செய்திகள்

இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் மோசமான ஒப்பந்தங்களை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுவந்துள்ளது – மைக் பொம்பியோ பகிரங்க குற்றச் சாட்டு

சீனா இலங்கைக்கு மோசமான உடன்படிக்கைகளையும் சட்டமின்மையையும் கொண்டுவந்துள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த பின்னர் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.சீனாவே இலங்கையின் இறையாண்மையை மீறும் வகையில் நிலம் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளை ஆக்கிரமிப்பதற்காக மோசமான ஒப்பந்தங்களை மேற்கொண்டதாக மைக் பொம்பியோ கூறினார்.ஆனால் அமெரிக்கா உறவுகளை வலுப்படுத்தவும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவினை வளர்க்கவும் அபிவிருத்தி குறித்த நோக்குடனும் செயற்படுவதாகவும் மைக் பொம்பியோ குற்றம்சாட்டினார்.

நாங்கள்மோசமான உடன்படிக்கைகளை இறைமை மீறல்களை கடலிலும் தரையிலும் சட்டமீறல்களை பார்க்கின்றோம்,என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ சீன கம்யுனிஸ்ட் கட்சி பிறரை வேட்டையாடும் தன்மை கொண்டது எனவும் தெரிவித்துள்ளார்.நாங்கள் வித்தியாசமான வேறுவிதத்தில் வருகி;ன்றோம், நண்பர்களாக சகாக்களாக வருகின்றோம் எனவும் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.ஜனநாயகத்தை மதிக்கும் ஒரு நாடு என்ற வகையில், எங்களுக்கும் அதே பார்வை இருக்கிறது என்றும் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கை மக்கள் வெற்றி பெறுவதையும், இறையாண்மையையும் சுதந்திரத்தையும் அனுபவித்து, நிலையான வளர்ச்சியை அடைவதே அமெரிக்காவின் இலட்சியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இருப்பினும் தொடர்ந்து கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இலங்கை நடுநிலையாக செயற்படும் ஒரு நாடு என்பதனால் அமெரிக்கா உட்பட அனைத்து நட்பு நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படும் என குறிப்பிட்டார்.இந்நிலையில் இறையாண்மையை பாதிக்கும் வகையில் மோசமான ஒப்பந்தங்களை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுவந்துள்ளது என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.(15)