செய்திகள்

இனி என் பெயர் சிவபாலன் : அப்புக்குட்டி

தேசிய விருது பெற்ற அப்பு குட்டி சமீபத்தில் அவர் இது வரை சினிமாவில் கூட ஏற்றிராத நவ நாகரீக உடைகள் அணிந்து புகை படம் எடுத்துக் கொண்டார்.

அவரது உடைகளோ, நவ நாகரீக தோற்றமோ அவரை உற்சாகமூட்டியதைவிட அந்த புகைப் படங்களை எடுத்தவர்தான் ஆச்சரியப்படுத்தினார். ஆமாம், நடிகர் அஜீத் குமார்தான் அவரை விதவிதமாய் படம் எடுத்த புகை பட நிபுணர்.

இது குறித்து அப்புக்குட்டி கூறுகையில் –

வீரம் படப்பிடிப்பின் போது அஜீத் சார் என்னிடம், தம்பி எல்லா படங்களிலும் ஒரே வித தோற்றத்தில் வருவது உங்களது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். முடிந்த வரை படத்துக்கு படம் தோற்றத்தை மாற்ற பாருங்கள். கிராமிய படங்களைத் தவிர நகரத்தில் நடக்கும் கதைகளிலும் நடிக்கும் வகையில் தோற்றத்தில் மாற்றம் வேண்டும் என வலியுறுத்தினார். என்னை யார் சார் இப்படி எல்லாம் மாத்துவாங்க, யார் சார் படம் பிடிப்பாங்க என்று நானும் கேட்டேன். புன்னகையோடு விடைப் பெற்றவர் சில நாட்களுக்கு முன்னர் என்னை அழைத்து 29 ஆம் தேதி நீங்க ப்ரீயா இருந்தா சொல்லுங்க என்றார். நானும் வரேன்னு சொன்னேன்.

அவர் சொன்ன இடத்துக்கு வந்ததுக்கப்புறம்தான் தெரிஞ்சிது, அவர் என்னை வைத்து புகைப்படம் எடுக்க போறார்னு. அதை விட ஆச்சரியம் என் உருவ அமைப்புக்கு ஏற்ப கச்சிதமாக தைக்கபட்ட உடைகள், உயர்தரமான அணிகலன்கள், சிறந்த ஒப்பனை சாதனங்கள், எனக்காகவே வரவழைக்கபட்ட பிரத்தியேக ஒப்பனையாளர்கள் என பிரமாதப்படுத்தி இருந்தார். ஆச்சரியத்தில் வாயை பிளந்தவன் இன்னும் மூடவே இல்லை.

எனது இயற் பெயரைக் கேட்டுத் தெரிந்துக் கொண்ட அவர் அந்த பெயரான சிவ பாலன் என்றே என்னை அழைத்தார். மற்றவர்களையும் அவ்வாறே அழைக்குமாறு கூறினார். இனிமேல் நானும் எனது பெயரை சிவபாலன் என்கிற அப்புக்குட்டி என்றே அழைக்கப்படுவதை விரும்புகிறேன் எனவும் தெரிவித்தார்.