செய்திகள்

இந்திய – இலங்கை மீனவர்களின் மூன்றாம் கட்ட 9 மணிநேர பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.

இந்திய – இலங்கை  மீனவர்களின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவடைந்துள்ளது. இந்திய மீனவர்களின் முன்வைத்த  7–அம்ச கோரிக்கையை பரிசீலித்து மே மாதம் அறிவிப்போம் என்று இலங்கை மீனவ பிரதிநிதி  தெரிவித்தார்.
இந்திய–இலங்கை மீனவர்களிடையேயான மூன்றாம் கட்ட இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று காலை 11 மணியிலிருந்து இரவு 8 மணி வரை 9 மணி நேரம் சென்னை டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய மீனவர்கள் சார்பில் 17 மீனவர்களும், இலங்கை மீனவர்கள் சார்பில் 10 மீனவ பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வரும் காலங்களில் இலங்கையில் தடைவிதிக்கப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தமாட்டோம், மீன்பிடி சீசன் காலங்களில் ஆண்டுக்கு 83 நாள்கள் மீன்பிடிக்க அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. இதனை பரிசீலித்து அறிவிப்பதாக கூறி உள்ளனர். நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்று நம்புகிறோம். இதன் மூலம் நல்ல முடிவு எட்டப்படுவதுடன், நல்ல தீர்வும் கிடைக்கும் என்று இந்திய மீனவ பிரதிநிதி அருளானந்தம் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழக மீனவர்கள் முன்வைத்த 7 அம்ச கோரிக்கையை தொடர்பான முடிவை  எதிர்வரும் மே மாதம் இரு அரசுகளுக்கும்  அளிக்க தீர்மானித்து உள்ளதாக  இலங்கை தேசிய மீனவர்கள் சம்மேளன பணிப்பாளர் சதாசிவம் கூறினார்.
கடந்த 30 ஆண்டு காலம் போர் நடந்த வடகிழக்கு மாகாண பகுதியில் தான் இந்த மீன்பிடி நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும், இந்த 7 அம்ச கோரிக்கை குறித்து ஏப்ரல் முதல் வாரம் இலங்கையில் வடகிழக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் உயர்மட்ட மாநாட்டில் பரிசீலித்து, முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல், இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள இரட்டைமடி வலை, சுருக்குவலை, இழுவை கப்பல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஆனால் தமிழக மீனவர்கள் இவற்றை பயன்படுத்துவதால் பிரச்சினை ஏற்படுகிறது என்றும்  தமிழ ஊடகங்களால் வெளியிடப்படும் மீனவர் தொடர்பான பிரச்சனைகள நன்கு விசாரித்து வெளியிடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில், பார்வையாளராக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், வெளியுறவு துறை, மீன்வளத்துறை மற்றும் துணைதூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.