செய்திகள்

அமெரிக்காவிடமிருந்து எந்த அழுத்தமும் இல்லை: ஜனாதிபதி மைத்திரிபால

இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை வகுப்பைப் பொறுத்தவரையில் அமெரிக்காவிடமமிருந்து எந்தவிதமான அழுத்தங்களையும் இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்பாக கருத்துவெளியிட்ட ஜனாதிபதி, இலங்கையில் ஜனநாயகமும் மனித உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் ஜோன் கெரியின் கோரிக்கையாக இருந்தது எனத் தெரிவித்தார்.

கடந்த வாரம் இலங்கைக்கு வந்திருந்தபோது ஜோன் கெரி இது தொடர்பில் தெளிவாகத் தெரிவித்திருந்ததாகவும் ஜனாதிபதி கொழும்பில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய போது நேற்றுத் தெரிவித்தார்.

இலங்கை எந்த நாடுகளுடன் உறவுகளை வைத்துள்ளது என்பதையிட்டு அமெரிக்கா அக்கறை காட்டவில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கடந்த வாரம் இலங்கை வந்திருந்த ஜோன் கெரி, ஜனாதிபதியுடன் இரு தரப்பு உறவுகள் உட்பட பல விடயங்கள் குறித்தும் விரிவான பேச்சுக்களை நடத்தியிருந்தார்.