செய்திகள்

அவசரமாக இடம்பெற்ற அதிகார ‘கை’ மாற்றம்: பின்னணியில் இடம்பெற்ற அதிரடி நிகழ்வுகள்

– சபரி –

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது போது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது சுமூகமாக அதிகார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மகிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்புத்தான். மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி அப்போது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அதிகாலையிலேயே ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகைக்கு அழைத்த மகிந்த, சுமூகமாக அதிகார மாற்றம் இடம்பெறும் எனவும், அதற்கு தான் தடையாக இருக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

அதனையடுத்து வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியளவிலேயே 10 வருடமாக இருந்து அவர் அதிகாரத்தைச் செலுத்திய அலரி மாளிகையைவிட்டு வெளியேறினார். தேர்தல் முடிவுகளில் அரைப் பகுதிகூட அப்போது வெளிவந்திருக்கவில்லை.

இவ்வளவும் தெரிந்த செய்தி, தெரியாத பரபரப்பான செய்தி ஒன்றும் உள்ளது.

3உள்வீட்டு இரகசியங்கள் பலவற்றை கசியவிடும் கொழும்பு ரெலிகிராப் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கிய உடனடியாகவே தனது விதி இதுதான் என்பதை மகிந்த புரிந்துகொண்டுவிட்டார். உடனடியாக மூன்று நடவடிக்கைகளுக்கு அவர் தயாரானார். சட்டமா அதிபருடன் தொடர்புகொண்டு தேர்தலை செல்லுபடியற்றதாக்குவது ஒன்று. பாராளுமன்றத்தைக் கலைப்பது இரண்டு. அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தி தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வது என்பது மூன்றாவது. இவைதான் அவரது திட்டம் என்கிறது ரெலிகிராப்.

தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையாளரால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டு, புதிய ஜனாதிபதித் தெரிவு பற்றிய பிரகடனடித்தை ஆணையாளர் வெளியிடும் வரையில் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் மகிந்த ராஜபக்ஷவிடம் இருந்தது.

அமைச்சரவையை மகிந்த அவசரமாகக் கூட்டுகின்றார். பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற செய்தி வெள்ளிக்கிழமை இலங்கை நேரப்படி அதிகாலை 3.00 மணியளவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதன் பின்னணி இதுவாக இருக்கலாம். அந்த வேளையில் அலரி மாளிகையைச் சுற்றி இராணுவமும் குவிக்கப்பட்டது இந்தப் பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியது.  மகிந்தவின் உத்தரவின் பெயரில்தான் அதிகாலையில் திடீரென இராணுவம் குறிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

ஆனால், சட்டமா அதிபர் ராஜபக்ஷவின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள திட்டவட்டமாக மறுத்துவிட்டார் என ரெலிகிராப் கூறுகின்றது. அதேவேளையில், இராணுவத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் திட்டத்தை இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க நிராகரித்துவிட்டார். சட்டத்துக்குப் புறம்பாக எதனையும் செய்வதற்கு தன்னால் முடியாது என ராணுவத் தளபதி கூறிய நிலையில் மகிந்தவின் திட்டங்கள் அனைத்தும் குலைந்துபோயின.

இந்த நிலையில் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மகிந்த ராஜபக்ஷவினால் வேறு எதனையும் செய்ய முடியவில்லை.
அதனால் பாராளுமன்றமும் கலைக்கப்படவில்லை. அமைச்சரவையும் அவசரமாகக் கூட்டப்படவில்லை. தேர்தல் முடிவுகளும் ரத்துச் செய்யப்படவில்லை.

அலரி மாளிகைக்கு
அதிகாலை சென்ற ரணில்

இந்த நிலையில்தான் வேறு தெரிவுகள் எதுவும் இல்லாத நிலையில், அதிகாலை ரணில் விக்கிரமசிங்கவை அழைத்த ராஜபக்ஷ, தோல்வியை ஏற்றுக்கொண்டார். மக்களின் விருப்பத்தை மதிப்பதாகத் தெரிவித்தார். சுமூகமான அதிகார மாற்றத்துக்கு தான் உதவுவதாகவும் உறுதியளித்தார்.

SRI LANKA-MALDIVES-DIPLOMACYஇதனைச் சொன்ன மகிந்த ராஜபக்ஷ, சில கோரிக்கைகளை ரணிலிடம் முன்வைத்தார். முதலாவது, தனதும் தனது குடும்பத்தவர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரினார். அதனை ரணில் ஏற்றுக்கொண்டார். குறிப்பாக தனது சகோதரர் கோதாபாய ராஜபக்ஷ நாட்டைவிட்டுச் செல்வதற்கான அனுமதியைக் கோரினார்.

ரணிலுடன் ஆலோசிக்கப்பட்ட பின்னரே கோதாபாய மாலைதீவுக்கு இராணுவ விமானத்தைப் பயன்படுத்தி தனது மனைவியுடன் சென்றதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கோதாபாய சிங்கப்பூர் செல்வதற்கே முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், இராணுவ விமானம் தரையிறங்குவதற்கு சிங்கப்பூர் அனுமதி வழங்காது என்பதால் அவர் மாலைதீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ரணிலுடனான பேச்சுக்களில் இவ்விடயங்களில் இணக்கம் காணப்பட்டதையடுத்தே பத்துவருடமாக தான் வசித்துவந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையை காலி செய்தகொண்டு 6.00 மணியளவில் வெளியேறினார். அதிகாரக் கைமாற்றம் சுமூகமாக நடைபெறும் என்பது அப்போதுதான் உறுதியாகியது.

மைத்திரியின் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்வது 10 ஆம் திகதி சனிக்கிழமை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவசரம் அவசரமாக வெள்ளி மாலையிலேயே அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டமைக்கும் ராஜபக்ஷவிடமுள்ள அதிகாரத்தை தம்வசப்படுத்த வேண்டும் என்ற அவசரம்தான் காரணமாக இருந்தது. அதற்கிடையில் ஏதாவது நடந்துவிடுமா என்ற அச்சம் காணப்பட்டதால்தான் தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்ட ஆறு மணி நேரத்திலேயே ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் பதவியேற்றுக்கொண்டனர்.

கட்சியின் தலைவராக
தொடர்ந்தும் இருப்பேன்

அலரிமாளிகையிலிருந்து வெளியேறிய ராஜபக்ஷ, காலை 9.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு உணர்ச்சிகரமான பிரியாவிடை அளிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய மகிந்த ஒரு விடயத்தை தெளிவாகச் சொன்னார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை தான் விட்டுக்கொடுக்கப்போவதில்லை. “தொடர்ந்தும் கட்சியின் தலைவராகவே இருப்பேன்” என்றார்.

Mahinda_Rajapaksaஜனாதிபதி செயலகத்தின் உணர்வுபூர்வமான பிரியாவிடையைத் தொடர்ந்து ஹெலிகாப்டரில் ஏறிய ராஜபக்ஷ, அவரது சொந்த இடமான மெதனமுலையிலுள்ள தமது பரம்பரை இல்லத்துக்கு வந்தடைந்தார். ஊர்மக்கள் உணர்ச்சிக்கொந்தளிப்புடன் அவரை வரவேற்றார்கள். பெருந்தொகையான மக்கள் கதறியழுது அவரை வரவேற்றதைக் காணமுடிந்தது. மக்களை ஆறுதல்படுத்தி அவர் நிகழ்த்திய உரையில் ஒரு விடயத்தைத் தெளிவாகச் சொன்னார்.

வடக்கு கிழக்கு மலையக வாக்குளினாலேயே நான் தோல்வியைச் சந்தித்தேன். நீங்கள் என்னுடன்தான் உள்ளீர்கள். என்ற வகையில் அவரது உரை அமைந்திருந்தது. அதாவது, தேர்தல் முடிவுகளின்படி சிங்கள மக்கள் தொடர்ந்தும் மகிந்தவுடன்தான் உள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில், கட்சியின் தலைவராக தான் தொடர்ந்தும் இருப்பேன் என அவர் தெரிவித்த கருத்தும், வட, கிழக்கு, மலையக வாக்குகள்தான் தனது தோல்விக்குக் காரணம் என அவர் தெரிவித்திருப்பதும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய கருத்துக்கள். அடுத்த தேர்தலை இலக்குவைத்து அவர் காத்திருக்கப்போகின்றார் என்பதை இது காட்டுகின்றது. அதேவேளையில், ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் அவரைப் பலவீனப்படுத்திவிடவில்லை என்பதையும் இது உணர்த்துகின்றது.

மைத்திரியை ஜனாதிபதியாக்கிய கூட்டணிக்கட்சிகளிடையே உருவாகப்போகும் முரண்பாடுகள் தனக்குச் சாதகமான நிலையை உருவாக்கும் வரையில் அவர் காத்திருக்கப்போகின்றார். இடையில் வரப்போகும் ஜெனீவா போன்ற பிரச்சினைகளும் புதிய அரசாங்கத்தைத்தான் பாதிக்கும் என அவர் கணக்குப் போடுகின்றார். சர்வதேச விசாரணையிலிருந்து மகிந்தவைப் பாதுகாப்பது என்பது உட்பட பல வாக்குறுதிகளை மைத்திரி வழங்கியிருக்கின்றார் என்பது கவனிக்கத்தக்கது.

சந்திரிகாவின் திட்டம்
சாத்தியமானதாகுமா?

2மகிந்த ராஜபக்ஷவின் இந்த நிலைப்பாடு சந்திரிகாவை பாதிக்கக்கூடியது. மகிந்தவைத் தோற்கடித்து கட்சித் தலைமையை மீண்டும் கைப்பற்றுவது என்ற திட்டத்துடன்தான் மைத்திரியை களத்தில் இறக்கும் தீர்மானத்தை சந்திரிகா எடுத்திருந்தார். கட்சித் தலைவராக தான் தொடர்ந்தும் இருக்கப்போவதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருப்பது இதனால்தான். ஆக, கட்சியின் தலைமைப் பதவிக்கான மோதல் ஒன்று சந்திரிகாவுக்கும் ராஜபக்ஷவுக்கும் இடையில் விரைவில் ஆரம்பமாகலாம்.

அரசாங்கத்தை அமைத்திருப்பதை அடிப்படையாக வைத்து எம்.பி.க்களை தமது பக்கத்துக்குத் திருப்பும் முயற்சிகளை சந்திரிகா முன்னெடுப்பார். இதன் மூலம் மகிந்தவைப் பலவீனப்படுத்தி கட்சித் தலைமையைக் கைப்பற்றுவது என்பதுதான் அவரது மாஸ்ட்ர் பிளான். அதற்கு இடம்கொடுத்தால் தான் ஓரங்கட்டப்பட்டுவிடுவேன் என்ற அச்சம் மகிந்தவுக்கு உள்ளது. அதனால், கட்சித் தலைமையைத் தக்கவைக்க என்ன விலையையும் கொடுக்க அவர் தயாராக இருப்பார் என எனக் கூறலாம்.

சிங்களக் கடும்போக்காளர்கள் மத்தியில் அவருக்குத் தொடர்ந்தும் இருக்கும் ஆதரவு இவ்விடயத்தில் அவருக்குக் கைகொடுக்கலாம். தனது சொந்தக் கிராமத்துக்குச் சென்றுவிட்ட மகிந்தவைச் சந்திக்க ஆயிரக்கணக்கான மக்கள் சென்றுவருவதை அவரது செல்வாக்கு சிங்கள மக்கள் மத்தியில் தொடர்ந்திருப்பதை உறுதிப்படுத்துகின்றது. அதனைத் துணையாக வைத்து தொடர்ந்தும் அரசியலில் அசைக்கமுடியாத ஒரு சக்தியாக தன்னால் இருக்க முடியும் என அவர் கருதுகின்றார் என்பதை மெதனமுலையில் அவர் நிகழ்த்திய உரை உணர்த்துகின்றது.

போர் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தவர் என்ற முறையில், மகிந்தவுக்கு பாதுகாப்பையும், கௌரவத்தையும் கொடுப்பதற்கு மைத்திரியும், ரணிலும் தயாராகவே உள்ளனர். வெள்ளிக்கிழமை அதனை அவர்கள் அதனை வெளிப்படுத்தியிருந்தார்கள். சிங்களக் கடும்போக்காளர்கள் மத்தியில் மகிந்தவுக்குள்ள செல்வாக்கை உணர்ந்தவர்களாகவே அவர்கள் உள்ளனர். அதற்கு முரணாகச் செல்வது தமக்கு ஆபத்து என்பதை அவர்களும் உணர்கிறார்கள். இதற்கு மத்தியில் கட்சியின் தலைமையை சந்திரிகா கைப்பற்றுவது இலகுவானதாக இருந்துவிடப்போவதில்லை. ஆனால், சந்திரிகா நம்பிக்கையுடன் களம் இறங்கியிருக்கின்றார்.

1012005 இல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த களமிறக்கப்பட்டபோது கட்சித் தலைமை சந்திரிகாவிடம்தான் இருந்தது. சோனியா காந்தியின் ஸ்ரைலில் கட்சித் தலைமையை தனது கையில் வைத்துக்கொண்டு ஜனாதிபதியாக மகிந்த இருக்கட்டும் என்பதுதான் சந்திரிகாவின் திட்டமாக இருந்தது. ஆனால், அதிலுள்ள ஆபத்தை உணர்ந்து கட்சித் தலைமையைக் கைப்பற்றிய மகிந்த, சந்திரிகாவை ஓரங்கட்டுவதிலும் வெற்றிபெற்றார். இன்றும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக சந்திரிகா இருந்தாலும், மகிந்தலை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் உருவாக அவர் ஓரங்கட்டமைப்பட்டமைதான் காரணம். மைத்திரியை களம் இறக்கி மகிந்தவை தோற்கடிக்கும் செயற்பாட்டில் சந்திரகா அதிதீவிரமாக இறங்கியமைக்கு அதுதான் காரணம்.

சந்திரிகாவைப் இது முதலாவது மைல்கல். கட்சித் தலைமையைக் கைப்பற்றி மீண்டும் அதிகாரத்துக்கு வருவதுதான் அவரது இலக்கு. அதற்கு இடம்கொடுப்பதில்லை என்பதில் மகிந்த உறுதியாகவிருக்கின்றார். அதற்காக அவர்கள் எடுக்கப்போகும் நகர்களை அடுத்துவரும் வாரங்களில் நாம் பார்க்கலாம்.