செய்திகள்

அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியாக இருக்காது: சுசில் பிரேமஜயந்த

அடுத்த பொதுத் தேர்தலின் பின்னரும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியாக இருக்காது என அக்கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருக்கின்றார். கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை இன்று கட்சியின் தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதுதான் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நோக்கம். இப்போது சுதந்திரக் கட்சி பலமான ஒரு கட்சியாக உள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள் எமக்கு ஆலோசகர்களாக உள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது தலைவராக உள்ளார்.

இதற்கும் மேலாக பாராளுமன்றத்தில் இப்போதும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 127 ஆசனங்கள் உள்ளன. இந்த நிலையிலேயே நிமல் சிறிபால டி சில்வாவை எதிர்க்கட்சித் தலைவராக நாம் நியமித்தோம். இதன் மூலம் மேலும் ஆசனங்களை நாம் பெற்றுக்கொள்வோம்.

நுகேகொடையில் புதன்கிழமை நடத்தப்பட்ட கூட்டம் வெற்றியளித்துள்ளது. அக்கூட்டம் வெற்றிலையின் பலத்தை பிரதிபலித்திருக்கின்றது. அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த கூட்டத்துக்கு செல்வது தொடர்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவேண்டியிருந்தது” எனவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்த பசில் ராஜபக்‌ஷ அமெரிக்கா சென்றுவிட்ட நிலையிலேயே அவரது இடத்துக்கு சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.