செய்திகள்

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே: வடமாகாண சபை தீர்மானம்

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே எனக்கூறும் தீர்மானம் வடமாகாண சபையில் இன்று நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

ஆளும் கட்சிகளுடன் இணைந்து எதிர்கட்சியினரும் இந்த தீர்மானத்திற்கான ஆதரவை வழங்கியுள்ளனர். “தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையில் இருந்து பாதுகாக்க சர்வதேச பொறிமுறை ஏற்படுத்துமாறு வேண்டுகோள்” என்ற தலைப்பில் கடந்த ஆண்டு மாகாண சபையில் பிரேரணை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த பிரேரணை வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் விசேட அறிக்கையும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு அதற்கு ஆதாரமான நீண்ட உரையை ஆங்கிலத்தில் வழங்கி முன்மொழியப்பட்டது.

அதனைதொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 30 பேரும் எழுந்து நின்று வழிமொழிந்தனர். முதலமைச்சர் தனது உரையில் நடந்ததது இன அழிப்பு என்பதற்கான ஆதாரங்களை உள்ளடக்கியிருந்தார்.