செய்திகள்

ஆட்சி மாற்றம் எமக்குப் பின்னடைவல்ல: சிறிய இடைவேளை என்கிறார் டக்ளஸ் தேவானந்தா

இன்று உருவாகியிருக்கும் ஆட்சி மாற்றம் என்பதும் சிலர் நினைப்பது போல் எமக்கு வீழ்ச்சியோ அன்றி பின்னடைவோ அல்ல. மாறாக நாம் மக்களுக்கு வழங்கி வந்த தொடர் சேவையில் சிறியதொரு இடை வேளையே இதுவாகும். ஆகவே இது குறித்து நாம் பெரிதும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கின்றார்.

நேசமிக்க எமதுகட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் என்ற தலைப்பில் கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இதனை அவர் தெரிவித்திருக்கின்றார். இதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“தமிழ் பேசும் மக்களின் அரசியல் இலக்கை வென்றெடுக்கும் எமது யதார்த்த அரசியல் பயணமானது இன்று எமது மக்களின் வாழ்வில் பிரகாசமான நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. எமது மக்களுக்காக நாம் உறுதியோடு தியாகங்களை ஏற்று ஆற்றிய அர்ப்பணங்களே இன்று நம்மை மக்களிடமிருந்து பிரிக்க முடியாதவர்களாக வரலாறு நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

நாமே மக்களுக்கான சேவகர்கள், நாமே மக்களின் நண்பர்கள் என்பதை சகலரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். நாம் எல்லாக் காலங்களிலும் மக்களுடனேயே வாழ்ந்து வந்திருக்கின்றோம்.

இன்றைய அரசியல் சூழல் எமக்குப் புதிதல்ல. நாம் ஏற்கனவே நான்கு தடவைகள் ஆட்சி மாற்றங்களைக் கடந்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு ஆட்சி மாற்றங்களின் போதும் எமது அரசியல் வரலாறு முடிவிற்கு வந்து விட்டதாகவே எமக்கு எதிரான சக்திகள் எக்காளமிட்டு வந்திருக்கிறார்கள். ஆனாலும் நாம் தடைகளைக் கடந்து எழுந்து நிமிர்ந்து நடந்து வந்திருக்கிறோம்.

அந்த வகையில் இன்று உருவாகியிருக்கும் ஆட்சி மாற்றம் என்பதும் சிலர் நினைப்பது போல் எமக்கு வீழ்ச்சியோ அன்றி பின்னடைவோ அல்ல. மாறாக நாம் மக்களுக்கு வழங்கி வந்த தொடர் சேவையில் சிறியதொரு இடை வேளையே இதுவாகும். ஆகவே இது குறித்து நாம் பெரிதும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

தென்னிலங்கை அரசியல் தலைமைகள் யாராக இருப்பினும், அவர்களை அதிகமாக எதிர்பார்ப்பதும், குறைவாக மதிப்பிடுவதும் எமது மக்களை அரசியல் ரீதியாகப் பின்னடைவுக்கே இட்டுச்செல்லும். இதையே நான் அடிக்கடி கூறிவந்திருக்கின்றேன். ஆகவே, தென்னிலங்கை அரசியல் தலைமைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும், அவர்களின் குணாதிசயங்கள் எவ்வாறானதாக இருக்கும் என்பதையும் நீண்டகால அனுபவத்தினூடாகச் சரியாகவே மதிப்பீடு செய்து வந்துள்ளேன்.

எமது இணக்க அரசியல் ஊடாகவே, மக்களின் கோரிக்கைகளை வெற்றிகொள்ள முடியும் என்ற எமது யதார்த்த வழிமுறையை நோக்கியே எமது அரசியல் எதிராளிகளும் வந்திருக்கிறார்கள். இன்று மத்திய அரசோடு உறவை வெளியிலிருந்து பேணுவதாக இவர்கள் கூறுவது, நாளை வசதியாக அரசை எதிர்ப்பதாகக் காட்டி வாக்குகளை அபகரிப்பதற்காகவே.

ஆனால்; ஈ.பி.டி.பியினராகிய நாம் புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு வெளியில் இருந்து ஆதரவளிப்போம் என்று கூறியிருப்பது ஓர் நல்லெண்ண முடிவாகும்.எமது மக்களின் அரசியல் பிரச்சினைக்கான நியாயமான தீர்வு குறித்தும் எமது மக்கள் எதிர்கொண்டு வருகின்ற உரிமைப் பிரச்சினை உட்பட ஏனைய நாளாந்தப் பிரச்சினைகள்; குறித்தும் புதிய ஜனாதிபதியோடு பேசி, ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அவருடன் இணைந்து செயற்படுவது குறித்து விரைவில் முடிவு செய்வேன். புதிய ஜனாதிபதியிடம் எமது மக்களின் சார்பாக கோரிக்கைகள் பின் இணைப்பாக உங்களுக்கு கிடைக்கச் செய்யப்படும்.

நாம் அரசுக்கு ஒன்றையும் மக்களுக்கு இன்னொன்றையும் கூறும் அரசியல் பச்சோந்திகளல்ல. மாறாக நாம் எங்கும் ஒரே முகத்தையே காட்டி வரும் உன்னதமான உறுதிமிக்க அரசியல் போராளிகள் என்பதே உண்மையாகும்.

எமது உறுதியும் உழைப்பும் அரசியல் நேர்மையும் எத்தகையது என்பதைத் தென்னிலங்கை அரசியல் தலைமைகள் நன்கு புரிந்து கொண்டுள்ளன.

புதிய ஜனாதிபதியின் 100 நாள் வேலைத்திட்டம் முடிந்து ஏற்படுத்தப்படும் புதிய அரசில் மத்திய அரசுக்குள் இருந்து எமது மக்களின் உரிமைக்குரலாக எமது குரல்கள் ஒலிக்க முடியுமாக இருந்தால் நாம் “உரிமைக்குக் குரல் உறவுக்குக் கரம்” என்ற கொள்கையின் அடிப்படையில் எமது நடைமுறை யதார்த்த அரசியல் பயணத்தைத் தொடர்வோம்.

என் இனிய கட்சி உறுப்பினர்களே!…

தற்போதைய தற்காலிகமான அரசியல் சூழலை எண்ணி நீங்கள் சோர்ந்து விடாதிருப்பதை நான் பாராட்டுகின்றேன். உங்கள் உறுதியை மெச்சுகிறேன்.

தொடர்ந்தும் மக்களிடம் செல்லுங்கள். இதுவரை நாம் என்ன செய்திருக்கிறோம் என்பது குறித்தும், அரசியலில் பலமடைந்தால் எமது மக்களுக்காக எதை நாம் செய்வோம் என்பது குறித்தும் தெளிந்த மனத்தோடு இருக்கும் எமது மக்களிடம் எமது கருத்துக்களை மேலும் எடுத்து சொல்லுங்கள்.

எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்களின் அபிவிருத்திக்கும் கௌரவமான வாழ்விற்கும் எதிரானவர்கள் அரங்கேற்றும் சுயலாப அரசியலை மக்களிடம் மேலும் தெளிவுபடுத்துங்கள். எமது கட்சியின் வேண்டுகோளை ஏற்று கடந்தகால தேர்தல்களை விடவும் அதிகூடிய வாக்குகளை எமது மக்கள் எமக்கு வழங்கியிருக்கிறார்கள்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் எமது மக்கள் விரும்பும் வீணைச் சின்னத்தில் நாம் பெரு வெற்றி பெற்று நிமிர மக்களுடன் இணைந்து பணியாற்றுங்கள். எமது சத்தியப் பயணம் எமக்கும், எம்மோடு அணி திரளும் மக்களுக்கும் ஒருபோதும் தோல்விகளைத் தந்துவிடாது. எமது பாதையில் அழிவுகளோ, இழப்புகளோ, துன்பங்களோ, துயரங்களோ கிடையாது. எமது கடந்தகால வரலாறு இந்த உண்மையை இன்றுவரை நிதர்சனமாக்கியிருக்கிறது.

புதிய உத்வேகத்துடன் மக்களுக்காக உழையுங்கள். நான் விரைவில் ஒவ்வொரு தொகுதிக்கும் வருகை தந்து உங்களுடன் மக்களையும் சந்திப்பேன். ஊர் பார்த்த உண்மைகளாக நாம் செய்த சேவைகள் யாவும் எமது பாதையில் மக்களுக்கான ஒளிவிளக்காக வழிகாட்டி நிற்கின்றன.”