செய்திகள்

இந்து சமுத்திரத்தில் சீனாவிற்கும் சிங்களத்திற்கும் எதிரான தமிழர் விடுதலை போராட்டம்

சிவா செல்லையா

விடுதலைப் போராட்டம் என்றால் ஓர் இனம் தனக்கு எதிரான அடக்குமுறைகளை உடைத்தெறிந்து தனது அரசியல் அடையாளம் மூலம் தனது இருப்பினைத் தக்க வைத்தல் ஆகும். விடுதலைப் போராட்டம் என்பது வெற்றியை இலக்காகக் கொண்டு மட்டும் இயங்குவதில்லை. இதுகாறும் சிங்களத்திற்கு எதிராக மட்டும் இலங்கையில் தமிழர்கள் போராட வேண்டி இருந்தது. இன்று சீனாவிற்கு எதிராகவும் நேரடியாகப் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழின அழிப்பில் இலங்கை அரசுக்கு உதவிய சீன அரசாங்கம், இன்று இலங்கையில் தனது சுயாதீன வர்த்தக அலகினை உருவாக்கி உள்ளது. இதன்மூலம் ஈழத்தமிழர்களது இறைமை இலங்கை அரசால் சீனா அரசிடமும் விற்கப்பட்டுவிட்டது. எனவே இலங்கையில் ஈழத்தமிழர்கள் சிங்கள அரசுக்கு எதிராக மட்டுமல்ல சீன அரசுக்கு எதிராகவும் போராட வேண்டியசூழல் ஏற்பட்டுவிட்டது.

தற்போதைய உலக அவல நிலையில் இலங்கையில் சிறுபான்மை இனங்கள் மேலும் அடக்கப்படும் சூழல் உள்ளது. தமிழர்களுக்கான அரசியல் அதிகாரங்கள், மறுக்கப்பட்ட சூழலில் கொழும்பில் துறைமுக நகரம் என்ற பெயரில் இலங்கையின் நிலப்பரப்பும், கடற்பிராந்தியமும், இந்து சமுத்திரத்தின் கப்பற்போக்கும் சீனாவிடம் கையளிக்கப்பட்டு விட்டது. இதனால் இலங்கையில் பெருமளவு சீனர்கள் நிரந்தரமாக குடியேறுவதற்கு ஏது நிலை ஏற்பட்டுள்ளது.

சீனா பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் இலங்கை அரசுக்கு நேரடியாக உதவும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மட்டுமல்ல, சீன பௌத்த ஆக்கிரமிப்பும் ஏற்படுவதற்கான சூழலை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு உள்ள மாகாணசபை அதிகாரங்களை விட சீனாவிற்கு பொருளாதார மொழி ரீதியான அதிகாரங்கள் கொழும்பு துறைமுக நகர்த் திட்டத்தால் அதிகம் ஏற்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு இந்திய சார்பாக அமைந்த இந்து சமுத்திர பாதுகாப்பு நலன்கள், தற்போதைய சூழலில் அற்றுப் போயுள்ளது. தமிழர் மீனவர் நலனும் பாதிக்கப்படுகின்றது.

ஈழத்தில் சீனத்தின் ஆக்;கிரமிப்புக்கு எதிராகவும், ஈழ விடுதலைக்காகவும் தமிழர்களின் போராட்டத்திற்கு தமிழ் மக்களதும், பாரத தேசத்தினதும் ஆதரவு தற்போது தேவைப்படுகின்றது.

தற்போதைய சூழல் இந்திய அரசினை இராஜ தந்திர ரீதியில் இலங்கை அரசு முறியடித்;துள்ளது.

கச்சதீவு ஒப்பந்தம், 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பனவற்றுக்கு அப்பால் தற்போதைய இலங்கை அரசின் நடவடிக்கை இந்தியாவின் பாதுகாப்பினை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளதுடன் இந்தியாவின் கப்பல் பயணம் சார்ந்த பொருளாதாரத்;தினையும் பாதித்து உள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பாரிய பணவீக்கத்தினை கொழும்புத் துறைமுக நகரம் ஏற்படுத்தலாம். சார்க் ஒப்பந்தத்தை மீறும் செயலாகவே கொழும்பு துறைமுக நகரம் அமைந்துள்ளது. இதனால் தமிழகம் அதிகம் பாதிக்கப்படும். எனவே தமிழக சட்டசபையில் ஈழத்தமிழரின் சுயாதீனத்தைப் பாதிக்கும் சிங்கள சீன அரசுகளின் இயந்திரங்கள் கொழும்பில் இருந்து செயற்படுவதற்கு எதிரான கண்டனத் தீர்மானங்கள் அவசியம். ஈழத்தமிழர்கள் மூலம் மீளவும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட வைத்தலை இந்தியா முயற்சிக்கக் கூடாது. மாறாக நீதியான அரசியல் அதிகாரங்களைப் பெறத் தனது முழுப்பலத்தினையும் உபயோகிக்க வேண்டும்.