செய்திகள்

ஆலயங்கள் சார்ந்த பிரச்சினைகளே தினமும் கிடைக்கின்றன:இது எமது சமயத்துக்கே இழுக்கு என்கிறார் யாழ் அரச அதிபர்

” யாழ்.மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினமும் குறைந்தது மூன்று ஆலயங்களிலிருந்தாவது பிரச்சினைகள் வந்து கொண்டேயிருக்கின்றன.இவ்வாறு வருபவற்றுள் ஆலய நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகளே அதிகம்.எமது ஆலயங்களில் நிலவும் இவ்வாறான பிரச்சினைகள் எமது சமயத்துக்கே இழுக்கு அல்லது சாபக்கேடாக அமைந்துள்ளன”.

இவ்வாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்..இணுவில் அறிவாலயத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த சனிக்கிழமை(23.5.2015) மேற்படி நிலையத்தின் தலைவர் அ.குகதாசன் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று நான் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையேற்று இரண்டு மாதங்கள் தான் ஆகின்றன.

ஆனால் இந்த இரண்டு மாதங்களில் பல ஆலயப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.இவ்வாறான பிரச்சினைகள் பெரும்பாலும் சிறிய ஆலயங்களிலிருந்து வருவது குறைவு.வளர்ச்சியடைந்த ஆலயங்களிலிருந்து தான் வருகின்றன.பெருமளவு நிதியைக் கையாள வேண்டிய தேவை ஏற்படும் போது தான் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதாக எனது அலுவலர்கள் குறிப்பிடுவார்கள்.அது உண்மை தான்.நிர்வாகத்திற்குள் ஏற்படும் முரண்பாடுகள் மாத்திரமன்றி ஆலயக் குருக்கள்மாருக்கும்,நிர்வாகத்தினருக்குமிடையிலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.இவ்வாறான பிரச்சினைகளுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டு தானிருக்கும்.

இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் அந்தணர்களை ஏனையவர்கள் மதிக்கும் நிலையை உருவாக்கவும் சித்தங்கேணியைச் சேர்ந்த குருக்களொருவர் அந்தணர்களைக் கொண்டதொரு குழுமத்தை உருவாக்கவிருக்கிறார்.இது நல்லதொரு முன்முயற்சி.இவ்வாறான செயற்பாடுகள் எமது சமயத்திற்கு நன்மை பயப்பதாக அமையும்.

இதைவிடுத்து ஆலயங்களை வியாபார நிலையங்களாகக் கருதி எடுக்கப்படும் நடவடிக்கைகள் எங்கள் சமயத்திற்கு வளர்ச்சியை ஏற்படுத்தாது.இந்த விடயத்தில் அந்தணர்கள் முதற்கொண்டு சமூகத்திலுள்ள அனைத்தப் பிரஜைகளும் கவனம் செலுத்த வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் திசைமாறிப் போவதற்குச் சிறந்த பொழுது போக்குகள் இன்மையும் ஒரு காரணமாகும்.முன்னைய காலங்களில் இளைஞர்கள் இணைந்து விளையாடுவார்கள்.அல்லது வேறு பயனுள்;ள விடயங்களில் இணைக்கப்படுவார்கள்.நாங்கள் சிறு வயதாகவிருக்கும்; போது தோட்டம் அல்லது வேறு வேலைகளில் இணைக்கப்பட்டிருப்போம்.

இன்று சமூகப் பிறழ்வுகள் ஏற்படுவதற்கு இளைஞர்கள் சரியான முறையில் வழிகாட்டப்படாமேயே காரணமாகும்.இளைஞர்கள் வழி தவறிச் செல்வதால் சட்ட ரீதியான பிரச்சினைகள் மாத்திரமன்றி இன்னும் பல நெருக்கடிகளுக்கும் அவர்களைச் சார்ந்திருக்கும் சமூகமும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

இன்றைய இளைய சமுதாயம் திசைமாறிப் போவதற்கு அவர்கள் சமூகத்திலுள்ள பொறுப்பு வாய்ந்தவர்களால் உரிய முறையில் வழிகாட்டப்படாமையும் ஒரு காரணமாகும்.சமூகக் கட்டமைப்பிலுள்ள நூலகம் உள்ளிட்ட பயனுள்ள விடயங்களில் ஒவ்வொரு இளைஞர்களையும் இணைத்துக் கொள்வதன் மூலம் அவர்கள் திசைமாறிப் போவதிலிருந்து தடுக்க முடியும்.ஆகவே இனிவரும் காலத்தில் அதிக இளைஞர்களை சமூகக் கட்டமைப்புக்களில் அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்வது காலத்தின் தேவை.

சமூதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனில் அது சுலபமான காரியமல்ல.கட்டடம் கட்டுவதோ அல்லது வேறு விடயங்களைச் செயற்படுத்துவதோ சுலபம்.ஆனால் சமூதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனில் அது நீண்ட கால நோக்கில் மாத்திரமே செயற்படுத்த முடியும்.ஆனாலும் ஒரு கருமம் வெற்றிகரமாகச் செயற்படுத்த வேண்டுமெiனில் விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் தேவை.

இணுவில் கிராமம் ஏனைய கிராமங்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளதொரு கிராமம்.சைவத்தை மதிக்கின்ற மாண்பு நிறை கிராமம்.பண்பானவர்கள்,சைவநம்பிக்கையுடையவர்கள் வாழ்கின்ற கிராமம்.

இந்த அறிவாலயத்தின் ஆரம்பகர்த்தாவாகச் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் விளங்குவதாக அறிந்தேன்.அவர் இவ்வாறான சமூகச் செயற்பாடுகளுக்காகப் பல நாடுகளுக்கும் சென்று நிதி சேகரிக்கிறார்.அவருடைய நல்ல நோக்கமும் அர்ப்பணிப்பான சேவையும் என்றும் வீண் போகாது.சமூக முன்னேற்றத்திற்கு நிதியுதவி வழங்குவதற்கு யாரும் முன்வராத எமது சமூக சூழலில் இந்த அறிவாலயத்தின் வளர்ச்சிக்கு நிதியுதவி வழங்குவதற்குப் பலரும் தயாராகவிப்பது மகிழ்ச்சிக்குரியது.அந்த வகையிலே அர்ப்பணிப்புணர்வுடனும்,நல்ல நோக்கத்துடனும் செயற்படுத்தப்படும் செயற்பாடுகள் வரவேற்புக்குரியது.இந்த அறிவாலயம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 10 ஆவது ஆண்டு நிறைவு விழாவைக் காண்கிறது.இன்னும் பல ஆண்டுகள் இந்த அறிவாலயத்தரின் பணி தொடர வேண்டுமென வாழ்த்துவதில் மனநிறைவடைகிறேன் என்றும் கூறினார்.
யாழ்.நகர் நிருபர்-

Religion (1) Religion (2) Religion (3) Religion (5) Religion (6) Religion (7) Religion (8) Religion (9) Religion (10) Religion (11) Religion (12)