செய்திகள்

இந்தியப் படையை இலங்கைக்கு அனுப்பியது தவறு: இந்திய அமைச்சர்

இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பிவைப்பதென இந்திய அரசாங்கம் 1987 இல் எடுத்த முடிவு ‘கொள்கை வகுப்பில் ஒரு உயர் மட்டத் தவறு’ என இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சரும், முன்னாள் இந்திய இராணுவ அதிகாரியுமான ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்திருக்கின்றார்.

“இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் போர் ஒன்று  நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இலங்கையும் இந்தியாவும் உடன்படிக்கை ஒன்றுக்குச் சென்றது தவறு” எனக் குறிப்பிட்ட சிங், “விடுதலைப் புலிகள் மீது இந்தியா எந்தக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை” எனவும் சுட்டிக்காட்டினார்.

“இந்தியப் படை சமாதானத்தை பாதுகாப்பதற்காகவே அங்கு சென்றிருந்தது. போரில் ஈடுபடுவதற்காகவல்ல” எனவும் அவர் தெரிவித்தார்.  இந்தியப் படைகளுக்கு எதிராகப் போராடுவதற்காக விடுதலைப் புலிகளுக்கு ஜனாதிபதி பிரேமதாச உதவிகளை வழங்கினார் எனவும் அவர் இதன்போது குற்றஞ்சாட்டினார்.