செய்திகள்

அடிப்படை வசதிகளற்ற நிலையில் பற்றைக்காடாகும் அரச ஊழியர் வீட்டுத்திட்டம் (ஓமந்தை, வேப்பங்குளம் வீட்டுத் திட்டம் ஒரு நேரடி ரிப்போட்)

 
கே.வாசு
அரச உத்தியோகத்தர் ஒருவர் நாட்டின் எப் பகுதியிலும் கடமையாற்ற கூடியவராக இருக்க வேண்டும். இதனால் பலர் தமது சொந்த இடங்களையும், வீடுகளையும், காணிகளையும் விட்டு வந்து வேறு பிரதேசங்களில் பணியாற்றுகின்றனர். வாடகை வீடுகளிலும், அரச விடுதிகளிலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வசித்து இவர்கள் வருகின்றனர். இவ்வாறு  சொந்த வீடு, வாசல் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அரச ஊழியர்களுக்கும் காணிகளற்ற அரச உத்தியோகத்தர்களுக்கும் வவுனியாவில் குடியேற்றம் ஒன்று அமைக்கப்பட்டது. இக் குடியேற்றம் அமைக்கப்பட்டு 5 வருடங்கள் நிறைவடைகின்ற போதும் அதன் இன்றைய நிலை யுத்தப் பாதிப்புக்குள்ளான பிரதேசத்தின் நிலைமையை விட மிக மோசமானதாக உள்ளது.
SAM_0077அரச ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட இக் கிராமம் நகரில் இருந்து சுமார் 15 கிலோமீற்றர் தொலைவில் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் ஓமந்தை, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ளது. ஏ9 வீதியில் இருந்து உட் செல்லும் சிறிய வீதியில் இக் குடியேற்றம் உள்ளது. யுத்தத்தால் பாதிப்படைந்த மக்கள் மீள்குடியேற்றம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதியில் 2010 ஆம் ஆண்டு இப் பகுதியில் உள்ள அரச காணியில் இருந்த காடுகளை வெட்டி அரச ஊழியர்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 பரப்பு காணி வீதம் பல்வேறு அரச திணைக்களங்களில் வேலை செய்த 732 உத்தியோகத்தர்களுக்கு இந்தக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. காணிகள் வழங்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்று காடாய் காட்சியளிக்கும் இக் குடியேற்றத்தில் வெறும் 48 குடும்பங்களே வசித்து வருகின்றன.
பல அரச உத்தியோகத்தர்களுக்கு  வழங்கப்பட்ட காணிகள் இன்றும் பற்றைக் காடாக காட்சியளிப்பதுடன் சிலர் வீடுகளை கட்டி முழுமைப்படுத்தாமல் விட்டுள்ளனர். அவை பற்றைகளால் சூழப்பட்ட நிலையில் பாழடைந்த கட்டடங்கள் போல் காட்சியளிக்கின்றன. வங்கிகளில் கடன்களைப் பெற்று சில அரச உத்தியோகத்தர்கள் வீடுகளை கட்டிய போதும் அதனை முழுமைப்படுத்த பணம் இல்லாத காரணத்தினால் இன்றும் இரவல் வீடுகளில் வாழும் நிலையே காணப்படுகின்றது. இக் காணிகளுக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படாமையால் வங்கிகளில் கூட வீடு கட்டுவதற்கான கடன்களை பெற முடியாது இருப்பதாக இப் பகுதியில் குடியிருக்கும் அரச உத்தியோகத்தர்கள் கூறுகின்றனர். இது தவிர, நகரப் பகுதியில் காணிகளும், வீடுகளும் உள்ளவர்கள் கூட இங்கு காணிகளைப் பெற்றுள்ளார்கள். அவர்கள் இங்கு வந்து குடியேறாது தமது காணிகளில் வீடுகளையும் கட்டாது விட்டுள்ளமையால் அக் காணிகள் பற்றைகளாக காட்சியளிக்கின்றது. இதனால் அவ் வெற்றுக் காணிகளுக்கு அருகில் இருக்கும் மக்கள் பெரும் இடர்களை எதிர்நோக்குகின்றனர்.SAM_0094 (1)
வீதியோரங்களிலும், வீடுகளை அண்டியும் காட்டுத் துண்டங்களே காணப்படுகிறது. காட்டு விலங்குகளுக்கும், ஊர்வனவற்றுக்கும் பழகிப்போய்விட்டனர் இங்கு வசிக்கும் மக்கள். இங்கு திருடர்கள் கைவரிசைக்கும் குறைவில்லை. அரச ஊழியர்கள் வேலைக்கு சென்றுவிட்டால் அந்த வீடுகள் திருடர்களின் கைவரிசைக்குள்ளும் அடிக்கடி உட்படுகின்றது. இக் வீட்டுத்திட்ட பகுதிக்கான போக்குவரத்து பாதை கூட சீராக இல்லை. இதனால் இங்கு வந்து குடியேற சிலர் விரும்பவில்லை. காணியை பெற்றுள்ள போதும் சிலர் இப் பகுதியில் குடியேறாது இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
அரச ஊழியர்கள் வேலைக்கு செல்லும் போது அவர்களின் சிறு பிள்ளைகளை கற்பிப்பதற்கு முன்பள்ளிகள் கூட அப் பகுதியில் இல்லை. இதனால் வேலைக்கு செல்லும் உத்தியோகத்தர்கள் தமது பிள்ளைகளுடன் பல கிலோமீற்றர் தூரத்திற்கு சென்று பிள்ளைகளை முன்பள்ளிகளில் சேர்த்துவிட்டே வேலைக்கு செல்கின்றனர்.
காணிகளைப் பெற்ற 732 அரச உத்தியோகத்தர்களில் 200 பேர் வரை வீடுகளை முழுமையாகவும், பகுதியளவும் கட்டியுள்ளனர். ஆனால் அவர்களும் அங்கு நிரந்தரமாகக் குடியேறவில்லை. இக் குடியேற்றத்திற்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமையால் சொந்த காணி இருந்தும் வாடகை வீட்டில் குடியிருக்கும் நிலையே இவ் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இன்னும் 600க்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் தமக்கு அப் பகுதியில் காணிகள் வழங்குமாறு கோரியுள்ள போதும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. பல உயர் அதிகாரிகளும் வேறு காணிகள் உள்ளவர்களுக்கும் இங்கு காணிகள் உள்ள போதும் காணிகளற்ற தமக்கு வழங்கப்படவில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.
IMG_20150111_125305 (1)இதேவேளை, இக் குடியேற்றத்தில் பொதுத் தேவைகளுக்கு என ஒதுக்கப்பட்ட காணிகளை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் கூட சில பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் வவுனியா மாவட்ட அரச அதிபருக்கு இப் பகுதி கிராம அபிவிருத்திச் சங்கம் முறையிட்டதையடுத்து அது தடுக்கப்பட்டுள்ளது. காணிகளை பெற்றுக் கொள்ளவும் அதனை தம் வசப்படுத்தவும் காட்டும் ஆர்வத்தினை இக் கிராமத்தினை ஒரு முழுமை பெற்ற குடியேற்றமாக காட்ட எவரும் முன்வரவில்லை. அரசியல்வாதிகளிடம் தமது குடியேற்றத்திற்கான அடிப்படை வசதிகளை செய்து அதனை ஒரு முழுமை பெற்ற குடியேற்றமாக மாற்றித் தருமாறு இப் பகுதி அரச உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ள போதும் அது இதுவரை நடைபெற்றதாக தெரியவில்லை.
எனவே, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் ஒரு மாவட்டததில் முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரச ஊழியர்களின் குடியேற்றத்தினை முழுமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக் குடியிருப்பாளர்கள் கோருகின்றனர்.