செய்திகள்

இலங்கையின் உள்ளுர் பொறிமுறையை ஐ.நா. உன்னிப்பாக அவதானிக்கும்: ஐ.நா. பேச்சாளர்

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவது தொடர்பான இலங்கை அரசாங்கம் அமைக்கப்போகும் உள்ளுர் பொறிமுறையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயட் அல் ஹ¥சைனுடன் இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கி செயற்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூன் வலியுறுத்தியிருப்பதாக அவருடைய பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறியுள்ளார்.

இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை ஆறு மாதங்கள் பிற்போடுவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைத்துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய நிர்வாகம் பொறுப்புக்கூறும் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான உள்நாட்டுப் பொறிமுறையொன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளமை குறித்து ஐ.நா செயலாளர் அறிந்த விடம் இந்தப் பொறிமுறையை செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை உன்னிப்பாக அவதானிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மனித உரிமை, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதல் போன்றவற்றை உறுதிப்படுத்துவதன் அவசியத்தை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடனான சந்திப்பில் பான்கீ மூன் வலியுறுத்தியிருந்ததாக அவருடைய பிரதிப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் யுத்தத்துக்குப் பின்னரான செயற்பாடுகளைப் போன்று பொறுபுக்கூறும் விடயத்திலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். இதன் மூலமே நாட்டில் ஜனாநயகம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்த முடியும். இலங்கையின் யுத்தத்துக்குப் பின்னரான செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறித்து செயலாளர் நாயகம் அறிந்திருப்பதாகவும், புதிய அரசாங்கத்துடன் சாதகமான முறையில் ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.