செய்திகள்

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஒபாமாவின் ஆசிய விஜயம் மகிழ்ச்சியைத் தருகிறது: வடக்கு முதல்வர்

இந்திய குடியரசு தினத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆசியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டார் என்ற செய்தி எமக்கு மன மகிழ்ச்சியை அளிக்கின்றது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் கிறீன் கிராஸ் ஹோட்டலில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்:-

இலங்கை தமிழ் மக்களாகிய நாம் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய நாடுகள் பலவற்றிலிருந்து தார்மீக உதவி பெற நாம் ஆவலாய் உள்ளோம். இதனைவிட, வட, கிழக்கு மாகாணங்கள் பலவித உதவிகளை, பல்தரப்பட்ட விடயங்களில் இந்தியாவிடம் இருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதையும் கூறி வைக்கின்றேன்.

குடியரசு தினமான இன்று எல்லோரும் மகிழ்வுடன் இருக்க வேண்டிய பொழுதில் எமது குறைகளையே உங்களுக்கு எடுத்தியம்புவதாக இருக்கக்கூடாது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் எமக்கு நன்மை பயப்பனவாகவே நடந்து வருவதாகக் கருதுகின்றேன்.

எமது நாட்டு மக்கள் யாவரும் சேர்ந்து ஒரு புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளார்கள். அந்தச் சூழலை சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் என்ற எந்த விதப் பாகுபாடும் இன்றி மக்கள் யாவரும் சேர்ந்து உருவாக்கியுள்ளமை எமது நாட்டின் சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயத்திற்கு இடமளித்துள்ளதோ என்று எண்ணக் கூடியதாக அமைந்துள்ளது.

பல சிங்கள, ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், நாம் தமிழருடன் சேர்ந்து தான் இனி எமது நாட்டின் அரசியலை வழி நடத்த வேண்டும் என்று அவற்றில் பங்குபற்றுவோர், குறிப்பாகச் சிங்கள சகோதர, சகோதரிகள் பலர் கூறுவது தெம்ப+ட்டுவதாய் அமைந்துள்ளது. அரசியல் தலைவர்கள் எப்படி அமையினும் மக்களிடையே ஓரு விழிப்புணர்வு தோன்றியுள்ளதை இதிலிருந்து அவதானிக்கலாம் என்று தெரிவித்தார்.