செய்திகள்

ஆஸ்திரேலிய அணியைப்போன்று இந்திய அணியை உருவாக்க வேண்டும் என்பதுதான் என் லட்சியம்: விராட் கோலி

ஆஸ்திரேலிய அணியைப்போல இந்திய அணியை உருவாக்குவதே என் லட்சியம் என இந்திய டெஸ்ட் அணியின் புதிய தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள கோலி தனது லட்சியம் மற்றும் திட்டம் பற்றி கூறும்போது “மற்ற அணிகளை வீழ்த்த விரும்பும் அளவிற்கு அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்க வேண்டும். நிச்சயமாக அதற்கான திறமை இந்திய அணி வீரர்களுக்கு உள்ளது. அணியை ஒருங்கிணைத்து வழி நடத்தினால் போதும். ஆண்டுக்கு 250 முதல் 280 நாட்கள் வரை ஒன்றாக இருக்கிறோம். எனவே அணி வீரர்களுக்கு இடையே நெருக்கமான உறவை ஏற்படுத்துவது முக்கியம்.

முக்கியமாக தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடாமல் ஒரு அணியாக இணைந்து விளையாட வேண்டும். ஆஸ்திரேலிய அணியை களத்தில் இருந்து பார்க்கும்போது இதுதான் ஒற்றுமையான அணி வீழ்த்தப்பட வேண்டிய அணி என தோன்றும். அதுபோல இந்திய அணியையும் உருவாக்க வேண்டும் என்பதுதான் என் லட்சியம்” என தெரிவித்துள்ளார்.