செய்திகள்

இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டிற்குப் பிறகு ஓய்வு: சங்கக்கரா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இலங்கை அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழும் குமார் சங்கக்கரா இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சங்கக்கரா 12271 ரன்கள் குவித்துள்ளார். இதில் 38 சதமும், 51 அரைசதமும் அடங்கும். இன்னும் ஒரு இரட்டை சதம் அடித்தால் பிராட்மேன் சாதனையை சமன் செய்வார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளார். சச்சின் தெண்டுல்கர் (15921),  பாண்டிங் (13378), கல்லிஸ் (13289), ராகுல் டிராவிட் (13288) ஆகியோர் முதல் நான்கு இடத்தில் உள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டின் டி20 உலக்கோப்பை போட்டியுடன் 20 ஓவர் போட்டியில் இருந்தும், சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் போட்டிக்குப்பின் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற சங்கக்கரா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின் இங்கிலாந்து கவுண்டி அணிக்காக விளையாட உள்ளார்.