செய்திகள்

அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்புப் பணி: களத்தில் இறங்கியது சர்வதேச குழு (படங்கள் இணைப்பு)

அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் விதத்தில் தங்களின் கண்காணிப்புப் பணிகள் அமையும் என்று ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்குத் தலைமை தாங்கி வந்துள்ள இந்தியாவின் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் எஸ். குரேஷி கூறியுள்ளார்.

எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை சென்றுள்ள சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் இன்று திங்கட்கிழமை முதல் தங்களின் கண்காணிப்புப் பணிகளைத் தொடங்கவுள்ளனர்.

தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்பிரியவுடனும் உள்நாட்டுக் கண்காணிப்பாளர்களுடனும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள சர்வதேச கண்காணிப்பாளர்கள், தங்களின் பணிகள் தொடர்பாக கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளனர்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் விதத்தில் தங்களின் கண்காணிப்புப் பணிகள் அமையும் என்று ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்குத் தலைமை தாங்கி வந்துள்ள இந்தியாவின் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் எஸ். குரேஷி கூறியுள்ளார்.

அரச சொத்துக்கள் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தப்படுகின்றமை, பொலிஸார் பக்கச்சார்பாக செயற்படுகின்றமை, ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களையும் எதிர்காலத்தில் நிலைமை மோசமாக மாறும் என்ற அச்சத்தையும் சில தரப்பினர் தங்களிடம் முன்வைத்துள்ளதாக எஸ். குரேஷி கூறியுள்ளார்.

வடக்கில் இராணுவத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படலாம் என்றும், அப்பிரதேசங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் வீதிகளில் அவசியமற்ற விதத்தில் 400 வரையான இராணுவ வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் எதிரணியினர் தம்மிடம் கூறியுள்ளதாக அசிய கண்காணிப்பாளர்களின் தலைவர் தெரிவித்தார்.

எனினும், இம்முறை நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தமுடியும் என்ற நம்பிக்கை தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்பிரியவுக்கு இருப்பதாக அவரிடம் நடத்திய பேச்சுவார்த்தை மூலம் தெரியவந்ததாகவும் எஸ்.குரேஷி கூறினார்.

இதற்கிடையே, தங்களின் அழைப்பின் பேரில் இம்முறை தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்காக தெற்காசிய தேர்தல் முகாமையாளர்கள் ஒன்றியத்திலிருந்தும் ஆசிய தேர்தல்கள் அதிகாரிகள் ஒன்றியத்திலிருந்தும் மொத்தமாக 54 கண்காணிப்பாளர்கள் இலங்கை வந்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் தெரிவித்தார்.

இவர்களைத் தவிர, உள்நாட்டு கண்காணிப்பு அமைப்புகளின் அழைப்பின் பேரில் சுமார் 40 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களும் இலங்கை தேர்தல்கள் ஆணையாளரின் அழைப்பின்பேரில் காமன்வெல்த் அமைப்பிலிருந்து 9 பேர் கொண்ட கண்காணிப்பாளர்கள் குழுவொன்றும் இலங்கை வந்துள்ளது.

வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களைத் தவிர ஏராளமான உள்நாட்டுக் கண்காணிப்பாளர்களும் இம்முறை தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் கூறினார்.

3

2

1