செய்திகள்

இனவாதம் என்றால் என்ன? ரணிலுக்கு பாடம் போதித்த விக்னேஸ்வரன்

-விஜயசிங்கம் சிவானந்தராஜா

வடக்கின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடைபெறும் சொற்போர் இப்போது உச்சத்தை அடைந்து, ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது . நாடெங்கில் தமிழர் மத்தியிலும் மற்றும் புலம் பெயர் சமூகத்தின் மத்தியிலும் இந்த செய்தி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கலந்துரையாடப்படுகிறது.

இந்த சச்சரவு வட மாகாண சபை ”இனக்கொலை” தீர்மானத்துடன் ஆரம்பித்தது என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால் இப்படி காரணம் சொல்வது ஒரு பகிடி என உள்வீட்டு உளவு அறிக்கை கூறுகிறது. ஏன் பகிடி என்றால் தீர்மானத்துக்கு முன்னமே புகைச்சல் இருந்து வந்தது. புதிய அரசின் நிர்வாகம் ஆரம்பிக்கப்பட்டதுடன் நடந்த சில சம்பவங்கள் இந்த சண்டைக்கு களம் ஏற்படுத்தின. பின்னர் தான் தீர்மானம் வந்தது. புகைந்து கொண்டிருந்த விடயம் தீர்மானம் வந்ததும் பற்றிக்கொண்டது.

நாட்டின் ஏனைய பிரதேச தமிழர்களுடன் சேர்ந்து வடமாகாண தமிழ் மக்கள் அபரிமிதமாக ஆட்சி மாற்றத்துக்காக அன்னப்பறவை சின்னத்துக்கு வாக்களித்தார்கள். இது மைத்திரிக்கு தெரியும். தோற்றுப்போன மகிந்தவுக்கும் தெரியும்.

இது ஒன்றும் கூட்டமைப்பு சொல்லி அல்ல. மைத்திரி மீது அன்பு கொண்டும் அல்ல. கூட்டமைப்பு சொல்ல முன்னரே மக்கள் மகிந்தவுக்கு எதிராக வாக்களிக்கும் தீர்மானத்துக்கு வந்து விட்டார்கள். கூட்டமைப்பின் தலைமை மற்றும் எம்.பி.க்களின் மீது வாக்களித்த வடமாகாண தமிழ் மக்களுக்கு பெரும் நம்பிக்கை இல்லாவிட்டலும் கூட அந்த அமைப்பு என்ற கவசம் உடையாமல் இருக்க வேண்டும் என்பது மக்களின் திடமான தேவையாக இருக்கிறது.

sumanthiran-sampanthanகூட்டமைப்பின் சில பிரபலங்கள் செய்யும் கூத்துகளை வேறு வழியில்லாமல் சகித்துக் கொள்ளும் வடக்கு தமிழ் மக்கள் கூட்டமைப்பை உடைக்கும் வேலையை உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் செய்ய வெளிக்கிடும் எந்த ஒரு சக்தியையும் சகித்துக் கொள்ள தயார் இல்லை. இதனால்தான் பேசிப் பேசியே நொந்துகொண்டே ஒவ்வொரு தேர்தலிலும் கடைசியில் தமது கவசமாக தாம் நினைக்கும் கூட்டமைப்புக்கே தமிழர்கள் வாக்களித்து தங்களிடம் திட்டு வாங்கிய அதே எம்.பி.க்களையே மீண்டும் மீண்டும் தெரிவு செய்கிறார்கள். வட, கிழக்கு மண்ணிலிருந்து புதிய இளைய பட்டாளம் தலைமைக்கு தயாராகும் வரை இந்தக் கூட்டமைப்பு ”கவசம்” என்ற நிலைமை தொடரும்.

ranil 2நிலைமை இப்படி இருக்க ஆட்சிக்கு வந்த உடனேயே ரணில் விக்கிரமசிங்க இந்த கவசத்தில் கை வைக்க தயாராகின்றாரோ என்ற பலத்த சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் வந்துவிட்டது.  ஏற்கனவே புலிகள் இயக்கத்தை உடைக்க பிள்ளையார் சுழி போட்டவர் ரணில் என்ற ஒரு கருத்து நெடுநாட்களாக தமிழ் மக்கள் மத்தியில் இருகின்றது என்பது ஒரு இரகசியம் அல்ல.

இன்றைய புதிய சந்தேகங்களுக்கு பல காரணங்கள் உள்ளன. யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பிரமுகர்கள் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் நடத்த ஆரம்பித்து இருக்கும் கூத்துகளையும் அதற்கு ரணிலின் அரசாங்கம் தருகின்ற ஒத்துழைப்பையும் கண்டு யாழ். மக்கள் முகம் சுளிக்க தொடங்கிவிட்டார்கள்.

vijayakala-5தாங்கள் எதிர்பார்த்த ஆட்சி மாற்றத்தின் ஆரம்பமாக வட மாகாண சபை சட்டத்தில் இருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்தி பணியாற்றத் தொடங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில் மகிந்த அரசாங்கத்தில் இதற்கு இடம் இருக்க வில்லை. ஆனால், வட மாகாண சபை செய்ய வேண்டிய பணிகளை தானே செய்ய விஜயகலா வெளிக்கிட்டபோது முதன் முரண்பாடு ஏற்பட்டது. மேலும் வட மாகாண சபை முதல்வராக மக்களை ஆணையுடன் பதவி வகிக்கும் விக்னேஸ்வரனை அணுகாமல், அனுமதி பெறாமல் அவரது பெயரை அரசாங்க அலுவலக நிகழ்ச்சி அழைப்பிதழ்களில் பயன்படுத்தி கூட்டம் சேர்க்க ஐ.தே.க.ஆரம்பித்துவிட்டது. இது வடக்கில் ஐ.தே.க.வை கூட்டமைப்புக்கு சமமாக வளர்க்கும் திட்டமா என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது.

Ranil-kilinochchi-1நமது மக்களின் வாக்குகள் மூலம் ஆட்சியையும் பதவிகளையும் பெற்றவர்கள் நமது தலையிலேயே கை வைக்க இடம்கொடுக்க முடியுமா என பல இளம் வட மாகாண சபை உறுப்பினர்கள் மாகாண சபை வளவுக்குள் நின்றபடி ஆவேசப்பட்டதாக கேள்வி.  டக்ளஸ் தேவானந்தாவை வீழ்த்தி விரட்டுவோம் என்ற போர்வையில் கூட்டமைப்பை துணைக்கு அழைக்கும் விஜயகலா உண்மையில் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் கைவைக்கின்றார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எப்போதும் அரசாங்க சலுகைகளை எதிர்பார்த்து ஒரு கூட்டம் எப்போதும் அமைச்சர்களை சுற்றி வரும். இவர்கள்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு வாக்களித்தவர்கள். சுமார் 75,000 வரையிலான இந்த வாக்கு தொகை கூட்டமைப்புக்கு எதிராக விழுந்த வாக்கு. இந்த வாக்கை எப்படியும் பெற்று ஐ.தே.க.வின் செல்வாக்கை வடக்கில் நிலைநிறுத்த வேண்டும் என்பது ரணிலின் கட்டளை.

அதேவேளை இந்த வாக்கு தொகையில் கணிசமானவற்றை தன்வசம் திருப்ப வேண்டும் என்பது கூட்டமைப்பின் தேவை. ஏனெனில் கடந்த முறை ஒன்பதாக இருந்த யாழ். மாவட்ட உறுப்பினர் தொகை இந்த முறை ஏழாக குறைந்துவிட்டது. எனவே கூட்டமைப்புக்கு மேலதிக வாக்குகள் கட்டாயம் தேவை. கடந்த முறை டக்லஸ் தேவானந்தாவுடன் இருந்த போட்டி இந்த முறை ஐ.தே.க.வுடன் ஏற்படும் என்பதில் எந்தளவும் சந்தேகம் இல்லை.

tna_election_002ஆகவே இதற்கு ஒரே வழி மத்திய அரசாங்கத்தில் இடம்பெறாததால் வடமாகாண அரசை பயன்படுத்தித்தான் ‘அரசாங்க உதவிகளை” எதிர்பார்க்கும் வாக்காளர் கூட்டத்தை தன்வசம் வடமாகாணசபை திருப்ப வேண்டும் . அதற்கு ரணிலின் அரசாங்கம் நியாயமாக வட மாகாணசபைக்கு உதவ வேண்டும். இந்த உதவியை எதிர்பார்க்க வட மாகாணசபைக்கு உரிமை இருக்கிறது. ஏனெனில் இன்று ரணிலுக்கு பிரதமர் பதவியை பெற்றுக் கொடுப்பதில் கூட்டமைப்பு தமிழர் வாக்குகள் பெரும் பங்கு வகித்துள்ளன. எனவே வடக்கு மாகாண சபைக்கு உதவாமல் தனது கட்சியை வளர்க்கும் குள்ள நரி வேலையை ரணில் செய்ய வெளிக்கிட்டது இப்போது வடக்கில் வெறுப்பை ஏற்படுத்திவிட்டது. அந்த வெறுப்பு வட மாகாண சபையில் களம் அமைத்துள்ளது.

அடுத்தது கூட்டமைப்பின் உள்ளே இருப்போர் சிலர் ஐ.தே.க. பேச்சாளர்களாக மாறி விட்டார்களோ என்ற சந்தேகமும் இப்போது வலுக்கிறது. ரணிலின் அரசாங்கம் வந்தவுடன் ஆளுனரை மாற்றிவிட்டது. செயலாளரை மாற்றி விட்டது. ஓமந்தை கெடுபிடியை குறைத்துவிட்டது. ஆகவே நாம் கொஞ்சம் அமைதியாக இருப்போம் என்று அரசாங்கத்துக்கு ஆதரவாக கருத்து கூறிய ஒரு கூட்டமைப்பு பிரமுகர், முதல்வர் விக்னேஸ்வரனிடம் பேச்சு வாங்கியதாக கேள்வி.

ஐ.நா. விசாரணை அறிக்கை இப்போது வெளியிடப்பட்டால் அது மகிந்தவுக்கு சாதகமான சூழலை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும் என்பது சின்னக்குழந்தைக்கும் தெரியும். ஆகவே அரசாங்கத்துக்கு ஐ.நா. அறிக்கை தாமதமாக வேண்டும். அதற்கு சர்வதேசம் உடன்படவேண்டும். சர்வதேசம், அதற்கான ஒரு நியாயப்பாட்டை ஏற்படுத்தி காட்டும்படி அரசாங்கத்திடம் சொன்னது. ஆகவே அரசாங்கம், ஆளுநர், செயலாளர் மாற்றம் மற்றும் ஓமந்தை கெடுபிடி தளர்வு போன்ற சில்லறை வேலைகளை செய்துள்ளது.

vikneswaran_mahinda_0051இவற்றை பெரும் சாதனைகள் என்று காட்ட முயலவேண்டாம். வடமாகாணசபை தேர்தலை நடத்த அரசு முன்வந்ததுக்கு காரணம், பொதுநலவாய நாட்டு மாநாடு ஆகும். அது இலங்கையில் நடக்க வேண்டும் என்றால் வடமாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என உலகம் அன்று மகிந்த அரசுக்கு நிபந்தனை போட்டது. இல்லாவிட்டால் மாநாட்டை இரத்துச் செய்வோம் என சொன்னது. மாநாட்டை நடத்தியே ஆகவேண்டிய நிலையில் இருந்த மகிந்த அரசு தேர்தலை நடத்தியது. அது போல்தான் இதுவும்.

இதைக்கூட ரவூப் ஹக்கீம் ஒருமுறை மாற்றிப்போட்டு பேசினார். கிழக்கு மாகாணசபை தேர்தலின் பின்னர் தாம் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சியமைக்காததால்தான் வடக்கில் தேர்தலை அரசு நடத்தியது என்று அவர் சொன்னார். ஆட்சி அமைத்து இருந்தால், அரசு பயந்து போய் வடக்கில் ஒருபோதும் தேர்தலை நடத்தி இருக்காது என அவர் சர்வதேச அழுத்தம் என்ற ஒன்றை மறந்துவிட்டு சிறுபிள்ளைத்தனமாக சொன்னார். அதுபோல்தான் இன்று அரசாங்கம் சுயமாக விரும்பி ஆளுநர், செயலாளர் மாற்றம் மற்றும் ஓமந்தை கெடுபிடி தளர்வு ஆகியவற்றை செய்தது என்பதாகும் என முதல்வர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பு பிரமுகருக்கு ஒரு விரிவுரை நடத்தியதாக கேள்வி.

தமது அறிக்கையை தாமதம் செய்வோம் என்று கூறியதன் மூலம் மாகாண சபையில் தீர்மானம் கொண்டு வந்து, ஐ.நா. அறிக்கை வெளியிட்டு தாமதத்தை தடுக்க முயன்ற விக்னேஸ்வரனுக்கு ஐ.நா. சபை கன்னத்தில் அறைந்து விட்டது என்ற பொருள்பட ரணில் பேசியது முதல்வரை ஆத்திரமூட்டியுள்ளது.

vick 2ஆனால் பிரதமரின் கருத்துக்கு பதிலளித்த முதல்வர் நாகரிகமான வார்த்தைகளைத்தான் பயன்படுத்தியுள்ளார். ”கன்னத்தில் விழுந்த அறை” போன்ற வார்த்தைப் பிரயோகங்களை தவிர்த்து தனக்கு ”வருத்தமளிக்கின்றது” என்ற மாதிரி நாகரிகமாக பதில் கூறியுள்ளார். ஆனால், உண்மைகளை எடுத்துக் கூறுவது இனவாதம் இல்லை என்று ரணிலுக்கு பாடம் நடத்தியுள்ளார். அத்துடன் விடவில்லை. சிங்கள மக்கள் நல்லவர்கள். சிங்கள அரசியல்வாதிகள்தான் அவர்களை தவறாக வழி நடத்துகிறார்கள் என்று கூறி கடந்த காலத்தில் சந்திரிகா பண்டாரநாயக்க கொண்டு வந்த சிறப்பான ஒரு தீர்வுத் திட்டத்தை ரணில் தலைமையில் பாராளுமன்றத்தில் ஐ.தே.க. எம்.பி.க்கள் எரித்த வரலாற்றையும் ஞாபகப்படுத்திவிட்டார்.

விக்னேஸ்வரன் பதவி ஏற்றபின் வெளிநாடு என்று இந்தியா மட்டுமே சென்றார். பிரித்தானிய பிரதமர் அழைப்பு விடுத்தும் அவர் நாட்டை விட்டு நகரவில்லை. இருக்கும் இடத்தில் இருந்துக்கொண்டு தமது மக்கள் எதிர்நோக்கும் உண்மை நிலைவரங்களையும் எதிர்பார்ப்புகளையும் எடுத்து கூறுவதில் அவர் அக்கறை கொண்டுள்ளார் போல் தெரிகிறது. ஆகவே அவரது கருத்துக்கு உலக மன்றத்தில் ஒரு ஏற்புடைமை இருக்கின்றது.

bisbalஐ.நா. அறிக்கை தாமதம் ஆவதை தடுப்பதற்காக நான் மாகாணசபையில் ”இனக்கொலை” தீர்மானத்தை கொண்டு வரவில்லை. அந்த அறிக்கை தாமதம் ஆகப்போவதை முன் கூட்டியே அமெரிக்க துணை செயலாளருடனான சந்திப்பில் நான் தெரிந்துகொண்டேன். ஆகவே தாமதத்தை தடுக்க போய் கன்னத்தில் அடி வாங்கியதாக ரணில் சொல்வது பிழை. உண்மையில் இந்த அறிக்கை வந்திருந்தால் உலகம் உண்மையை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும். தாமதம் காரணமாக அது நடக்கவில்லை. ஆகவே உண்மை என்ன என்பதை உலகத்துக்கும் அரசாங்கத்துக்கும் சிங்கள மக்களுக்கும் ஒருமுறை ஞாபகப்படுத்துவது எங்கள் ஆட்சியில் இருக்கும் ஒரேயொரு மக்கள் சபையான வடமாகணசபையின் கடமை. அதை முன்னெடுப்பது இந்த மாகாண ஆட்சியின் முதல்வரான எனது கடமை என்ற வட மாகாண சபை முதல்வரின் நிலைப்பாட்டை இன்று வட மாகாண சபையை வாக்களித்து உருவாக்கிய தமிழ் மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் தமிழரசு கட்சி பேச்சாளர் சுமந்திரனும் புரிந்து கொண்டுள்ளனரா ?