செய்திகள்

ஆளும் கட்சிக்குத் தாவும் முடிவைக் கைவிட்ட மங்கள: சந்திரிகாவின் சமரச முயற்சியால் சமாதானம்

ஆளும் கட்சிக்கு மாறி முக்கிய அமைச்சுப் பொறுப்பு ஒன்றை ஏற்பது என்ற ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கொழும்பில் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் நான்கு தடவைகள் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, சிங்கபூருக்கு பயணிப்பதற்கு முன்னர், அவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும், கொழும்பிலுள்ள மங்களவின் வீட்டில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தப் பேச்சுக்களின் போது ஐ.தே.க. விலிருந்து வெளியேறி ஆளும் கட்சியுடன் இணையுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சுப் பதவியை இதற்காக மங்கள சமரவீர கோரியிருந்தார். அரச தரப்பும் இதனை ஏற்றுக்கொண்டிருந்தது.

ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டதையடுத்தே மங்கள சமரவீர உட்பட சிலர் கட்சியிலிருந்து வெளியேறுவதற்குத் தீர்மானித்திருந்தார்கள். இருந்தபோதிலும், பொதுவேட்பாளராக கரு ஜயசூரியவை நியமிப்பதற்கு இணக்கம் காணப்பட்டதையடுத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் மங்களவுடன் பேச்சுக்களை நடத்தியதாகத் தெரிகின்றது. இதனையடுத்து கட்சி மாறும் முடிவை அவர் கைவிட்டுள்ளார்.