செய்திகள்

இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம்

இங்கிலாந்தின் குரோமர் பகுதியிலுள்ள இலங்கைப் பெண் ஒருவர் தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாமென உள்துறை அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாக ஈஸ்டன் டெய்லி பிரஸ் தெரிவித்திருக்கிறது.

இலங்கையில் பாதுகாப்புப் படைகளினால் சிகரெட்டுகளினால் தான் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகவும் அப் பெண் தெரிவித்துள்ளார். அதேவேளை படையினரிடமிருந்து தான் தப்பியோடி வந்ததாகவும் சுடப்பட்டும் காயமடைந்துமிருந்த நிலையில் 1998 இல் தான் குரோமருக்கு வந்ததாக அப் பெண்ணின் கணவர் தெரிவித்தருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் அண்மையிலேயே இணைந்திருந்தார். பேர்மிங்ஹாமிலுள்ள புகலிடம் கோரும் விவகாரத்தை கையாளும் நீதிமன்றத்தில் இந்த ஜோடியின் பின்னணி குறித்து வெளியிடப்பட்டது.

புகலிடம் கோரும் அந்தப் பெண்ணின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பின்னர் அவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான தீர்மானத்திற்கு எதிராக அப்பெண் மேன்முறையீடு செய்திருந்தார். அப் பெண் நம்ப முடியாத விதத்தில் தனது வங்கிக் கணக்குகள் வேலை வாய்ப்பு பற்றி தெரிவித்ததாகவும் அதனால் அப் பெண்ணின் விண்ணப்பத்தைத் தாங்கள் நிராகரித்திருந்ததாகவும் உள்துறை அலுவலகத்தை பிரதிநிதித்துவபடுத்தும் ஜோன் ஸ்மித் என்ற அதிகாரி கூறியுள்ளார். ஆனால் இதனை அந்தப் பெண் மறுத்திருக்கிறார். இலங்கையில் பாதுகாப்புப் படையினரால் தான் பிடித்து வைக்கப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாவும் சிகரெட்டுகளினால் தனது உடல் சுடப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் அப் பெண் தெரிவித்திருந்தார்.

அந்தப் பெண் கணவரிடமிருந்து பிரிக்கப்பட்டு இலங்கைக்குத்திருப்பி அனுப்பப்பட்டால் தற்கொலை செய்யக் கூடுமென்று அவரின் சார்பில் ஆஜரான எம்மா ருத்தல் பேர்ட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தான் நீரிழிவு நோயாளி எனவும் மனைவியே தனக்கு சமைத்துத் தருவதுடன் தன்னைக் கவனிப்பதாகவும் அவரின் கணவர் தெரிவித்திருக்கிறார். பிறிதொரு திகதியில் தனது தீர்ப்பை வழங்குவதாக நீதிபதி ஜோர்ஜ் பேக்குஸன் தெரிவித்திருக்கிறார்.