செய்திகள்

இறால் பண்ணையை இடைநிறுத்தக்கோரி மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முதலைக்குடா மற்றும் மகிழடித்தீவு பகுதியில் இறால்வளர்ப்பு மேற்கொள்ளப்படுவதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவதாகவும் அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியும் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டமும் பேரணியும் இடம்பெற்றது.
பட்டிப்பளை பிரதேசத்தில் உள்ள பொது அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்தது.
இன்று காலை மகிழடித்தீவு சந்தியில் இருந்து பெண்கள்,ஆண்கள் என பெருமளவான பொதுமக்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,பொன்.செல்வராசா,சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்ட பேரணி பட்டிப்பளை பிரதேச செயலகம் வரை சென்றது. மகிழடித்தீவில் இருந்து கொக்கட்டிச்சோலை நகர் ஊடாக சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் நடையாக இந்த பேரணி இடம்பெற்றது.
மகிழடித்தீவு மற்றும் முதலைக்குடா ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணைகளினால் குடி நீர் உவர் நீராக மாற்றமடைந்துவருவதுடன் வேளாண்மை செய்கையாளர்களும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். விவசாயிகளும் கால்நடை வளர்ப்பாளர்களும் அதிகமாகவுள்ள இப்பகுதிகளில் கால்நடைகளை வளர்க்கமுடியாத நிலையேற்பட்டுள்ளதுடன் தமது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த இறால் பண்ணையை மறைந்த அமைச்சர் சாம் தம்பிமுத்து ஆரம்பித்த காலம் தொடக்கம் பிரதேச மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் அவை நிறுத்தப்பட்டிருந்ததாகவும் பின்னர் சிலர் தமது தனிப்பட்ட முறையில் பணம் சம்பாதிப்பதற்காக இதனை பயன்படுத்திவருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த இறால் பண்ணை செயற்படுவதன் காரணமாக மகிழடித்தீவு, முதலைக்குடா, தாழையடித்தெரு,பண்டாரியாவெளி,படையாண்டவெளி மக்கள் குடிபெயருக்கு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆர்ப்பாட்டப்பேரணியானது பட்டிப்பளை பிரதேச செயலகத்தினை சென்றடைந்ததும் அங்கு பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயத்திடம் குறித்த இறால் பண்ணையை மூடுமாறு கோரும் மகஜர் கையளிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் மகஜர் கையளிக்கப்பட்டது.
மக்களின் இந்த கோரிக்கை நியாயமானது என தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க உரியவர்கள் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இங்கு கோரிக்கை விடுத்தார்.
IMG_0016 IMG_0035 IMG_0041 IMG_0057 IMG_0086 IMG_0090 IMG_0092