செய்திகள்

இந்தியப் பிரதமருடன் மங்கள விரிவான பேச்சு: இலங்கை வருமாறும் அழைப்பு!

புதுடில்லியில் விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியப் பிதமர் நரேந்திர மோடியை இன்று காலை சந்தித்து விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சராப் பதவியேற்ற பின்னர் முதலாவது வெளிநாட்டு விஜயமாக நேற்று முன்தினம் புதுடில்லி வந்த மங்கள சமரவீர, நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து மூன்று மணி நேரம் பேச்சுக்களை நடத்தினார்.

இதனையடுத்து இந்தியப் பிரதமர் மோடியை இன்று காலை சந்தித்த சமரவீர, மைத்திரி அரசின் வேலைத் திட்டங்களை விளக்கியதுடன், இனநெருக்கடிக்கான தீர்வு முயற்சிகள், வடமாகாண சபையின் செயற்பாடுகள் என்பன உட்ப பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் பேச்சுக்களை நடத்தினார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதி அடுத்த மாதம் புதுடில்லிக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயம் குறித்தும் இதன்போது முக்கியமாக ஆராயப்பட்டது. இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இதன்போது இந்தியப் பிரதமர் மோடிக்கு இந்தப் பேச்சுக்களின் போது அமைச்சர் மங்கள விடுத்த அழைப்பை மோடி ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து இன்று மாலை இந்திய பாதுகாப்பு ஆலோசகரை சந்திக்கும் மங்கள சமரவீர, இன்றிரவே கொழும்பு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.