செய்திகள்

இணுவிலில் தனியார் கல்வி நிலையத்திற்குள் மோதலிலில் ஈடுபட்ட நால்வருக்கு 6 மாத கடூழியச் சிறை

கடந்த ஆண்டு யாழ்.இணுவிலுள்ள தனியார் கல்வி நிலையமொன்றுக்குள் அத்துமீறி உள் நுழைந்து மோதலில் ஈடுபட்ட நால்வருக்கு நேற்று முன்தினம் 8 ஆம் திகதி திங்கட்கிழமை மல்லாகம் நீதவான் சின்னத்துரை சதீஸ்தரனால் ஆறு மாத கடூழியச் சிறைத் தண்டணை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர்கள் நால்வரையும் தலா 5 ஆயிரம் ரூபா அபராதமாகச் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இணுவில் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர்கள் அதே பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையமொன்றுக்குள் புகுந்து கைகலப்பில் ஈடுபட்டிருந்தனர்.இதனையடுத்து சந்தேகநபர்கள் நால்வர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து 10 மாத காலமாக வழக்கு விசாரணைகள் மல்லாகம் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் குறித்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.சந்தேகநபர்கள் தாம் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்தே நீதவானால் மேற்படி தீர்ப்பு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்.நகர் நிருபர்-