செய்திகள்

இலங்கையரை கடத்தி பெருந்தொகை பணம் கோரும் கடத்தல்காரர்கள்

நைஜீரியாவின் ஒன்டோ மற்றும் கோகி எல்லைப் பகுதியில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட இலங்கையரை விடுவிக்க பெரும் தொகை பணம் கோரப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடத்தப்பட்டவர் நைஜீரியாவின் இலங்கை தூதரகத்தில் கடமையாற்றும் கருணாரத்ன எனும் ஊழியர் எனவும், இத்தாலிய நிறுவனம் ஒன்றுக்கான கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இவர் நைஜீரியாவில் தங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை கடத்தல் சம்பவம் இடம்பெற்ற வேளை, அவருக்கு பாதுகாப்புக்காக சென்ற பொலிஸ்காரர் ஒருவர் துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அத்துடன் அவர் பயணித்த வாகனத்தின் சாரதியும் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

மேலும் கடத்தல்காரர்கள் கருணாரத்னவை விடுவிக்க பெரும் தொகை பணம் கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளபோதும், எவ்வளவு கோரப்பட்டது என்பது குறித்து அதிகாரிகளால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்தநிலையில் கடத்தல்காரர்கள், கருணாரட்னவின் குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு அவரை விடுவிக்க பணம் கேரியதாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.