செய்திகள்

அமெரிக்கா காங்கிரஸ் பிரதிநிதியின் பிரேரணையும் தவறான பிரச்சாரங்களும்

யதீந்திரா

கடந்த மே மேதம் 18ம் மிகதி அமெரிக்க காங்கிரஸில், இலங்கை தொடர்பில் ஒரு பிரேரணை முன்வைக்கப்பட்டது. அமெரிக்க சமஸ்டி அரசுகளில் ஒன்றான வடக்கு கரலைனாவை (U.S. Representative for North Carolina’s 2nd congressional district) பிரதிநிதித்துவம் செய்யும் காங்கிரஸ் பிரதிநிதி ஒருவரால் இந்த பிரேரணை அறிமுகம் செய்யப்பட்டது. இவரது பெயர் (Deborah K. Ross) டெவோறா ரோஸ். ஐக்கிய அமெரிக்கா, ஐம்பது சமஸ்டி அரசுகளை உள்ளடக்கிய ஒரு தேசம். அதில் ஒன்றுதான் வடக்கு கரலைனா குறித்த பிரேரணைக்கு, மேலும் நான்கு காங்கிரஸ் பிரதிநிதிகள் இணையனுசரனை வழங்கியிருக்கின்றனர்.

அமெரிக்க காங்கிரஸில் இதற்கு முன்னர் இவ்வாறான பிரேரணைகள் முன்வைக்கப்படதில்லையா? இதற்கு முன்னரும் இலங்கை தொடர்பில் பல பிரேரணைகள் அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு சில காங்கிரஸ் பிரதிநிதிகள் இணையனுசரனை வழங்கியிருக்கின்றனர். 2019ஆம் ஆண்டும் இது போன்றதொரு பிரேரணையை டீடைட துழாளெழn என்னும் காங்கிரஸ் பிரதிநிதி முன்வைத்திருந்தார். இந்த பிரேரணை யுத்தம் நிறைவுற்று பத்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு கூறல் விடயத்தில் அமெரிக்காவினதும் சர்வதேச சமூகத்தினதும் தலையீட்டை வலியுறுத்தியிருந்தது. தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் பிரேரணைக்கு இணையசரனை வழங்கியிருப்பவர்களில் இவரும் ஒருவர்.

இதற்கு முன்னரும், இலங்கை தொடர்பில் பல பிரேரணைகள் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அவை அனைத்தையும் இங்கு குறிப்பிடுவது பயனுடையதல்ல என்பதால் அவற்றை தவிர்த்துவிடுகின்றேன். ஒன்றை உதாரணமாக தருகின்றேன். 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தம் தொடர்பில் நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது, அதனை ஆதரித்தும் அமெரிக்கா காங்கிரஸில் ஒரு பிரேரணை முன்வைக்கப்பட்டது. இதனை முன்வைத்தவர் ஒபாமா ஜனாதிபதியாக இருந்த போது, இராஜங்கச் செயலாளராக இருந்த ஜோன் ஹெரி ஆவார். இதே போன்று பிறிதொரு காங்கிரஸ் பிரதிநிதியும் 1987 இந்தி – இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்து பிரேரணை ஒன்றை கொண்டு வந்திருக்கின்றார். இது ஒரு நல்ல வாய்ப்பு. இதனை பயன்படுத்தி இலங்கையின் சமானத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதே அந்த பிரேரணைகளின் சாரம்சமாகும். தற்போது முன்வைக்கபட்டிருக்கும் பிரேரணை தொடர்பில் உரத்துப் பேசிய பலருக்கும், இந்த விடயங்கள் தெரியாமல் இருக்கலாம்.

இதிலிருந்து அமெரிக்க காங்கிஸில் பிரேரணைகள் முன்வைக்கப்படுவதும், அதற்கு சிலர் இணையனுசரனை வழங்குவதும் ஆச்சரியமான ஒன்றல்ல என்பது இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும். அப்படியாயின் இந்த பிரேரணை தொடர்பில் ஏன் சலசலப்புக்கள் ஏற்பட்டது? நான் ஏற்கனவே குறிப்பிட்ட 2019இல் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் எவருமே பேசியிருக்கவில்லை. அரசாங்கமும் அது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. குறிப்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கண்டன அறிக்கைகளை வெளியிடும் அளவிற்கு இந்த பிரேரணையில் அப்படியென்ன இருக்கின்றது?

தற்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த பிரேரணையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சில சொற்கள்தான் அனைத்து சலசலப்புக்களுக்குமான காரணமாகும். இந்த பிரேரணையை தமிழர் தரப்புக்கள் பாராட்டியிருப்பதற்கும், அரசாங்கம் கண்டித்திருப்பதற்கும் இதுவே காரணம். அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட்ட ஒரு பிரேரணையில், முதல் தடவையாக, வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்னும் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. வடகிழக்கு வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட பகுதியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் தொடர்பில் குறிப்பிடுகின்ற போது, சுதந்திரத்திற்கான அமைப்புக்கள் என்னும் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. தமிழர் தரப்புக்கள் குறித்த பிரேரணையை பாராட்டி அறிக்கைகள் வெளியிட்டதற்கு இதுவே காரணமாகும். அரசாங்கம் இந்த பிரேரணையை கண்டித்து, அறிக்கை வெளியிட்டதற்கும் இதுவே காரணம்.

இந்த பிரேரணை மே. 18ம் திகதி, குறித்த காங்கிரஸ் பிரதிநிதியால் முன்வைக்கப்பட்டது. ஆனால் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, இரண்டு வாங்கள் கழித்துத்தான், நித்திரை கலைத்திருந்தார். இது உண்மைக்கு மறானது எனவும், இதனை அமெரிக்க வெளிவிவகார குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்க வேண்டாம் என்றும் தினேஸ் குறிப்பிட்டிருந்தார். இந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மேற்படி சொற்கள் சிங்கள-பௌத்த தேசியவாத தரப்புக்களை உசுப்பிவிட்டிருக்கின்றது. இது தொடர்பில் பலரும் எழுதியிருக்கின்றனர். இவ்வாறான எழுத்துக்கள்தான் வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தில் விழித்துக் கொண்டமைக்கான காரணம்.

ஆனால் தமிழ்த் தேசிய சூழலில், இந்த பிரேரணை சரியாக விளங்கிக் கொள்ளப்படவில்லை. அமெரிக்கா தமிழர் தாயகக் கோட்டபாட்டை ஏற்றுக் கொண்டுவிட்டதாக சிலர் விவாதிக்க முற்பட்டனர். சிலரோ, அமெரிக்கா விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு விடுதலை இயக்கமாக ஏற்றுக் கொண்டுவிட்டதாக பிரச்சாரம் செய்தனர். நீண்டகாலமாக தமிழ் நாட்டில் வாழ்ந்துவரும் காசிஆனந்தன், அமெரிக்கா விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏற்றுக் கொண்டுவிட்டது போல், இந்தியாவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். பழ நெடுமாறன், அமெரிக்கா தமிழர் தாயகக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டுவிட்டது என அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது வை.கோபாலசாமியும், குறித்த பிரேரணையை அடிப்படையாகக் கொண்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கின்றார். அதே போன்று – அமெரிக்கா, தமிழிரின் தாயகக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டுவிட்டதாக ஈழ தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனர். இவ்வாறான தவறான பார்வைகள், அறியாமையிலிருந்து வருகின்றதா அல்லது தெரிந்து கொண்டே தவறான கருத்துக்களை பிரச்சாரம் செய்கின்றனரா?

உண்மையில், குறித்த பிரேரணையை, அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையுடன் தொடர்படுத்தி, பிரச்சாரங்களை மேற்கொள்வது அடிப்படையிலேயே தவறானதாகும். வடகிழக்கு தமிழர் விவகாரத்தை அமெரிக்கா மனித உரிமை விவகாரமாகவே நோக்குகின்றது. இது தொடர்பில் முன்னரும் நான் எனது கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கின்றேன். அமெரிக்க வெளிவிவகார அணுகுமுறையை பொறுத்தவரையில், இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு யுத்தமாகும். இந்த அடிப்படையில்தான் 1997ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்தை அமெரிக்கா சர்வதேச பயங்கரவாத பட்டியலில் இணைத்தது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வெளியிடும் சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையில் விடுதலைப் புலிகளும் சேர்க்கப்படுகின்றனர். யுத்தம் முடிவுற்று 12 வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் கூட, விடுதலைப் புலிகள் தொடர்பான அமெரிக்காவின் அடிப்படையான பார்வையில் மாற்றம் இல்லை.

இந்த நிலையில் அமெரிக்கா விடுதலைப் புலிகளை, ஒரு விடுதலை அமைப்பாக ஏற்றுக் கொண்டுவிட்டதாக பிரச்சாரம் செய்வதானது, ஒரு அரசியல் நேர்மையற்ற செயலாகும். மேலும் இந்த பிரேரணையின் அடிப்படையில் நோக்கினால், விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமல்ல, ஏனைய இயக்கங்களும் கட்சிகளும்தான் சுதத்திரத்திற்காக செயற்பட்ட அமைப்புக்களாக காட்டப்பட்டிருக்கின்றது. அதாவது, சிலர் இப்போதும் ஒட்டுக் குழுக்கள், மண்டையன் குழு, என்று கிண்டல் செய்யும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் கூட, மேற்படி, சுதந்திர அமைப்புக்குள் அடங்கும். நான் எந்தவொரு அமைப்பையும் இவ்வாறு விமர்சிப்பதை ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு வாதத்திற்காகவே இந்த விடயத்தை இங்கு குறிப்பிடுகின்றேன். குறித்த பிரேரணையை முன்வைத்து விவாதிப்போர், இந்த விடயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே, மேற்படி விடயங்களை, இங்கு வலியுறுத்தியிருக்கின்றேன்.

சில அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் மத்தியில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்குரிய இடம் என்னும் புரிதலை ஏற்படுத்துதில், அமெரிக்காவில் இயங்கும் சில புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர். அந்த அடிப்படையில் இது ஒரு சிறிய மாற்றம்தான். ஆனால் இதனை முன்வைத்து அளவுக்கதிகமாக, கற்பனைகளை வளர்த்துக் கொள்வதுதான் தவறானது. ஆனால் இவ்வாறான பிரேரணைகள் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்திவிடப் போவதில்லை. ஏனெனில் இது ஒரு சில காங்கிரஸ் பிரதிநிதிகளின் வாதம். இதனை பெரும்பாண்மையான அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு வேளை அவ்வாறு ஏற்றுக் கொண்டால், அமெரிக்காவின் வெளிவிவகார அணுகுமுறையில் சில அதிர்வுகளை ஏற்படுத்தலாம். ஆனால் அதற்கான சூழல் பிரகாசமாக இல்லை. இலங்கை தொடர்பான அமெரிக்காவின் வெளிவிவகார அணுகுமுறையானது மனித உரிமைகள் சார்ந்த ஒன்று. ஆனால் அதற்கு சில வரையறைகள் உண்டு. இலங்கை விடயத்தில் புதுடில்லியின் அணுகுமுறையே முதன்மையானது. அமெரிக்காவில் சில மாற்றங்கள் ஏற்பட்டால் கூட, அந்த மாற்றங்களின் மீது, புதுடில்லியின் கடைக்கண் பார்வை படவேண்டியது அவசியம். அவ்வாறில்லாவிட்டால் அந்த மாற்றங்கள் முழுமையடையாது.

அமெரிக்க காங்கிரஸ் என்பது 535 உறுப்பினர்களை கொண்ட ஒரு அரசியல் கட்டமைப்பு. இது பிரதிநிதிகள் சபையையும்  செனட்டையும் உள்ளடக்கியிருக்கும். அமெரிக்க பிரதிநிதிகள் சபையானது, கீழ்சபை என்று அழைக்கப்படும். செனட் மேல்சபை என்று அழைக்கப்படும். பிரதிநிதிகள் சபை 435 உறுப்பினர்களை கொண்டது. செனட் 100 உறுப்பினர்களை கொண்டது. இந்த இரண்டையும் உள்ளடக்கிய அமெரிக்க காங்கிரஸிலேயே, இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்கா காங்கிரஸில் முன்வைக்கப்படும் பிரேரணைகளுக்கு இடையில் வேறுபாடுகள் உண்டு. இணைந்த பிரேரணைகள், கூட்டாக முன்வைக்கப்படும் பிரேரணைகள், சாதாரண பிரேரணைகள் என்று மூன்று வகையான பிரேரணைகள் இருக்கின்றன. இது பற்றிய விளக்கங்களுக்குள் நான் செல்லவில்லை. அது தமிழர்களுக்கு தேவையானதல்ல. தற்போது முன்வைக்கபட்டுள்ள பிரேரணை சாதாரண பிரேரணை (ளiஅpடந சநளழடரவழைn) என்னும் வகையை சேர்ந்தது. இந்த பிரேரணை (ழெவ pசநளநவெநன வழ வாந Pசநளனைநவெ கழச யஉவழைn) அமெரிக்க ஜனாதிபதியின் பரிசீலனைக்கு செல்லாது. இந்த தகவல்கள் தற்போதைக்கு போதுமான என நினைக்கின்றேன்.

இந்தப் பிரேரணை தொடர்பிலான உண்மைகளை முன்வைக்கும் நோக்கிலேயே, இங்கு சில விடயங்களை சுட்டிக் காட்டியிருக்கின்றேன். ஏனெனில் தவறான பிரச்சாரங்கள் எந்தவொரு நன்மையையும் தராது. மக்களை போலியான நம்பிக்கைக்குள் தள்ளிவிடுவதன் மூலம், நாம் எதனையும் சாதிக்க முடியாது. 2009இற்கு பின்னரான அரசியல் சூழலில் இவ்வாறான போலியான நம்பிக்கைகளே அதிகம் தமிழர் அரியலை ஆக்கிரமித்திருக்கின்றது.