செய்திகள்

இந்துக் கல்லூரிக்குள் கலகம் விளைவித்த மாணவர்கள் கைது

மானிப்பாய் இந்துக் கல்லூரிக்குள் நுழைந்து கலகம் விளைவித்து, மாணவர் விடுதியின் கண்ணாடிகளுக்கு கற்களை வீசிய யாழ்;ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் சிலரைக் நேற்றையதினம் கைது செய்து வைத்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு ஆனந்தாக் கல்லூரிக்கும் இடையே நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியை பார்வையிடச் சென்ற மாணவர்களில் சிலர், படி ரக வாகனம் ஒன்றின் மூலம் பல பாடசாலைகளுக்குச் சென்று குழப்பம் விளைவித்தனர்.

இவ்வாறு மானிப்பாய் இந்துக் கல்லூரிக்குள் நுழைந்த யாழ்;. இந்து மாணவர்கள், கல்லூரியில் கூச்சலிட்டு குழப்பம் விளைவித்தனர். குழப்பம் விளைவித்த மாணவர்களை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து விரட்டியுள்ளனர். அங்கிருந்து சென்றவர்கள் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் விடுதிக்குச் சென்று அங்குள்ள கண்ணாடிகளுக்கு கற்களை வீசித் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனை அவதானித்த பொதுமக்கள், மாணவர்களில் சிலரைப் பிடிக்க, மற்றவர்கள் படி வாகனத்தில் தப்பிச் சென்றனர். அந்தப் பகுதி இளைஞர்கள் சிலர், படி வாகனத்தை மோட்டார் சைக்கிளின் மூலம் விரட்டிச்சென்று கல்லுண்டாய் மாட்டொழுங்கையில் வைத்து அவர்களையும் பிடித்துள்ளனர்.

பிடிபட்ட அனைவரையும் பொதுமக்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மாணவர்களில் சிலர் மது அருந்திய நிலையில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.