செய்திகள்

இந்தியாவின் 5 மாநிலங்களுக்கு ‘டவ்டே’ புயல் எச்சரிக்கை!

அரபிக்கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால், தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு நிலையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவுகள் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் உருவானது.இது, இன்று மேலும் வலுவடைந்து புயலாக மாறி அடுத்த, 24 மணி நேரத்தில் குஜராத் – பாகிஸ்தான் கடல் பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.’டவ்டே’ “Tauktae” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், வரும் 18ம் தேதி மாலை, குஜராத் கடல் பகுதியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், நாளை கன மழை பெய்யும். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.

இதையடுத்து, ஐந்து மாநிலங்களிலும் மீட்பு பணிகளில் ஈடுபட, தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த, 53 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-(3)