செய்திகள்

கிழக்கு மாகாண தபால் திணைக்களத்தின் அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவை

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கு அறிமுக அடையாள அட்டையினை வழங்கும் பணிகளை கிழக்கு மாகாண தபால் திணைக்களத்தின் நிர்வாக காரியாலயம் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றது.

பாடசாலைகளில் கல்வி பயிலும் 16வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இந்த அறிமுக அடையாள அட்டையினை வழங்கும் தபால் திணைக்களத்தின் நடமாடும் சேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்கள் விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பரீட்சைகளுக்கு தோற்றும்போது அடையாளத்தினை உறுதிப்படுத்துவதில் கடந்த காலத்தில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில் கிழக்கு மாகாண அஞ்சல் திணைக்களம் மாணவர்களுக்கு அஞ்சல் அறிமுக அடையாள அட்டையினை வழங்கும் நடமாடும் சேவைகளை முன்னெடுத்துவருகின்றது.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் வேண்டுகோளுக்கு இணங்க அறிமுக அடையாள அட்டையினை வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கான அறிமுக அடையாள அட்டையினை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திருமதி ஹரிதாஸ் திலகவதியின் வேண்டுகோளின் அடிப்படையில் தபால் திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு அஞ்சல் அலுவலகம் இணைந்து இன்று அடையாள அட்டையினை வழங்கும் பணியை முன்னெடுத்தது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண தபால் திணைக்களத்தின் பிராந்திய நிர்வாக உத்தியோகத்தர் மதனசேகரம் தம்பிஐயா,மட்டக்களப்பு தபால்; திணைக்களத்தின் பிரதம அஞ்சல் அதிபர் எம்.ஜெயரட்னம் உட்பட தபால் திணைக்களத்தின் உயரதிகாரிகள்,உத்தியோகத்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களுக்கான அறிமுக அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கிவைக்கப்பட்ட.

நாளை அம்பாறை மாவட்டத்தில் நடமாடும் சேவைகள் நடாத்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாண தபால் திணைக்களத்தின் பிராந்திய நிர்வாக உத்தியோகத்தர் மதனசேகரம் தம்பிஐயா தெரிவித்தார்.

IMG_0039 IMG_0046 IMG_0048 IMG_0051