tower Bridge). தன்னைச் சுற்றியிலிருந்த மின் விளக்குகளின் வெளிச்சத்தில் மெல்ல தன்னுடலைப் பிரித்து நிமிர்ந்த ஒரு சரக்குக் கப்பல் மெல்ல அசைந்து அதனூடாக அடுத்த பக்கம் நகர்ந்தது.
நத்தார் பண்டிகைக்காக அலங்கரிக்கப்பட்டிருந்த கட்டிடங்களும் தெருக்களும் மேலும் லண்டன் மாநகரின் மையப்பகுதியை அலங்கரித்துக் கொண்டிருந்தன. ஆனந்தனின் கண்கள் தேம்ஸ் நதியைத் தாண்டி அடுத்த கரையில் அமைந்திருந்த அடுக்கு மாடிக்கட்டிடங்களைப் பார்த்தன. இன்னமும் பல பிளாட்களில் மின்வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
sam-30

ஆனந்தன் தலையை தன் வலக்கையால் கோதிய வண்ணம் தன்னையே நினைத்துப் பார்த்தான். கடந்து வந்த பாதையும் கூட நெளிந்து வளைந்து மேடு பள்ளங்கள் நிறைந்த பாதையாகத்தான் அவனுக்குத் தென்பட்டது.
முடிவில்லாத போராட்டங்கள் நிறைந்த அவனது வாழ்க்கை அவனை ஒரு எழுத்தாளனாகவே மாற்றிவிட்டது.
எத்தனையோ நடைமுறை, வாழ்க்கைச் சம்பவங்களை கதைகளாக எழுதிய அவனது கைககள் இப்பொழுது அவனைப் பற்றியும் அவனது வாழ்க்கையைப் பற்றியும் எழுதத் தொடங்கிவிட்டது.
அவனது வாழ்க்கைப் போராட்டம், அந்தப் போராட்டத்தில் அவனுக்கு ஏற்பட்ட விளைவுகள், இவையெல்லாம் ஒரு படிப்பினையாக, மற்றவர்கள் தவிர்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில்த்தான் அவனது விரல்கள் அந்த இரவில் பேனாவைப் பிடித்து முதல் அத்தியாயத்தை எழுதி முடித்தது.
தலையை நிமிர்த்தி தூரத்தில் தெரிந்த டவர் பிரிஜ் யைப் பார்த்தான் ஆனந்தன். பிரிந்து நிமிர்த்திய தன்னுடலை சரித்து பொருத்தத் தொடங்கியது டவர் பிரிஜ்.
யன்னலை விட்டு விலகி படுக்கையறைக்குள் சென்றான். உடலை நிமிர்த்தி கட்டிலில் சாய்ந்தான். கண்களை மூடினான். நித்திரை வரவில்லை. மனது அமைதியற்று மூளையைக் குடைந்து கொண்டிருந்தது. மூளையோ அவனைத் தூங்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.
கண்களை திறந்தான். மீண்டும் மூடினான்.
மெல்லிய சிரிப்புடன் அவள் நதியா அவன் முன் தோன்றினாள்.
~~என்னத்தான் இன்னமும் நித்திரை வரவில்லையா. என்னைப் பற்றி நினைத்தால் உங்களுக்கு எப்படி அத்தான் நித்திரை வரும். மனச்சாட்சி உங்களை நித்திரை கொள்ள விடாமல் தடுக்கிறதா? எல்லாவற்றையும் மறந்து விட்டு நித்திரை கொள்ள முயற்சியுங்கள் அத்தான். இல்லாவிட்டால் உடம்பு கெட்டுவிடும்.
sam-31

எனக்கு உங்கள் மேல் இருந்த கோபமெல்லாம் போய்விட்டது. உங்களைப் பார்க்கக் கவலையாக இருக்கிறது அத்தான். இவையெல்லாம் நீங்களாகத் தேடிக்கொண்டது. நடந்து வந்த பாதையில் ஒரு தடைக்கல்லாக நினைத்து மறக்க முயற்சியுங்கள்.
ஆனந்தன் எழும்பி கட்டிலில் அமர்ந்தான். உடம்பெல்லாம் வியர்த்தது. மெல்ல கட்டிலின் மறுபக்கம் திரும்பிப் பார்த்தான். நதியா படுத்துத் தூங்கும் அந்தப் பக்கம் மூன்று வாரங்களாக வெறுமையாகவிருந்தது.
கட்டிலில் அமர்ந்தபடியே கண்களை மூடினான். அழகிய நதியா மீண்டும் வந்தாள்.
என்ன அத்தான் தனிமை உங்களை வாட்டுதா? ஏன் நான் படுக்கும் பக்கம் திரும்பிப் பார்க்கிறீர்கள். மறுபக்கம் திரும்பிப் படுங்கள் அத்தான். காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும். பணத்திற்கும் போலி கௌரவங்களுக்கும் மனிதர்கள் மிருகங்களாக மாறி விடுகிறார்கள். நான் சொல்வது சரிதானே அத்தான். சொல்லிவிட்டு சிரித்தாள் நதியா.
நீங்கள் உங்களை ஒரு எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்ள உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. சமூகத்திற்கு படிப்பினையூட்டும் கதைகளை எழுதுவதை விட்டுவிட்டு உங்களை ஒரு முறை நினைத்துப் பாருங்கள் அத்தான். ஊருக்குத்தான் உபதேசம் எனக்கில்லை என்று நினைத்து விட்டீர்களா… நதியா மனத்திரையை விட்டு மெல்ல மறைந்தாள்.
ஆனந்தன் எழுந்து சென்று குளியலறையில் முகத்தை கழுவி விட்டு மீண்டும் வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டான்.
நித்திரை வரவேயில்லை. சந்திரன் சோபையிழக்க கதிரவன் சந்திரனை துரடித்தியடித்தான்.
தொடரும்……

next episode

Related News