செய்திகள்

அதிகாரத்தை பயன்படுத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும்: ஜனாதிபதிக்கு அங்கஜன் கடிதம்.

தங்களுக்கு இருக்கின்ற ஏனைய கட்சிகளின் ஆதரவையும் தங்களின் அதிகாரவரம்பையும் பயன்படுத்தி இனப்பிரச்சினைக்குத் 100 நாள் வேலைத்திட்டத்தில் தீர்வு காண உடனடியாக முன்வர வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு எழுதியுள்ள கடித்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அக்கடித்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது –

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலமர்வு கௌரவ ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன ஆகிய தங்களின் தலைமையில் கட்டுநாயக்காவில் அண்மையில் இடம்பெற்றது. இதில் தேர்தலுக்கு முன்னதாக ஏனைய கட்சிகளுடன்; இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக கொள்கை அளவில் தீர்வு காணப்பட்டது.

இதில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது தொடர்பாகவும் தொகுதி வாரியான தேர்தல் முறையினை கொண்டு வருதல் என்ற விடையங்களும் உள்ளடக்கப்பட்டன. நிறைவேற்று அதிகார பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பது கடினமான ஒரு விடையமாகும் புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்திக்குள் முதலாவதாக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினை, மற்றும் தேசிய இனபிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதுடன் வடக்கு மாகாணத்துக்கான தலைமை நீதிமன்றம் ஒன்றும் உருவாக்கப்படல் வேண்டும்;. தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற சார்பில்; தங்களிடம் இக்கோரிக்கையை முன்வைக்கின்றேன்.

மேலும் வடக்கு கிழக்கு மக்கள் மாற்றத்திற்காக அதிகளவில் வாக்களித்து தங்களின் வெற்றிக்கு வழிவகுத்தனர் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

எனவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாமல் அரசியல் அமைப்பின் 13 வது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது கடினமாகும். எனவே தற்போது தங்களுக்கு நிறைவேற்று அதிகாரமும் ஏனைய கட்சிகளின் ஆதரவு இருக்கின்றது. எனவே வடக்கு கிழக்கு மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கிடைத்துள்ள இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாறாக வடக்கில் இராணுவ ஆளுனரை மாற்றுவது, பிரதம செயலாளரை மாற்றுவது மட்டும் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினையைத் தீர்த்து விடாது. நல்ல அதிகாரிகளை நியமித்தல் என்பது அரசின் கடமையாகும் இங்கு தேசிய பிரச்சினைக்கு தீர்வு என்பது தேசிய நிறைவேற்று சபையில் வலியுறுத்தல் வேண்டும் அவ்வாறு வலியுறுத்தப்படாவிட்டால் அது வரலாற்று தவறாக அமைந்து விடும்.

அத்துடன் அமைக்கப்பட இருக்கின்ற தேசிய அரசாங்கமானது ஒன்றிணைந்து 1987 யூலை 29 இல் கையெழுத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் படி அதே ஆண்டு நவம்பர் 14 இல் இலங்கை பாராளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் ஆகியவற்றை அறிவித்தது. இதனால் ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. இந்த ஒன்பது மாகாணசபைகளில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. அது பிற்பட்ட காலங்களில் பலனற்று போய் விட்டது. 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் இந்திய – இலங்கை உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இருந்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நீண்டகால அரசியல் செயற்பாட்டின் பிரதிபலனாக அது கட்டியெழுப்பப்பட்டது. எனவே 13 வது சட்டமானது மாகாண சபைக்கு வழங்குதல் என்பது எந்த விதமான அதிகார மறுப்புக்கும் இடம் இல்லை இது ஏற்கனவே நடைமுறை படுத்தப்பட்ட ஒன்று ஆகும்.

இலங்கை தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வொன்று அவசியம் என்ற அடிப்படையை அது கொண்டிருந்தது. தற்சமயம் எமது புதிய அரசாங்கம் இப் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியும் என்ற வகையில் இனியும் காலம் தாழ்த்தாமலும் மற்றும் தேசிய பிரச்சினைக்கும் தீர்க்கமான தீர்வை காணவேண்டி உள்ளது. இத் தீர்வானது சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களும் ஒற்றுமையாக இணைந்து அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வாக அமைதல் வேண்டும். இதற்கு தங்களின் தலைமையிலான இப் புதிய அரசாங்கத்திற்கு நல்லதோர் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தங்களுக்கு இருக்கின்ற அதிகார வரம்மைப் பயன்படுத்தி இந்த இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும். இதனைத் தவறவிடாது நாம் எல்லோரும் இணைந்து தீர்வுகாண தங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என அங்கஜன் அதில் தெரிவித்துள்ளார்.