செய்திகள்

இந்தியாவைப் போன்று பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்!- வீ. இராதாகிருஷ்ணன்

இந்தியாவைப் போன்று பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களுக்கு கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இராஜாங்க கல்வியமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயேதகத்திற்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

வடபகுதியில் இன்று யுத்தம் நிறைவுக்கு வந்துள்ளது. ஆனால் அங்கு இப்போது சட்டம், ஒழுங்கு நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் காணப்படுவதை உணர முடிகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் புங்குடுதீவு பிரதேசத்தில் பாடசாலை மாணவி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். மிகவும் சோகத்தை இந்த சம்பவம் கொடுத்திருக்கிறது.

இதன் மறுபக்கம் வடமாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருக்கிறது.

அதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் கவனயீனமாகவும், அசமந்தப் போக்காகவும் செயற்பட்டுள்ளனர். இது குறித்து பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இந்தியாவில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டதை அறிவோம்.

அப்படியான கடும் சட்டங்கள் இலங்கையிலும் நடைமுறைப்படுத்துவதே இவ்வாறான சம்பவங்களை தவிர்ப்பதற்கான சிறந்த வழி என அவர் தெரிவித்தார்.