செய்திகள்

இராணுவச் சிப்பாயைச் சுட்டுக் கொலை செய்த சக சிப்பாய்க்கு மரண தண்டனை

யாழ்.சாவகச்சேரி-கச்சாய்ப் பகுதியில் சக இராணுவச் சிப்பாய் ஒருவரைச் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு நேற்று மரண தண்டணை விதித்துத் தீர்ப்பளித்தார் யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி கனகா சிவபாதசுந்தரம்.

புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த திசாநாயக்க முதியான் சேலாகே பிரியந்த திசநாயக்க என்னும் இராணுவ வீரருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு மே-14 ஆம் திகதி சாவகச்சேரி-கச்சாய்ப் பகுதியின் இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் சுட்டுக் கொல்லப்பட்டார்.அவரைக் கொன்றதாக அதே முகாமைச் சேர்ந்த படைச் சிப்பாய் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

குறித்த வழக்கு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று ஆலோசனைக்காகச் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.விசாரணைகள் முடிவுற்றுத் தீர்ப்பு நேற்று வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குற்றவாளியாகக் காணப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு மரண தண்டனை விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

மேற்படி சம்பவம் தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரி மன்றிற்கு வழங்கிய சாட்சியத்தின் மூலம் எதிரியால் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஏற்படுத்தப்பட்ட காயம் உடனடியாக மரணத்தினை ஏற்படுத்தியுள்ளமை தெட்டத் தெளிவாகப் புலப்படுகின்றது. சம்பவத்தில் கண்ணால் கண்ட சாட்சியங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி எதிரியைக் குற்றவாளியாக நிருபிக்கின்றன.எனவே மன்று எதிரியைக் குற்றவாளியாகக் கருதி மரண தண்டணை விதிக்கப்படுகிறது என நீதவான் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
யாழ்.நகர் நிருபர்-