செய்திகள்

இந்திய மீனவர் கொலை சம்பவங்கள் இனிமேல் தொடராது: இந்தியாவுக்கு மைத்திரி உறுதி

தமிழக மீனவர் கொலை விவகாரம் குறித்து ஜனாதிபதி சிறிசேனாவுடன் இந்திய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி கலந்துரையாடியுள்ளார். இதன்போது மீனவர் கொலை சம்பவம் இனி தொடராது என சிறிசேனா உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இலங்கை கடற்படை, ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற இளைஞர் மரணமடைந்தார்.மேலும் சாரோன் என்பவர் காயமடைந்தார்.

அதையடுத்து, இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மீனவர்கள் தங்கச்சிமடத்தில் போராடி வருகின்றனர். மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தோனேசிய தலைநகரான ஜகார்தா-வில் 20-ஆவது இந்தியப் பெருங்கடல் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி பங்கேற்றுள்ளார். இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனவும் இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். இதனிடையே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஹமீத் அன்சாரி சிறிசேனாவை சந்தித்து பேசினார். அப்போது மீனவர் கொலை சம்பவம் மீண்டும் நிகழாது என சிறிசேனா உறுதி அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.