செய்திகள்

இந்தோ- பசுபிக் விவகாரமும் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடும்

—தமிழ்த்தேசியக் கட்சிகள் விவாதத்தில் விபரமாகக் எடுத்துக் கூறுவதில்லை. பாதுகாப்பு அமைச்சுககு ஏன் இவ்வளவு நிதி என்று மாத்திரம் கேட்டுவிட்டு அமைதியாகிவிடுவர். ஏனெனில் அவர்களினால் அமெரிக்க, இந்திய அரசுகளை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது. ஆனால் சீனாவுக்கு எதிராக மாத்திரம் பேசி இந்திய- அமெரிக்க அரசுகளின் பாராட்டைப் பெறுகின்றனர்.  2009 இற்குப் பின்னரான சூழலில் மற்றுமொரு தேசிய இனம் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், சிறிய நாடொன்றில் இராணுவக் கட்டமைப்பு ஏன் நவீனமயப்படுத்தப்படுகின்றது? அதுவும் நிரந்த அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படாதவொரு பின்னணியில்—

-அ.நிக்ஸன்-

இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்க முற்படும் அமெரிக்க இந்திய மற்றும் சீன அரசுகள், இலங்கைக்கு அதிகளவு நிதியுதவிகளை ஏட்டிக்குப் போட்டியாக வழங்கி வருகின்றன என்பதை கொழும்பில் உள்ள இந்த நாடுகளின் தூதரகங்கள் வெளியிடும் அறிக்கைகள் காண்பிக்கின்றன.

அறிக்கை மூலம் வெளிப்படுத்தப்பட்டாலும் நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த வல்லாதிக்க நாடுகள் நம்புவதுபோல் இந்தோ- பசுபிக் பாதுகாப்பு என்று காண்பிக்கப்பட்டாலும், வடக்குக் கிழக்கில் தமிழர் முஸ்லிம்களின் இனப்பரம்பலைக் குறைக்கும் நோக்கிலேயே இலங்கை பாதுகாப்பு அமைச்சு நிதியைக் கையாளுகின்றது.

போர்க்குற்றம். மனி உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகக் கூறியே அமெரிக்கா 2011 ஆம் ஆண்டு இலங்கைக்கு வழங்கவிருந்த 13 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை நிறுத்திருயிருந்தது. இதன் பின்னணியிலேயே 2012 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அதன் பின்னரான சூழலில் அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச அமெரிக்க, இந்திய நலன்சார்ந்து திருகோணமலைத் துறைமுகம் மற்றும் எண்ணெய் குதங்களை வழங்குவது உள்ளிட்ட பல விடயங்களுக்கு ஒப்புக் கொண்டிருந்தார். இதன் பின்னணிலேயே அமெரிக்கா மீண்டும் 2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் மனிதாபிமான உதவிகள் என்ற அடிப்படையில் இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்க ஆரம்பித்து. அப்போது கொழும்பில் இருந்த அமெரிக்கத் தூதுவர் இலங்கைக்கு மீண்டும் நிதியுதவி வழங்குவது பற்றிச் செய்தியாளர்களிடம் விளக்கியிருந்தார்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இருந்து இன்று வரையான வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. போர் இல்லாத சூழலில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி எதுக்கு என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். சென்ற ஆண்டில் இருந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் நாடாளுமன்றத்தில் இந்தக் கேள்வியை முன்வைக்கிறது.

ஆனால் பிரதான சிங்களக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோ, ஜே.வி.பியோ இதுவரையும் அவ்வாறான கேள்விகளை முன்வைக்கவில்லை. 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரையான ரணில்- மைத்திரி அரசாங்கத்திலும் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டபோது மகிந்த தலைமையில் எதிர்க்கட்சியாக இருந்த ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவும் கேள்வி எழுப்பவில்லை. ஜே.வி.பி அது பற்றி ஒப்பாசாரத்துக்காகப் பேசியிருந்தது.

ஆகவே போர் இல்லாதவொரு சூழலிலும் முப்படையினரையும் பலமாக வைத்திருக்க வேண்டுமென்பதில் பிரதான சிங்களக் கட்சிகள் ஒரேகுரலில் இருக்கிறார்கள் என்பது தெளிவு. இந்தோ- பசுபிக் பாதுகாப்பை மையமாகக் கொண்டு அமெரிக்க- இந்திய அரசுகள் வெவ்வேறு அபிவிருத்திகளுக்காக நிதிகளை வழங்கும்போது சீனா அதனைவிடக் கூடுதலாகக் கொடுக்கின்றது.

ஆகவே பாதுகாப்பு அமைச்சுக்கான அதிகளவு நிதி ஒதுக்கீட்டு விடயத்தில் அமெரிக்க இந்திய மற்றும் சீன அரசுகளின் ஆதரவு ஏட்டிக்குப் போட்டியாக இருக்கின்றன என்பது இங்கே தெளிவாகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியமும் சீன அபிவிருத்தி வங்கியும் இலங்கைக்கு ஆயிரத்து 80 மில்லியன் அமெரிக்க டொலரைச் சென்ற யூன் மாதம் வழங்கியிருந்தது. சர்வதேச நாணய நிதியத்தினால் 780 மில்லியன் அமெரிக்க டொலரும் சீன அபிவிருத்தி வங்கியின் மூலம் கடனாக 300 மில்லியன் அமெரிக்க டொலரும் வழங்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் 150 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி அமெரிக்காவினால் வழங்கப்பட்டிருக்கின்றது. (ஆனால் இது பற்றி அமெரிக்கத் தூதரகம் அறிக்கை வெளியிடவில்லை.)

இலங்கையிடம் தற்போது கையிருப்பிலுள்ள அமெரிக்க டொலர்கள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி இந்த மாத ஆரம்பத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, இலங்கையில் அமெரிக்க டொலர்களின் கையிருப்பு 937 மில்லியன்.

சர்வதேச நாணய நிதியம் தனது உறுப்பு நாடுகளுக்குப் பணமாக மாற்றக்கூடிய S.D.R எனப்படும் விசேட மீள்செலுத்துதல் உரிமைகளின் படி நிதியுதவி வழங்கி வருகிறது. அதன்படி இலங்கையினால் 787 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், மத்திய வங்கி அறிக்கை கூறுகின்றது.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க, இந்திய மற்றும் சீன அரசுகளினால் வழங்கப்பட்ட நிதியுதவிகள் மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதைவிட, மேலும் அதிகமாகவே இருக்கும் என்பதைத் தூதகரங்கள் வெளியிட்ட அறிக்கைகளின் மூலம் அறியலாம்.

மிக விரைவில் சீன அபிவிருத்தி வங்கியின் கடன் தொகை மேலும் கூடுதலாகக் கிடைக்குமென நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆர்.ஆட்டிகல கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். ஆகவே இதனடிப்படையில் நோக்கினால் இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகள் குறிப்பாக இலகுக் கடன், நன்கொடை போன்றவை பற்றிய தகவல்கள் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகால வரவுசெலவுத் திட்டத்தில் உரிய முறையில் காண்பிக்கப்படவில்லை என்பது கண்கூடு.

ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் மாற்றி மாறி ஆட்சியமைக்கும் பிரதான சிங்களக் கட்சிகள் இந்த விடயங்களை வரவுசெலவுத் திட்ட விவாதங்களில் இந்த விடயங்களை வெளிப்படுத்த விரும்புவதில்லை.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டு உதவிகள் கிடைத்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் அதன் முழுமையான விபரங்கள் அதில் இல்லை. 2022 ஆம் ஆண்டுக்கான அரச செலவீனமாக 250534 கோடியே 65 58000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கத்துக்கு மாறாக பாதுகாப்பு அமைச்சை இரண்டு அமைச்சுக்களாகப் பிரித்து 2022 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புச்  செலவீனமாக பாதுகாப்பு அமைச்சுக்கு 37304 கோடியே 5860000 ரூபாவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு 10655 கோடியே 8650000 ரூபாவுமென மொத்தமாக 47960கோடியே 45,10000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதாவது இரண்டரை இலட்சம் கோடியில் அண்ணளவாக 50 இலட்சம் கோடி பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவீனமாக 35515கோடியே 92,50000  ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2021 ஆம் ஆண்டைவிட 2022 ஆம் ஆண்டுக்கு 12444 கோடியே 52,60000 ரூபா அதிகமாக  ஒதுக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்காக சுகாதார அமைச்சுக்கு  15947 கோடியே 59,93000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டுக்காக சுகாதார அமைச்சுக்கு 15352 கோடியே 8998000 ரூபாவே  ஒதுக்கப்பட்டுள்ளது. இது 594 கோடியே 69,95000 ரூபா குறைவானதாகும்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வை முன்வைப்பதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது. ஆனால் கல்வி அமைச்சுக்கு 2021 ஆம் ஆண்டுக்கு 12654 கோடி ரூபாவை ஒதுக்கியிருந்த 2022 ஆம் ஆண்டுக்காக 12760 கோடியே 5000000 ரூபாவையே ஒதுக்கியுள்ளது. அதாவது  110 கோடியே 5000000 ரூபாவையே அதிகமாக ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

அதிபர் ,ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் குறைந்தது 250 கோடி ரூபா தேவையென கல்வி அமைச்சு கடந்தவாரம் கூறியிருந்த நிலையில், குறைந்தளவு நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகேவே கொவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தச் சுகாதாரத்துறையை மேம்படுத்தல், கல்விதுறை ஊக்குவித்தல் என்ற பிரதான திட்டங்கள் எதுவுமேயின்றி பாதுகாப்பு அமைச்சுக்கு மாத்திரம் இவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தமக்காவே தம்முடைய உதவியோடு இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளதென அமெரிக்க இந்திய அரசுகள் நம்பலாம். சீன அரசின் எதிர்பார்ப்பும் அதுதான். ஆனால் சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை வல்லாதிக்க நாடுகளின் போட்டியைப் பயன்படுத்தி முப்படைகளின் தரத்தை மேலும் நவீனமயப்படுத்த வேண்டுமென்பதே பிரதான இலக்கு.

குறிப்பாக வடக்குக் கிழக்கை இராணுவ மயப்படுத்தி அதன் மூலம் சிங்களக் குடியேற்றங்களைச் செய்து சிங்கள மரபுரிமைகளையும் அங்கு செயற்கையாக உருவாக்கி  இன அழிப்புத் திட்டங்களை முன்னெடுக்க நவீனதரத்திலான முப்படை இலங்கைக்கு அவசியமாகின்றது.

வல்லாதிக்க நாடுகளைப் பொறுத்தவரை தமது பூகோள அரசியல். பொருளாதார நலன் அடிப்படையில் நிதியுதவிகளை வழங்கி இலங்கையை உற்சாகப்படுத்துவதன் மூலம் இலங்கைத்தீவில் வாழும் மற்றைய தேசிய இனங்களின் இருப்பு இல்லாதொழிக்கப்படுகின்றது என்பதைத் தெரிந்தும் தெரியாதவர்கள் போன்று செயற்படுகின்றன.

இந்த விடயங்களைத் தமிழ்த்தேசியக் கட்சிகள் விவாதத்தில் விபரமாகக் எடுத்துக் கூறுவதுமில்லை. பாதுகாப்பு அமைச்சுககு ஏன் இவ்வளவு நிதி என்று மாத்திரம் கேட்டுவிட்டு அமைதியாகிவிடுவர். ஏனெனில் அவர்களினால் அமெரிக்க, இந்திய அரசுகளை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது. ஆனால் சீனாவுக்கு எதிராக மாத்திரம் பேசி இந்திய அமெரிக்க அரசுகளின் பாராட்டைப் பெறுகின்றனர்.

இலங்கைக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் வழங்கப்பட்டது. அதனையடுத்து இலங்கை ரூபாயில் 16.5 பில்லியனைச் சீனா வழங்கியிருந்தது. அதன் பின்னர் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்கா வழங்கியது. தூதரகங்களின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல்களைப் பார்த்தால் நிதியுதவிகள் பற்றிய விடயங்களை தெரியும்.

ஓவ்வொரு செலவுத் தலைப்புகளிலும் நிதியுதவிகள் வழங்கப்பட்டாலும். அந்த நிதி உரிய திட்டத்திற்குத்தான் பயன்படுகின்றதா என்பது குறித்து இந்த வல்லாதிக்க நாடுகள் ஆராய்வதாகத் தெரியவில்லை.

கனடாவும் உலக சுகாதார ஸ்தாபனம் மூலமாக இலங்கைக்கு 1.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதாகக் கடந்தவாரம் அறிவித்திருக்கிறது. சுகாதாரத் துறையை மேம்படுத்தும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு நிதியுதவியை வழங்கவுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண சென்ற செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

37.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகவும், 12.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாகவும், மொத்தமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

ஆகவே கடந்த இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட்ட நிதிகளையும் தொடர்ச்சியாக வழங்கப்படவுள்ள நிதிகளையும் வைத்தே பாதுகாப்பு அமைச்சுக்கு இவ்வாறு நிதி ஒதுக்கப்படுகின்றது. புலனாய்வுச் செய்தியிடல் முறை இலங்கையில் உரிய முறையில் இருக்குமானால், வல்லாதிக்க நாடுகள் வழங்கும் நிதியுதவிகளின் விபரங்கள் இன்னும் கூடுதலாகவே கிடைக்கும்.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலிலும் ஈழத்தமிழ் மக்கள் தமது பாரம்பரியக் காணிகளைப் பறிகொடுத்துப் பண்பாட்டு மரபுரிமை அடையாளங்களையும் இழப்பதற்குப் பாதுகாப்பு அமைச்சிற்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படுவதே காரணம். சட்டரீதியான சிங்களக் குடியேற்றத்துக்காகவா இந்த நிதி ஒதுக்கீடு என்று யாரும் கேட்டால் அதனை மறுப்பதற்கில்லை.

இந்தியாவில் வருடத்துக்கு ஆயிரம் சிங்கள இராணுவச் சிப்பாய்களுக்குப் பயிற்சியும் மேலும் 50  இராணுவ அதிகாரிகளுக்குச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பயிற்சியை வழங்கவும் கடந்த மாதம் கொழும்புக்கு வந்த இந்திய ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவணே இணங்கியிருந்தார். அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளும் இலங்கை இராணுவத்துக்கு நவீன ரக ஆயுதங்களை வழங்கிப் பயிற்சியும் கொடுக்கின்றது.

2009 இற்குப் பின்னரான சூழலில் மற்றுமொரு தேசிய இனம் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், சிறிய நாடொன்றில் இராணுவக் கட்டமைப்பு ஏன் நவீனமயப்படுத்தப்படுகின்றது? அதுவும் நிரந்த அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படாதவொரு பின்னணியில்..