செய்திகள்

அரசாங்கமும் எதிர்க் கட்சியும் பாராளுமன்றத்தை கலைக்க அஞ்சுகின்றது : சபாநாயகர்

பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்ல அரசாங்கமும் எதிர்க் கட்சியும் அஞ்சுவதாக சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
20வது திருத்தம் , பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் பாராளுமன்றத்தை கலைக்கும் விடயங்கள் தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையே நடைபெற்ற காரசாரமான கருத்து மோதல்களின் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் இல்லையேல் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது அதற்கு பதிலளித்துள்ள பிரதமர்  “19வது திருத்தத்தை நிறைவேற்றிய பின்னர் 20வது திருத்தத்தை நிறைவேற்றும் வரை பாராளுமன்றத்தை கலைக்க வேண்டாமென தெரிவித்து வந்த எதிர்க்கட்சி இப்போ பாராளுமன்றத்தை கலைக்குமாறு கூறுகின்றது. எமக்கு பிரச்சினையில்லை. பாராளுமன்றத்தை கலைக்க நாமும் விருப்பம். ஆனால் எதிர்க்கட்சித்தான் விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.
இவ்வேளையில் இரண்டு தரப்புக்குமே பாராளுமன்றத்தை கலைக்க பயம் போல்தான் எனக்கு தெரிகின்றது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.