செய்திகள்

அழிக்கவந்த ஐ.பி.எல். நிரந்தர தடை வருமா? இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்தியாவே கொரோனாவால் அல்லோலப்படும் நிலையில், ஐ.பி.எல்., போட்டிகள் மட்டும் கோலாகலமாக நடந்தன. இதை கண்டு சாமான்ய ரசிகர்கள் பொங்கி எழுந்தனர். போட்டிகளை உடனே நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். ஆனால், பணம் சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்ட பி.சி.சி.ஐ., கொஞ்சமும் அசரவில்லை. இறுதியில் வீரர்களுக்கே கொரோனா ஏற்பட, ஒருவழியாக ஐ.பி.எல்., தொடரை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.

தேச நலனில் அக்கறை இல்லாமல் வர்த்தக நோக்கில் செயல்படும், ஐ.பி.எல்., தொடருக்கு நிரந்தர தடை விதிக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) சார்பில் 2008ல் இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) தொடங்கப்பட்டது. கார்பரேட் கட்டுப்பாட்டில் இருந்த அணிகள், வீரர்களை ஆடு மாடுகளை போல ஒரு தரம்…இரு தரம்…மூன்று தரம் என கூவி, கோடிகள் கொடுத்து ஏலத்தில் வாங்கின. அடுத்து மைதானத்தில் அரங்கேறிய நடன பெண்களின் கவர்ச்சி ஆட்டமும் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. இது, விளையாட்டு அல்ல, லாபத்தை இலக்காக கொண்டு நடத்தப்படும் தொடர் என்பது ஆரம்பத்திலேயே வெட்டவெளிச்சமானது.

பின் 2013ல் ‘ஸ்பாட் பிக்சிங்’ எனப்படும் சூதாட்ட பிரச்னை ஐ.பி.எல்., தொடரில் பூதாகரமாக வெடித்தது. அணிகளின் உரிமையாளர்கள், முன்னணி வீரர்களே சூதாட்டத்தில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரச்னை உச்சநீதிமன்றம் வரை சென்றது. சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. ராஜஸ்தானுக்காக ஆடிய ஸ்ரீசாந்திற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இவை எல்லாம் கண்துடைப்பாகவே இருந்தது. சென்னை அணி மீண்டும் களம் கண்டது. ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட தடையும் ரத்தானது. பணம் பிரதானம்ஐ.பி.எல்., தொடரில் பணம் தான் முக்கியம். தாய்நாட்டுக்காக விளையாடுவதைவிட பணத்திற்கே வீரர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர். சில செல்வந்தர்களின் ஆட்டமாக மாறிவிட்டது. சில மணி நேரத்தில் பல கோடிகள் கிடைப்பதால் ஐ.பி.எல்., மட்டும் போதும் என்ற மனநிலைக்கு வீரர்கள் வந்துவிட்டனர். இதன் காரணமாக ஐ.சி.சி., நடத்தும் உலக கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் இந்திய அணி 2011க்கு பின் சாதிக்கவில்லை. இந்திய விளையாட்டின் வளர்ச்சிக்கு உதவாத ஐ.பி.எல்., இனி வேண்டாம் என்பேதே ரசிகர்களின் எண்ணம்.

ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் வீரர்களின் வருமானத்தை பார்த்தால்மலைப்பாக இருக்கும். 2008 ல் சென்னை அணிக்காக ரூ. 6 கோடிக்கு தோனி வாங்கப்பட்டார். இவரது தொகை ரூ. 15 கோடியாக உயர்ந்தது. இதுவரை ரூ. 152 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். அடுத்த இடத்தில் ரோகித் சர்மா(ரூ.146 கோடி, மும்பை அணி), கோஹ்லி(ரூ. 143 கோடி,பெங்களூரு அணி) உள்ளனர். சர்வதேச அளவில் புறக்கணிக்கப்பட்ட வீரருக்கு கூட கோடிகளை கொட்டி கொடுப்பர். இங்கு தான் கார்பரேட்களின் கறுப்பு பணம் புகுந்து விளையாடுகிறது. இந்த ஆண்டு ஏலத்தில் தென் ஆப்ரிக்காவின் கிறிஸ் மோரிசை ராஜஸ்தான் அணி ரூ. 16. 25 கோடிக்கு வாங்கியது. இப்படி விரைவாக கோடிகள் சம்பாதிக்க கிரிக்கெட் ஒன்றும் லாட்டரி, சினிமா அல்ல. எந்த வியாபாரத்திலும் இவ்வளவு விரைவாக கோடீஸ்வரராக முடியாது. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, பல கோடிகள் குவிந்ததால் தான் சூதாட்டம் போன்ற அவலம் அரங்கேறியது.

இந்தியாவில் மூன்று வேளை உணவுக்கு வழியில்லாமல் லட்சக்கணக்கான மக்கள் கஷ்டப்படுகின்றனர். ஆனால், அன்னிய ‘டிவி’ சேனல் ஒன்று ஐ.பி.எல்., ஒளிபரப்பு உரிமையை 2017 ல் 5 ஆண்டுகளுக்கு ரூ. 16,537 கோடிக்கு வாங்கியது. 10 வினாடி விளம்பரத்துக்கு 10 லட்சம் வாங்குகிறது. ஆனாலும் இந்திய நலனுக்காக பெரிதாக எதுவும் செய்வதில்லை. ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் வீரர்கள் பல கோடி சம்பளமாக பெறுகின்றனர். இவர்கள் வருமான வரி போக, 20 சதவீத தொகையை இந்தியாவில் உள்ள ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு கொடுத்து உதவ வேண்டும். இதற்கேற்ப விதிமுறை வகுக்க வேண்டும்.(15)

.