செய்திகள்

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து மேதா பட்கர் வெளியேற்றம்

ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுவில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதாய்க்க கண்டித்து சமூக ஆர்வலர் மேதா பட்கர் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்கள் பிரசாந்த் பூஷணும் யோகேந்திர யாதவும். அதோடு இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் இணைந்து கேஜ்ரிவால் சர்வாதிகாரியாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர். இதனால் நேற்று தேசிய செயற்குழுவில் இருந்தே இவர்கள் அனைவரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நீக்கத்தால் கட்சியின் முக்கிய நபரும் தேசம் அறிந்த பிரபலமுமான சமூக சேவகர் மேதா பட்கர் மிகக் கடுமையாக அதிருப்தி அடைந்து ஆம் ஆத்மியை விட்டே வெளியேறிவிட்டார்.

இது குறித்து மேதா பட்கர் பத்திரிக்கையாளர்களிடம், பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தியவர் பிரசாந்த் பூஷண். நாட்டின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை வலுப்படுத்தியவர்களில் முதன்மையானவர். மேலும் அடித்தட்டு மக்கள் குறிப்பாக விவசாயிகளின் பேராதாரவைப் பெற்றவர் யோகேந்திர யாதவ். அவர்களை அப்படி நீக்கியிருக்கக் கூடாது. ஆம் ஆத்மியில் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுவதை நான் விரும்பவில்லை. அதேபோல் ஒருவரே பல பொறுப்புகளை வகிப்பதும் சரியானதும் அல்ல. ஆகையால் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்கிறேன் என்று அறிவித்துள்ளார்.

கட்சி உடையும் வேகத்தைப்பார்த்தால் அடுத்த பொதுத்தேர்தலுக்குள் ஆம் ஆத்மி எனும் கட்சி இருந்த சுவடே தெரியாமல் சென்று விடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.